About Me

Wednesday, July 6, 2011

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பயிற்சி

மதுரை:பாடப்புத்தகம் இல்லாத நிலையில் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முக்கியத்துவம் தந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.சமச்சீர் கல்வி பிரச்னை கோர்ட்டில் உள்ளதால், புதிய கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு "பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற பெயரில் வாழ்வியல் நடைமுறை தொடர்பான விஷயங்களை கற்பிக்கின்றனர். வங்கிகள், மார்க்கெட், சுற்றுலா தலங்கள், மியூசியம் செல்கின்றனர். மதுரை கல்வி மாவட்ட அலுவலர் சுவாமிநாதன் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமி சேவை நிறுவனம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ்நாடார் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலச்சந்திரன்தலைமையில் மாணவர்களுக்கு அகாடமி பொறுப்பாளர் நரசிம்மணி பயிற்சி அளித்தார். பயிற்சியில் அவர் கூறியதாவது: சாலை விதியில், போலீசாரின் சிக்னல்கள் 10, டிராபிக் சிக்னல்கள் மொத்தம் 99 உள்ளன. இதில் வட்ட வடிவில் உள்ள உத்தரவு (உதாரணம்: இடது, வலது திரும்பு) சிக்னல்களின் எண்ணிக்கை 37.

முக்கோண வடிவில் உள்ள எச்சரிக்கை (உம்: குறுகிய வளைவு, சந்திப்பு உள்ளது) சிக்னல்கள் எண்ணிக்கை 40. சதுர வடிவில் உள்ள தகவல் (உம்: ஆஸ்பத்திரி, பெட்ரோல் பங்க்) சிக்னல்கள் 22. இவற்றை மாணவர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். தேர்வில் தோல்வி அடைந்தால் தந்தை கண்டிப்பதை போல, சாலை விதிகள் தெரியாத தந்தையரை மாணவர்கள் கண்டிக்க வேண்டும். அதிக மாணவரை ஏற்றிச் செல்லும் ஆட்டோவில் பள்ளிக்குச் செல்ல மாட்டேன். ஹெல்மெட் அணியாத தந்தையுடன் பைக்கில் பயணிக்க மாட்டேன், என கூற வேண்டும், என்றார். மேலும் சாலை விபத்துக்கள் நடைபெறும் விதம், அவற்றை தவிர்க்கும் முறைகள் குறித்து விளக்கிக் கூறினார். இதேபோல கல்வி மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் பயிற்சி அளிக்கும்படி கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

No comments: