About Me

Wednesday, October 19, 2011

அரசு ஊழியர், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

ஒரு நாள் இடைவெளியில், இரண்டு கட்ட தேர்தல் நடத்துவது, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது இடைவெளி விட்டிருக்க வேண்டும்' என்கின்றனர், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.


தேர்தலை நடத்துவது கமிஷனாக இருந்தாலும், அதற்கான பணிகளை முன்னின்று செய்து முடிப்பது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் பணி முதல், பெட்டிகளை ஏற்றி அனுப்பும் கடைநிலை ஊழியர் பணி வரை செய்யக்கூடிய அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, நரக வேதனையை ஏற்படுத்துவதாக இந்த உள்ளாட்சித்தேர்தல் அமைந்து விட்டது. "இரண்டு கட்ட தேர்தல் நடத்துவது என்று தீர்மானித்த தேர்தல் கமிஷன், இரு கட்டங்களுக்கும் போதிய இடைவெளி விடாமல் நடத்துவது தான் கொடுமை' என்கின்றனர், அரசு ஊழியர்கள்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர், முதல் நாளே காலை 10 மணிக்கெல்லாம், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி, தேர்தல் பொருட்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அன்று மதிய வாக்கில், ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று தகுந்த முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். இரவுப்பொழுதை அங்கேயே கழித்து, மறுநாள் காலை ஓட்டுப்பதிவு பணியை செம்மையாக நடத்தி முடிக்க வேண்டும்.


ஓட்டுப்பதிவு முடிந்து, கணக்குகள் அனைத்தும் சரிபார்த்து, பெட்டிகளை எண்ணும் மையத்தில் ஒப்படைத்து முடிக்கும் வரை, ஓட்டுச்சாவடி அலுவலர்களின் பணி தொடரும். இதற்கே நள்ளிரவு கடந்து விடும். சில ஊரகப்பகுதிகளில் இருந்து ஓட்டுப்பெட்டிகளை எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்வதற்குள், இரவுப்பொழுது விடிந்து விடும். அதன்பிறகு தான், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஓய்வெடுக்க முடியும். ஆனால், இரண்டாம் கட்ட தேர்தல் ஒரு நாள் இடைவெளியில் நடத்தப்படுவதால், இந்த முறை தேர்தல் பணியாளர்கள் யாருக்கும் ஓய்வு என்பதே இல்லாமல் போய் விட்டது. "வீட்டுக்கு சென்ற உடனேயே மீண்டும் தேர்தல் பணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டியது தான்' என்ற நிலையில் தான், பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இருந்தனர். பெண் ஊழியர் பலரது நிலை, கேட்கவே பரிதாபமாக இருந்தது. ஓட்டுச்சாவடிகளில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வரை தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் புலம்பித்தள்ளினர். பக்கத்தில் பணி என்றால் கூட பரவாயில்லை. மாவட்டத்தின் ஒரு கோடியில் இருந்து மறுகோடியில் இருக்கும் உள்ளாட்சியில் பணிக்கு சென்று சேர வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட ஊழியர் நிலை திண்டாட்டம் தான். குறிப்பிட்ட உள்ளாட்சிக்கு பஸ் பிடித்து சென்று சேர வேண்டுமெனில், அதற்கு தகுந்தபடி, முன்கூட்டியே புறப்பட வேண்டும். இப்படித்தான் பலருக்கும் இம்முறை தேர்தல் பணி வழங்கப்பட்டிருந்தது. "குறைந்தபட்சம் இரண்டு நாள் இடைவெளி விட்டிருந்தால், யாருக்கும் சிரமம் இருந்திருக்காது. ஒரு நாள் மட்டும் இடைவெளி என தேர்தல் கமிஷன் செய்த குளறுபடியால், அனைவரும் புலம்பும் நிலை ஏற்பட்டு விட்டது' என்றனர், தேர்தல் பணியாளர்கள்.

No comments: