சென்னை:""சமச்சீர் கல்வி வெற்றிபெற, பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள், ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசின், டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா, சென்னை சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வி இயக்குனர் வசுந்தராதேவி வரவேற்றார்.
விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் பேசியதாவது: தமிழக அரசின், பள்ளி மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்' வழங்கும் திட்டம், கல்வியில் பெரிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது. சமச்சீர் கல்வி முழு வெற்றிபெற, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வகம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 1,082 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை கருத்தில்கொண்டு, மொத்தம் 57 ஆயிரத்து 756 ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கு 5,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், நாகை உள்ளிட்ட கல்வி மாவட்டங்களை சேர்ந்த துவக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 200 பேர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 134 பேர் உள்ளிட்ட 370 ஆசிரியர்களுக்கு, டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருதை, அமைச்சர் வழங்கினார். வெள்ளி பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் 5,000 ரொக்கப் பணம் ஆகியவை இவ்விருதில் அடங்கும்.விழாவில், சென்னை மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இயக்குனர் இளங்கோவன், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் ராமேஸ்வர முருகன். மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இயக்குனர் தேவராஜன், தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருது பெறுவோருக்கு விருந்து கிடைக்குமா?"மத்திய அரசின் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு, ஜனாதிபதி, பிரதமர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் விருந்து தந்து கவுரவிக்கின்றனர். அவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் ரயிலில் இலவசமாக பயணிக்கும் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு மாநில கவர்னரோ, முதல்வரோ விருந்தளிப்பதில்லை. அவர்களுக்கு, அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் சலுகையும் தரப்படுவதில்லை' என, விழாவிற்கு வந்திருந்த ஆசிரியர்கள் சிலர் வருத்தம் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment