About Me

Tuesday, August 23, 2011

14,377 ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமனம் : பள்ளிக்கல்வி அமைச்சர் சண்முகம் அறிவிப்பு

"பட்டதாரி ஆசிரியர்கள் 5,790 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,682 பேர் உட்பட இந்த ஆண்டு 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என, பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். 

பள்ளிக் கல்வித் துறையில் இந்த ஆண்டு நிறைவேற்ற உள்ள திட்டங்கள் பற்றி அமைச்சர் சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்
  • முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,682 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 5,790 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 4,342 பேர், சிறப்பாசிரியர்கள் 1,538 பேர், வேளாண் பயிற்றுனர்கள் 25 பேர் என, மொத்தம் 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
  • மாவட்ட நூலகங்களில் காலியாக உள்ள 1,353 பணியிடங்கள் நிரப்பப்படும். இதில், நூலகர் 3ம் நிலை பணியிடங்கள் 260, ஊரக நூலகர் 1,093 பணியிடங்கள் இடம்பெறும். 
  • தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 6,7, 8ம் வகுப்புகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிக்க, இந்த கல்வியாண்டில், 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்படும்.
  • ஆசிரியர் பணியிடங்கள் தவிர, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 34 பேர், முதுநிலை விரிவுரையாளர் (மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்) 34 பேர் என 68 பணியிடங்கள் அனுமதிக்கப்படும். 
  • அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள, 344 பள்ளிகளுக்கு தலா ஒரு இளநிலை உதவியாளர்களும், 544 பள்ளிகளுக்கு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் பாடத்திறனை மேம்படுத்த, 544 ஆய்வக உதவியாளர்களும் என, 888 ஆசிரியரல்லாத பணியிடங்கள் அனுமதிக்கப்படும்.
  • பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்ற பணியாளர்களுக்கு 2 சதவீத பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல, அமைச்சுப் பணியாளர்களில் முதுகலை ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு, பணிமாறுதல் மூலம், 2 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்படும். 
  • நபார்டு திட்டத்தின் கீழ், 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 260 கோடி ரூபாய் செலவில் அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்களாகவும் மார்ச், ஏப்ரல் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, தேர்ச்சி பெறாத அனைத்துப் பாடங்களிலும் அந்த கல்வியாண்டிலேயே, ஜூன் அல்லது ஜூலை மாதத்தில், சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு எழுத அனுமதித்து, வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • ஸ்மார்ட் கார்டில் ஒவ்வொரு மாணவரின் பெயர், பெற்றோர், முகவரி, பெற்றோர் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இதன்மூலம், மாணவர்கள் குடும்பச் சூழ்நிலையால் இடம்பெயர நேரும் போது, இதில் பதிவு செய்துள்ள விவரங்களின் அடிப்படையில், எந்த பள்ளியிலும் சேர முடியும். மேலும், மாணவர்களின் இடைநிற்றல் துல்லியமாக கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்க வழிவகை செய்யப்படும்.
  • ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் கற்றல், கற்பித்தல் மிக சிறப்பாக அமையும். வகுப்பறை முழுவதும் கணினி முறையில் பயன்பெறும். முதல்கட்டமாக, ஐந்து அரசுப் பள்ளிகளில் 1.25 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்படும். 
  • தற்போதுள்ள கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிய, ஒரு வல்லுனர் குழு அமைக்கப்படும். 
  • பள்ளி செல்லாத குழந்தைகளுக்காக நடத்தப்படும் சமூகநல பாதுகாப்பு சிறார் பள்ளி, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நலப்பள்ளி போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், பிற மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித் தொகை போன்ற அரசு சலுகைகள் வழங்கப்படும்.
  • அனைத்து ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தப்படும். 
  • ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, அரசு மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமமாக தரம் உயர்த்த முதல்வர் அனுமதித்துள்ளார். 
  • கல்வி தகவல் மேலாண்மை முறையில், பள்ளிகளின் அமைப்பு, அமைவிடம், கட்டட வசதி போன்றவை பதிவு செய்யப்படும். மேலும், அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் பெயர், பணி, பணியில் சேர்ந்த நாள், வயது, ஓய்வுபெறும் நாள் போன்ற எல்லா விவரங்களும் முழுமையாக பதிவு செய்யப்படும்.
நன்றி


No comments: