About Me

Friday, August 19, 2011

கற்றல் கற்பித்தல் உபகரணம் இல்லாமல் பாடம் நடத்த தடை


கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் இல்லாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்த கூடாது. இந்த உபகரணங்கள் வாங்குவதற்காக ஒரு ஆசிரியருக்கு 500 ரூபாய் அரசு அனுமதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு மொத்தம் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிடப்பட்டுள்ளது.
எந்த ஒரு பாடம் நடத்தினாலும் ஒரு பொருளை வைத்து நடத்தினால் மாணவர்களுக்கு அது எளிதில் புரியும். இதன்படி தான் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பொருட்களை வைத்து அதன் மூலம் பாட நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வலியுறுத்தப்படுகிறது.
இதற்காக பொருட்கள் வாங்குவதற்கு ஆசிரியர்களுக்கு பணம் அனுமதிக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கு (2011-2012) இதற்காக ஆசிரியர்களுக்கு பணம் அனுமதிக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், பாட நடைமுறைகளில் புதிய அணுகுமுறைகளை கையாளும் வகையில் புதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக அனைத்து மாவட்டத்திற்கும் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை செயலர் மற்றும் மாநில திட்ட இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை 1052ல் கூறப்பட்டிருப்பதாவது; மாணவர்களுக்கு தெளிவாக பாடப்பகுதியினை அறியவும், அதனை நன்கு புரிந்து கொண்டு பின் வரும் காலங்களில் புரிந்தவற்றை தகுதியான நேரங்களில் அதனை பயன்படுத்துவதற்கு வசதியாகவும், படைப்பாற்றலை வளர்க்க தூண்டுவதற்கும், பாடப்பகுதியினை கற்பிக்க ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் உபகரணங்களை தயார் செய்து அதன் மூலம் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளை மாற்றிட வேண்டியது ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.
இதற்காக ஒரு ஆசிரியருக்கு 500 வீதம் ஆசிரியர் மானியம் 2011-12ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்க ஆண்டு வரைவு திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆரம்பபள்ளி ஆசிரியர்களுக்கு 6 கோடியே 2 லட்சம், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 3 கோடியே 98 லட்ச ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்த பணத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
* அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகள் வரை கற்பிக்கும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் இந்த மானியம் வழங்கப்பட வேண்டும். (இடைநிலை, பட்டதாரி, தமிழ், கைத்தொழில், விளையாட்டு மற்றும் இதர ஆசிரியர்கள்)
* இந்த மானியம் தற்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் கணக்கிட்டு வழங்க வேண்டும்.
* ஒரு ஆசிரியருக்கு தலா 500 அனுமதிக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக 250 மட்டும் வழங்க வேண்டும். அடுத்த தொகை வழங்குவது குறித்து பின்னர் அரசாணை வெளியிடப்படும்.
* பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை கணக்கில் கொண்டு ஆசிரியருக்கு 250 வீதம் கணக்கிட்டு வழங்க வேண்டும். இதற்கான தனிப்பதிவேடு மாவட்ட அளவிலும் வட்டார அளவிலும் பராமரிக்க வேண்டும்.
* பள்ளியில் இ.சி.எஸ் வசதி இருந்தால் அந்த முறை மூலம் மானியம் விடுவிக்கலாம். இதற்கான காசோலை கிடைக்கப் பெற்ற இரண்டு நாட்களில் காசோலை பணமாக்கப்பட்டு பள்ளியில் உரிய ஆசிரியர்களுக்கு ஒரே தவணையாக 250 ரூபாய் வழங்க வேண்டும். இதற்கான பதிவேடு ஒவ்வொரு பள்ளியிலும் இருத்தல் அவசியமாகும்.
* ஆசிரியர்களுக்கு பணம் விடுவிக்கும் போது வி.இ.சி, பி.டி.ஏ, எஸ்.எம்.சி இவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும். இதற்கான படிவத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.
மானியத்தை பயன்படுத்தும் முறை
* ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வகுப்பு மற்றும் பாடங்களில் மாணவர்களுக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டிய படைப்பாற்றலை தூண்டக் கூடிய மற்றும் கடின பகுதிகளை ஆய்வு செய்து வகுப்பு மற்றும் பாடப்பகுதிகளை பட்டியலிட வேண்டும்.
* இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு கற்பிக்கத் தேவையான செயல்பட வேண்டிய கற்றல், கற்பித்தல் உபகரணங்களை வகுப்பு மற்றும் பாட வாரியாக பட்டியல் இட வேண்டும்.\
* உபகரணங்கள் செய்ய தேவையான பொருட்களை பட்டியலிட்டு இந்த பொருட்களில் எளிதாக சேகரிக்க வேண்டிய பொருட்கள் மற்றும் கடையில் வாங்க வேண்டிய மூலப் பொருட்கள் இவைகளை தனித்தனியாக பட்டியலில் சேர்க்க வேண்டும்.
* கடையில் வாங்க வேண்டிய மூலப் பொருட்களை தரமானதாக வாங்கி கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் வேண்டும்.
* செய்யப்பட்ட, செய்ய உத்தேசித்துள்ள பொருட்களின் பட்டியலை வகுப்பு வாரியாக, பாடவாரியாக குறித்து எந்த திறன் பகுதிக்கு பயன்படுத்தலாம் என்பதை பாடக்குறிப்பு நோட்டிலோ அல்லது தனி பதிவேட்டிலோ பதிவு செய்திருக்க வேண்டும்.
* இவ்வாறு ஒரு ஆசிரியர் தயாரித்த உபகரணம் வேறு வகுப்பு, பாட ஆசிரியர்கள் பயன்படுத்த தேவையானாலும் அவர்களுக்கு அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.
* ஆசிரியர்கள் உபகரணங்கள் செய்ய வேண்டிய மூலப்பொருட்கள் வாங்க மட்டுமே மானியத்தை பயன்படுத்த வேண்டும். கடையில் இருந்து உபகரணமாகவே வாங்குவதை தவிர்த்தல் வேண்டும்.
* இனி வரும் காலங்களில் கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் இல்லாமல் கற்பித்தல் நிகழ்வு பள்ளிகளில் நடக்க கூடாது. இதனை கவனமாக கொண்டு செயல்பட வேண்டும்.
* ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகைக்கான உரிய வவுச்சரை உடன் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமையாசிரியர் இதன் விபரங்களை பள்ளி கணக்கு புத்தகத்தில் முறையாக ஒப்புதல் செய்திருக்க வேண்டும்.
* பள்ளியில் ஆசிரியர் வாரியாக செய்யப்பட்ட உபகரணங்கள், அதற்குரிய பாடம் மற்றும் பாடப்பகுதி அதற்கான வாங்கப்பட்ட பொருட்கள் இவற்றை தனியான பதிவேட்டில் பதியப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
* செய்யப்பட்ட உபகரணங்கள் நிரந்தர வகையில் இருந்தால் அதனை தனிபதிவேட்டில் பதிவு செய்து வருங்காலங்களில் பயன்படுத்த வேண்டும். பள்ளியில் கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் கொண்டு மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடப்பதை போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும்.
இதனை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: