About Me

Thursday, August 25, 2011

பிள்ளைகளை முட்டாள் என திட்டாதீர்கள்

குழந்தைகள் தவறு செய்வது இயல்பு. அவர்கள் செய்த தவறை திருத்துவது பெற்றோரின் கடமை. ஆனால், தவறை சுட்டிக் காட்டி பிள்ளைகளை திட்டுவது சரியல்ல.
அடிக்கடி தவறு செய்து திட்டு வாங்கும் குழந்தைகள், பெற்றோர் திட்டுவதைத்தான் தவறாக நினைக்கிறார்களேத் தவிர, குழந்தைகள் செய்யும் தவறு பெரிதாகத் தெரிவதில்லை.
மேலும், நீ எதையும் சரியாக செய்ய மாட்டாய், நீ ஒரு வேலையை செஞ்சாலே இப்படித்தான், ஒரு முட்டாள் என்றெல்லாம் பிள்ளைகளை அவ்வப்போது திட்டிக் கொண்டே இருந்தால், அவர்களுக்கு இந்த வார்த்தைகளை மனதில் பதிந்து விடும்.
அவர்கள் புதிதாக ஒரு வேலையை செய்ய வேண்டும் என்றால் மிகவும் பயப்படுவார்கள். நம்மால் இதை செய்ய முடியுமோ முடியாதோ என்று சந்தேகத்தோடு வேலையை செய்யாமல் இருந்து விடுவார்கள்.
ஒரு வேலை செய்யும் போது ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டால், நாம் முட்டாள்தானே.. நாம் எதையாவது செய்தால் இப்படித்தான் ஆகும் என்று அவர்களே அவநம்பிக்கையோடு இருந்து விடுவார்கள்.
உங்கள் குழந்தை ஒரு வேலையை தவறாக செய்யும் போது அந்த தவறை மட்டுமே சுட்டிக் காட்ட வேண்டுமேத் தவிர, குழந்தையின் திறனை மட்டமாகப் பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால், அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து குடிகொண்டுவிடும்.
இதனால் அவர்களது தன்னம்பிக்கை, சுயமரியாதை அனைத்தும் இழந்து நீங்கள் அடிக்கடி சொல்லி வந்த முட்டாளாகாவே மாறிவிடுவார்கள்.
அம்மாவே நம்மை முட்டாள் என்று சொல்லி விட்டார்கள். நாம் முட்டாள்தான். நம்மால் எதையும் செய்ய முடியாது என்ற ஒரு எண்ணத்தை பிள்ளையின் மனதில் வேரூன்றி வளரவிட்டுவிட்டால் எதைச் செய்தும் அதை களைய முடியாது.
எனவே குழந்தைகள் தவறு ஏன் நிகழ்ந்தது, அதனை எவ்வாறு செய்திருந்தால் சரியாக வரும், உங்களால் சிறப்பாக அந்த வேலையை செய்திருக்க முடியும். ஆனால் சிறிய கவனக்குறைவால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் முயற்சித்தால் சரியாக வரும் என்று குழந்தையை ஊக்கப்படுத்தும் வகையில் உங்கள் நடைமுறை மாற வேண்டும்.
அதேப்போல அவர்களிடம் இருக்கும் உங்களுக்குப் பிடிக்காத பழக்கவழக்கத்தைத்தான் வெறுக்க வேண்டுமேத் தவிர, அவர்களையே வெறுக்கக் கூடாது. அவர்களது பழக்க வழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை விளக்கி அவற்றை விட்டுவிட வேண்டும் என்று அன்பாக சொல்ல வேண்டும்.
ஒரு விஷயத்தை உங்கள் குழந்தைக்கு நீங்கள் சரியான முறையில் புரிய வைத்து விட்டீர்கள் என்றால் பிறகு அவர்களது ஒவ்வொரு தவறான பழக்க வழக்கத்தையும் உங்களால் எளிதாக மாற்றி விட முடியும்.

No comments: