About Me

Wednesday, August 24, 2011

ஜெயலலிதாவின் 3வது ஆட்சி- 100 நாட்களை கடந்தார்!

சென்னை: 3வது முறையாக முதல்வராகியுள்ள ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி, நேற்றுடன் தனது 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. சமச்சீர் கல்வி விஷயத்தில் கிடைத்த தோல்வி தவிர மற்ற அனைத்திலும் ஓரளவுக்கு வெற்றிகளுடன் இந்த 100 நாட்களைக் கடந்துள்ளது இந்த ஆட்சி.

சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது அதிமுக. இதையடுத்து மே 16ம் தேதி அவர் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். அதன் பின்னர் தமிழகம் முழுவதும் ஏகப்பட்ட மாற்றங்கள்.

ஒடுங்கிப் போன ரவுடியிசம்

ஓவர்நைட்டில் அத்தனையும் மாறிப் போனது. அட்டகாசம் செய்து வந்து ரவுடிகள், சமூக விரோதிகள், கட்டப் பஞ்சாயத்துக் கும்பல்கள், அரசியல் ரவுடிகள் என அத்தனை பேரும் கப்சிப் என அடங்கிப் போயினர்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் காவல்துறைக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்து முடுக்கி விட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் தற்போது தமிழகத்தில் குவிந்து வருகின்றன. ஏராளமானோர் கைது செய்யபப்ட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரம்

கடந்த 100 நாட்களில் ஜெயலலிதா அரசு மிகப் பெரிய அளவிலான சாதனை எதையும் புரியவில்லை என்ற போதிலும், தான் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், அதற்கான நிதியாதாரங்களைத் திரட்டுவதிலும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீராக்க முனைப்புடன் செயல்படுவதிலும், மின்பற்றாக்குறையைக் குறைப்பதிலும் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். எனவே அவரது ஆட்சியின் மகத்தான சாதனைகள் என்பது இனிமேல்தான் வரும் வாய்ப்பு உள்ளது.

ஈழத் தமிழர்களுக்குத் தீவிர ஆதரவு

இருப்பினும் இலங்கைத் தமிழர்களை கொன்றழித்த சிங்கள இனவாத அரசு மீ்து கடும் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றியது உண்மையிலேயே மிகப் பெரிய விஷயம். இந்த தீர்மானத்தால் இன்று இலங்கை அரசு பெரும் பீதிக்குள்ளாகியுள்ளது என்பது உண்மை.

மேலும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முன்பை விட தற்போது வலுவாக குரல் கொடுத்து வருகிறார் ஜெயலலிதா.

தமிழகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மோசமாக உள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார். கடந்த திமுக ஆட்சியின்போது இவை சீர்குலைக்கப்பட்டதாக கூறியுள்ள அவர் அவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பிரமாண்ட அறிவிப்புகள்

அதேபோல கடந்த 100 நாட்களில் ஜெயலலிதா வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளில் முக்கியமானது புதிய தலைமைச் செயலக கட்டடத்தை பிரமாண்ட அரசு மருத்துவமனையாக்கப் போவது என்பது. இந்த வளாகத்தில் ஒரு பகுதியை அரசு மருத்துவமனையாகவும், இன்னொரு பகுதியை மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றவுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கு பெருவாரியான தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா அரசின் முதல் 100 நாட்களில் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவது சமச்சீர் கல்வித் திட்டத்தில் அரசு மேற்கொண்ட அணுகுமுறைதான். ஆட்சிக்கு வந்ததுமே கரும் புள்ளி போல இந்த விவகாரம் அரசுக்கு அமைந்து விட்டது. பிடிவாதப் போக்கால் உச்சநீதிமன்றம் வரை அரசு சென்று தோல்வியுடன் திரும்பியதுதான் மிச்சமானது. இருப்பினும் இப்போது சகஜ நிலை திரும்பி விட்டது.

தனது ஆட்சியின் 100 நாள் நிறைவு நாளான நேற்று மிக முக்கியஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் ஜெயலலிதா. அது. தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் சித்திரைக்கு மாறுகிறது என்ற அறிவிப்பு. கடந்த திமுகஆட்சியின்போது சித்திரைப் பிறப்பு தமிழ்ப் புத்தாண்டு என்ற நிலையை மாற்றி, தை முதல் தேதிக்கு புத்தாண்டை மாற்றினர். தற்போது அது மீண்டும் சித்திரைக்கேத் திரும்பியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் முதல் 100 நாட்களில் மக்களிடமிருந்து பெரிய அளவில் குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பது முக்கியமானது. சமச்சீர்கல்வித் திட்டம் தொடர்பான அதிருப்தியைத் தவிர முதல்வர் ஜெயலலிதாவும், அவரது அரசும் வேறு எந்த அதிருப்தியையும் இதுவரை சம்பாதிக்கவில்லை.

மக்களைக் கவர்ந்த எளிமை

அதை விட முக்கியமாக ஜெயலலிதாவின் அமைச்சர்கள் படு சுறுசுறுப்பாக வேலை பார்க்கிறார்கள், அரசு விழாக்கள் படு எளிமையாக நடக்கின்றன. இவையெல்லாம் மக்களைக் கவர்ந்துள்ளன.

சட்டம் ஒழுங்கு நிலை பொதுவாக சீராகவே உள்ளது என்றபோதிலும், சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. குறிப்பாக சென்னையில் பட்டப் பகலிலேயே சங்கிலிப் பறிப்பில் ஈடுபடுவோர் அதிகரித்துள்ளனர். இதை அடியோடு ஒழிக்க முதல்வர் ஜெயலலிதாவின் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

சமச்சீர் கல்வி-கோர்ட்டு கொடுத்து குட்டு:

அதே நேரத்தில் மிகச் சிறந்த கல்வித் திட்டமான சமச்சீர் கல்வியை திமுக கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்துக்காக ஒழிக்கத் திட்டமிட்ட ஜெயலலிதாவுக்கு நீதிமன்றங்கள் பிரேக் போட்டன. இதனால் தனியார் கல்வி வியாபாரிகளின் சதியையும் மீறி சமச்சீர் கல்விக்கு வெற்றி கிடைத்தது. இந்த 100 நாட்களில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த பெரிய தோல்வி இது தான்.

அதேபோல தனியார் பள்ளிகள் விவகாரத்தில் தற்போது முதல்வர் நீக்குப் போக்காக நடந்து கொள்வதாக ஒரு குமுறல் உள்ளது. இதையும் முதல்வர் சரி செய்ய வேண்டும். கட்டணக் கொள்ளை நடத்தும் பள்ளிகள் மீது இரும்புக் கரம் கொண்டு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முதல் 100 நாட்களை பெரிய அளவில் பிரச்சினை இன்றி முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுக அரசும் கடந்துள்ளது. இனி வரும் நாட்களில் மக்களின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்று எதிர்பார்ப்போம்.

No comments: