About Me

Saturday, August 27, 2011

உடுமலையில் 46 ஆண்டுகளாக செயல்படும் "பள்ளி பார்லிமென்ட்'

உடுமலை : உடுமலை அருகேயுள்ள பள்ளியில், 46 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி பார்லிமென்ட் நடைபெற்று வருவதை கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமின்றி மற்ற துறை அதிகாரிகளும் பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை அருகே கணபதிபாளையத்தில், அரசு உதவி பெறும் சீனிவாச வித்யாலய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 1965ம் ஆண்டு தற்போதைய பள்ளிச் செயலரும், அப்போதைய தலைமையாசிரியருமான பங்காருசாமியினால் பள்ளியின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மாணவர்களை கொண்ட "பள்ளி பார்லிமென்ட்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பள்ளி துவங்கும் ஜூன் மாதத்தில், மாணவர்களால், முதன்மை அமைச்சர் தேர்வு முறையான தேர்தல் மூலம் நடைபெறும். முதன்மை அமைச்சர் உணவு,ஒழுங்கு, கலை, சுகாதாரம், வேளாண்மை, விளையாட்டு என ஆறு அமைச்சர்களை நியமனம் செய்கிறார். பார்லிமென்ட் செயலாளர் ஒருவரும்; இணை அமைச்சரும் நியமிக்கப்படுகிறார். அமைச்சர்களுக்கான "பேட்ஜ்' பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் உறுப்பினர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. அமைச்சர்களின் செயல்பாடுகள், குறைகள் குறித்து கேட்டறியும் வகையில், மாதம்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் நடைபெறுகிறது. பார்லிமென்ட் அவைத்தலைவராக மாதம்தோறும் பள்ளியிலுள்ள ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும். பார்லிமென்ட் போன்று வழி மொழிதல், துறை ரீதியான அறிக்கை வாசித்தல் என விவாதங்கள் நடைபெறுகிறது. குறைகளை சுட்டிக்காட்டும் உறுப்பினர்களுக்கு பதில் அளிக்கும் அமைச்சர்கள் என காரசார விவாதங்களும் நடைபெறுகிறது.ஆண்டு கடைசியில் பள்ளியில் அமைச்சர்களாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. இது போன்று, 46 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியில் தொடர்ந்து பள்ளி பார்லிமென்ட் கூட்டம் நடைபெறுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி தூய்மை, பார்லிமென்ட் கூட்டம் போன்றவைக்காக சிறந்த பள்ளியாக 2004ம் ஆண்டு இப்பள்ளி விருது பெற்றுள்ளது. இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர் சம்பத் கூறுகையில், "பள்ளியில், பார்லிமென்ட் 1965ம் ஆண்டு துவங்கி இதுவரை நடைபெற்று வருகிறது. 46 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடத்த மாணவர்களின் ஒத்துழைப்பே காரணமாக உள்ளது. இப்பள்ளியில் நானும் படிக்கும் போது, அமைச்சராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. கல்வியுடன் ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட நற்பண்புகளை வளர்க்க இதுபோன்று பார்லிமென்ட் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது,' என்றார்.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: