About Me

Thursday, September 29, 2011

லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக அதிகாரி கைது (29.09.2011)

ஆசிரியரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருவெண்காடு வடக்குவீதியை சேர்ந்தவர் தங்கேஸ்வரன். இவர் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.




அருகில் உள்ள மங்கைமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அருணா.

தங்கேஸ்வரன் மங்கைமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும், அருணா வைத்தீஸ்வரன்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும் விருப்ப பணியிட மாறுதல் கோரி நாகையில் உள்ள மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு அப்போது பணியிடமாறுதல் வழங்கப்பட வில்லை. இந்த நிலையில் கடந்த 17, 19-ந் தேதிகளில் நடந்த கலந்தாய்வு மாறுதலின்போது இருவரும் பணியிட மாறுதல் கோரியிருந்தனர். இதனையடுத்து இருவருக்கும் பணியிடமாறுதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக ஆசிரியர் தங்கேஸ்வரன் கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணனை அணுகி கேட்டார்.

அவரிடம், `பணியிடமாறுதல் உத்தரவிற்கான நகலை வழங்க வேண்டும் என்றால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும்' என்று கண்காணிப்பாளர் கண்ணன் கூறினார். மேலும் அந்த பணத்தை தொடக்கக்கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் ராமச்சந்திரனின் வங்கி கணக்கில் போடும்படி கூறியுள்ளார்.

அதற்கு ஆசிரியர் தங்கேஸ்வரன் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து பணத்தை நேரில் வந்து தரும்படி கண்ணன் வலியுறுத்தினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தங்கேஸ்வரன் நாகையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கவாசகம் அறிவுரைப்படி ரசாயனபொடி தடவிய ரூ.2 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு நேற்று காலை 10 மணிக்கு நாகை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு தங்கேஸ்வரன் சென்றார்.

அலுவலகத்துக்கு வெளியே உள்ள ஒரு மரத்தடிக்கு தங்கேஸ்வரனை அழைத்து வந்து அவர் கொண்டு வந்த ரூ.2 ஆயிரத்தை கண்காணிப்பாளர் கண்ணன் வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பாளர் கண்ணனை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக இளநிலை உதவியாளர் ராமச்சந்திரனிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். லஞ்சம் வாங்கி பிடிபட்ட நாகை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் நாகூரை சேர்ந்தவர். தற்போது நாகை வெளிப்பாளைத்தில் வசித்து வருகிறார்.
thanks : Nakkeeran

No comments: