About Me

Tuesday, August 16, 2011

கோவையில் 77 ஆண்டுக்கு முன்பு காந்தி நட்ட மரத்துக்கு மரியாதை

கோவை : கோவையில் 77 ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மா காந்தி நட்ட நாவல் மரத்துக்கு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று மரியாதை செய்யப்பட்டது. சுதந்திர போராட்டத்தின் போது 1934ல் காந்தி, மதுரை வழியாக கோவை வந்தார். காந்தியை சுதந்திர போராட்ட வீரர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், அப்போதைய ஜமீன்தார்கள் வரவேற்றனர். இவர்களில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜமீன்தார், காந்தியை தனது அரண்மனைக்கு அழைத்து வந்தார். அப்போது தனது ஞாபகார்த்தமாக ஜமீன் பகுதியில் நாவல் மரங்கன்று நட்டார். பாதுகாப்பாக பராமரிக்கப்பட்ட அம்மரம் தற்போது வளர்ந்து, கூட்டுறவு விற்பனைக்குழு வளாகத்தில் மிகப்பழமையான, வயதான மரம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. சுதந்திரம் பெற்ற பின், ஒவ்வொரு ஆண்டும் காந்தியின் நினைவாக, பெற்ற சுதந்திரத்தைப் போற்றும் வகையில் மரத்தின் இரு பகுதியிலும் தேசிய கொடி நட்டு, மலர் தூவி மரியாதை செய்யப்படுகிறது. இப்பணியில், காந்தியவாதிகள் சிலர் தவிர, ஆண்டு தோறும் விற்பனைக்குழு அதிகாரிகள், ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் கொடியேற்றும் போது, நாவல் மரத்துக்கும் மரியாதை செய்து வருகின்றனர். நேற்று நாட்டின் 65வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது, காந்தி நட்ட நாவல் மரத்துக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மரியாதை செய்து வணங்கினர். காந்தியும், அன்றைய ஜமீன்தாரும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ, விற்பனைக்குழு அதிகாரியின் அறையின் சுவறை அலங்கரித்துக் கொண்டுள்ளது. தேச சுதந்திரத்துக்காக பாடுபட்ட காந்தி நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் நட்டு வைத்த நாவல் மரம் கடந்த 77 ஆண்டு உயிராக நம்முடன் இருக்கிறது. காந்தியுடன் இந்த இடத்தின் ஜமீன்தாரர் எடுத்து கொண்ட புகைப்படம், இந்த அலுவலகத்தில் இருப்பதால், சத்தியவாதி காந்தி நம்மிடையே இருக்கிறார் என்ற நினைப்பில் நேர்மையுடன் பணியாற்றுவதாக இங்குள்ள அதிகாரிகள், ஊழியர்கள் தெரிவித்தனர்.   
thanks to

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: