About Me

Friday, September 9, 2011

2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்?



சென்னை, செப். 8: தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் எனத் தெரிகிறது.முதல் கட்டத் தேர்தலை அக்டோபர் 19-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலை அக்டோபர் 22-ம் தேதியும் நடத்த பரிசீலிக்கப்படுகிறது.இப்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் அக்டோபர் 24 தேதியோடு முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் பணிகள் அனைத்தையும் முடித்து அரசின் ஒப்புதலுக்காக மாநில தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது.மாநிலத் தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரை அக்டோபர் 19, 22-ம் தேதி அல்லது 20, 25-ம் தேதி தேர்தலை நடத்தலாம் என்று அரசிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அரசு சார்பில் அக்டோபர் 19, 22 ம்- தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கவுள்ளது.மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று தேர்தல் முகாம்களை நடத்தி வருகிறார். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணிகள் குறித்து அவர்களுக்கு முழுமையாகப் பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது.அச்சிடும் பணிகள்: தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகளும் தொடங்கியுள்ளன. தேர்தலின்போது வாக்குப் பெட்டி மற்றும் மின்னணு இயந்திரங்களில் மேயர், கவுன்சிலருக்கு வாக்களிக்க வேண்டியது என தனித்துக் காட்டும் வகையில் ஒவ்வொரு நிறத்தில் அடையாளச் சீட்டுகள் ஒட்டப்படும். இந்த அடையாளச் சீட்டுகள் எந்திரங்களில் ஓட்டுவதற்காக அச்சிடும் பணிகள் தொடங்கி உள்ளன.
 

No comments: