NEWS
கோவை: சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, கற்பிக்கும் நாட்கள் குறைந்து போனதால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2012 ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள கல்வியாண்டு காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த தி.மு.க., ஆட்சியில், முதல் மற்றும் 10ம் வகுப்புகளில் மட்டும் அறிமுகம்
செய்யப்பட்ட சமச்சீர் கல்வி, பெரும் சர்ச்சைகளுக்குப் பின், இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி முறையை நடைமுறை படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால், 183 ஆக இருந்திருக்க வேண்டிய கற்பித்தல் நாட்களின் எண்ணிக்கை, 123 ஆகக் குறைந்தது.
அறுபது நாள் இழப்பை ஈடுகட்ட, இந்த ஆண்டு செப்டம்பர் முதல் 2012 ஏப்ரல் வரை, மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளை, பணி நாளாக கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 17 நாள் கிடைக்கிறது. ஏப்ரல் 2012ல் பணி நாட்கள் நீட்டிக்கப்படவுள்ளன. 2012 ஏப்., 18 முதல் ஏப்., 28 வரை நீட்டிக்கப்படும் பணி நாட்கள் மூலம் மேலும் 10 நாள் கிடைக்கிறது. அடுத்தபடியாக காலாண்டு தேர்வு விடுமுறையிலும் கைவைத்துள்ளது அரசு.
வழக்கமான 10 நாள் விடுமுறை, இந்த ஆண்டு ஐந்து நாளாகக் குறைக்கப்படுகிறது. இதன் மூலமும் ஐந்து நாள் கிடைக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக, கூடுதலாகக் கிடைக்கும் 32 நாள், இழந்த 60 நாள், கற்பித்தல் நாட்களில் ஈடுகட்டப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, தினமும் 35 நிமிடம் கூடுதலாக வகுப்பு நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவால், மேலும் 16 நாள் கூடுதலாகக் கிடைக்கிறது. இந்த மாற்று ஏற்பாடுகளால் தேர்வு நாட்கள் மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்கள் போக, கற்பித்தல் நாட்கள் 197 ஆக உயர்ந்துள்ளது.
35 நிமிடங்கள் தேவையா? முப்பத்தைந்து நிமிட கூடுதல் வகுப்பு நேரத்தை, ஒவ்வொரு பள்ளியும் வெவ்வேறு விதமாக பயன்படுத்துகின்றன. தற்போது நடத்தும் வகுப்புகளின் நேரத்தை, சில பள்ளிகள் நீட்டித்துள்ளன. வேறு சில பள்ளிகளோ, மாலை வழக்கமாக பள்ளி முடிந்தவுடன், மேலும் 35 நிமிடம் கூடுதல் வகுப்பு நடத்துகிறது. பள்ளி முடியும் நேரம் இதனால் மாற்றத்துக்கு உள்ளாவதால், பள்ளி முடிந்தவுடன் பஸ்சை பிடித்து வீடு போய் சேர்வதில் சில மாணவர்களுக்கு பிரச்னை உள்ளது. அதனால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு, பள்ளிகளுக்கு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பாடமும் கம்மி தான்: கற்பித்தல் நாள் குறைந்து போனதால், இந்த ஆண்டு தேர்வுகளில், பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பாடங்கள், காலாண்டு தேர்வில் 25 சதவீதமும், அரையாண்டு தேர்வில் 40 சதவீதமும், இறுதியாண்டு தேர்வில் 35 சதவீதமும் மாற்றப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பாடங்கள், காலாண்டில் மட்டும் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வில் மாற்றம்: வழக்கமாக மார்ச் மாதம் நான்காம் வாரம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். சமச்சீர் கல்வி இடைவெளியால் கற்பித்தல் நாட்களில் ஏற்பட்டுள்ள வேறுபாடு காரணமாக, இந்த முறை 2012 ஏப்., முதல் வாரம் தேர்வு நடத்தப்படலாம் என, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள கல்வியாண்டுக்கான புதிய காலண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பாடங்களை முடித்து மீளாய்வு செய்ய வேண்டுமே என்ற கவலை ஆசிரியர்களை தொற்றிக் கொண்டுள்ளது.
மொத்த பணி நாள்: 221, உள்ளூர் விடுமுறை: 3, தேர்வு நாட்கள் : 24
மொத்த கற்பித்தல் நாட்கள்: 197
No comments:
Post a Comment