About Me

Friday, August 5, 2011

சர்க்கரை நோய் பாதிப்பால் பார்வை பறிபோன பிறகும் பாடம் நடத்தும் ஆசிரியர்


நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே அரசு பள்ளியில், பார்வை பறிபோன பிறகும் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்துகிறார். இவரிடம் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் அசத்துகின்றனர். நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் எம்.ஜார்ஜ் (54). சர்க்கரை நோயின் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு பார்வை பறிபோனது. பல மருத்துவர்களை நாடியும் பலன் இல்லை. பார்வையிழந்தபோதும் ஆசிரியர் பணி வேண்டாம் என்று இவர் ஒதுங்கிவிடவில்லை. 5ம் வகுப்பில் படிக்கும் 30 மாணவ, மாணவிகளுக்கும் வழக்கம் போல பாடம் நடத்தி வருகிறார்.

தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை ஜார்ஜ் நடத்துகிறார். கணித பாடம் மட்டும் பள்ளி தலைமை ஆசிரியை ரமேஷ்குமாரி நடத்துகிறார். இவரிடம் பயிலும் மாணவ, மாணவியரின் ஆங்கில உச்சரிப்பு, இலக்கண திறமை போன்றவை இதர மாணவ, மாணவியரைவிடவும் சிறப்பாக உள்ளது என்கின்றனர் சக ஆசிரியர்கள். ஜார்ஜ், பாடம் நடத்தும் முறையே தனி. ஆங்கிலம் நன்றாக படிக்கத்தெரிந்த மாணவன் அல்லது மாணவியை பெயர் சொல்லி அழைத்து முதலில் பாடங்களை வாசிக்க சொல்லி கேட்கிறார். வாசித்து முடித்த உடன் அதில் உள்ள விஷயங்களை சொல்லி வகுப்புகளை நடத்துகிறார்.

அவரே தானாக கரும்பலகையில் எழுதுகிறார். அவற்றை மாணவ, மாணவியரை வாசிக்க சொல்கிறார். பின்னர் அவற்றுக்கு பொருள் சொல்லி விளக்குகிறார்.
இப்போது சமச்சீர் கல்வி பிரச்னையால், மாணவர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் நடத்துகிறார். 12ம் வகுப்பு மாணவ, மாணவியர் அறிந்திருக்க வேண்டிய ஆங்கில இலக்கண விஷயங்கள் இம்மாணவர்களுக்கு தெரிகிறது. இதுகுறித்து ஆசிரியர் ஜார்ஜ் கூறியதாவது:

கடந்த 24 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியர் பணி செய்து வருகிறேன். அரசு நடுநிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக முதலில் மேட்டூரில் பணியில் சேர்ந்தேன். கொல்லங்கோடு அருகே போராங்கோடு அரசு நடுநிலை பள்ளியில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக முதலில் வெள்ளெழுத்து ஏற்பட துவங்கியது.

பார்வை நரம்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பார்வையை மீளச்செய்வது கடினம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் நாகர்கோவிலில் இருந்து கொல்லங்கோடு வரை பஸ்சில் சென்றுவருவது கடினம் என்பதால் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாக கல்வித்துறையிடம் கேட்டு அனுமதி பெற்று இங்கு பாடம் நடத்தி வருகிறேன். பாட திட்டம் மாறினாலும் என்னால் பாடம் நடத்த இயலும். இவ்வாறு தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

No comments: