About Me

Monday, June 27, 2011

டி.வி.டி, சி.டிக்கள் மூலம் பாடங்கள் கற்பித்தல்: எஜூசாட் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவு

பள்ளிகளில் டி.வி.டி, சி.டிக்கள் மூலம் பாடங்களை கற்பிக்கவும், நாடகம், வில்லுப் பாட்டுகள் நடத்தவும் எஜூசாட் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. 


தமிழகத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. பிற வகுப்புகளில் எந்த பாடத் திட்டம் என்பது தொடர்பாக குழப்பம் நீடிப்பதால் பாட புத்தகங்கள் இல்லாமலேயே வகுப்புகள் நடந்து வருகிறது. எனினும், குழந்தை மைய இணைப்பு பயிற்சி மூலம் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அட்டவணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள், ஆசிரியர்கள் விபரம், கால அட்டவணை, டி.வி சி.டிக்கள் உட்பட பல்வேறு வசதிகள் குறித்து பள்ளி பார்வையும் நடத்தப்பட்டு இதற்கான அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குழந்தை மைய இணைப்பு பயிற்சி தொடர்பாக எஜூசாட் மூலம் வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை நேற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. இதனை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் நடத்தினார்.
 
இதில் குழந்தை மைய இணைப்பு பயிற்சி, கால அட்டவணை தவிர பிற வசதிகளை பயன்படுத்தி பள்ளிகளில் வகுப்புகளை நடத்த அறிவுரை வழங்கப்பட்டது. புத்தக பூங்கொத்து திட்டத்தின் கீழ் அனைத்து பாடங்களுக்கும் வழங்கப்பட்ட புத்தகங்கள் மூலம் வினாடி வினா, கதை கூறுதல், விவாதம் நடத்துதல், குழு விவாதம், நாடகம், வில்லுப்பாட்டு, தானே கற்றல் கணித உபகரண பெட்டி பயன்படுத்தி கணித பாட அடிப்படை செயல்பாடுகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

பள்ளிகளில் டிவி, டி.வி.டி பிளேயர், சி.டிக்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் பயன்படுத்தி "ஹலோ இங்கிலீஷ்', சிம்பிள் இங்கிலீஷ், பன் வித் இங்கிலீஷ் போன்ற கேசட்கள் மூலம் ஆங்கில பாடம் கற்பிக்க வேண்டும், கம்ப்யூட்டர வழி கல்வியை தீவிரப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


மேலும், மாணவர்களை அருகில் உள்ள இடங்களுக்கு கள ஆய்வு அழைத்து சென்று வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்து செல்லுதல், போஸ்ட் ஆபீஸ் மற்றும் பிற அலுவலகங்களுக்கு அழைத்து சென்று செயல்பாடுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டது. எழுத்து பயிற்சி, பேச்சு பயிற்சி, வாசிப்பு பயிற்சியை மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. 

இப்பணிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு ஆய்வு சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

நன்றி


No comments: