About Me

Wednesday, September 14, 2011

ஆசிரியர் நியமனத்தில் அரசு அக்கறை காட்டவில்லை: கருணாநிதி

சென்னை: "ஆசிரியர் நியமனத்தில், அரசு அக்கறை காட்டாமல் உள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை,
பள்ளிகளுக்கு முழுமையாக வினியோகிக்கவில்லை. ஒரு பாடப் புத்தகம் கிடைத்த மாணவர்களுக்கு, மற்ற புத்தகங்கள் கிடைக்கவில்லை. மெட்ரிக் பள்ளிகளுக்கு, சமச்சீர் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படவே இல்லை. காலாண்டுத் தேர்வுக்கு வினாத் தாள்களை எப்படித் தயார் செய்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், இம்மாதம் 22ம் தேதி காலாண்டுத் தேர்வு துவங்கும் என அறிவித்துள்ளனர். முத்துக்குமரன் குழு பரிந்துரைகளை அமல் செய்வதாக, அரசு அறிவித்துள்ளது. ஆனால், குழுவின் முதல் பரிந்துரையான, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது பற்றி கண்டுகொள்ளவில்லை. மேலும், முத்துக்குமரன் குழு பரிந்துரைக்கு மாறாக, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என கணக்கிட்டு, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் தேவை என சொல்கின்றனர். பேரவையில் பேசிய முதல்வர், 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார். அவரே, 110வது விதியின் கீழ் அறிக்கை வாசித்த போது, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்கிறார். ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என கூறும் அரசு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுவார்களா அல்லது தேர்வு, நேர்காணல் மூலம் நியமிக்கப்படுவார்களா என்பதை அறிவிக்கவில்லை. பள்ளிகள் துவங்கி மூன்று மாதங்களான பின், ஆசிரியர் பணி மாறுதலுக்கு கவுன்சிலிங் அறிவித்துள்ளனர். கல்வியாண்டில், முதல் காலாண்டு முடிந்த பின், பணி மாறுதல் பெற்று, குடும்பத்தோடு புதிய இடம் செல்வதற்கான வசதிகளை, ஆசிரியர்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியுமா? இவ்வாறு, அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: