About Me

Wednesday, November 9, 2011

தமிழகம் 12 ஆயிரம் மக்கள்நல பணியாளர் நீக்கம்

சென்னை, நவ.8: பன்னிரண்டாயிரம் மக்கள் நலப் பணியாளர்களை நீக்கி ஊரக வளர்ச்சித் துறை செவ்வாய்க்கிழமை (அரசாணை எண் 86) உத்தரவிட்டது. இவர்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படுவது மூன்றாவது முறையாகும்.  மக்கள் நல பணியாளர்களை பணி நீக்கம் செய்வது குறித்த உத்தரவை ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் என்.எஸ். பழனியப்பன்
செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.  உத்தரவு (எண் 86) விவரம்:  ஊராட்சிகளில் அடிப்படை தகவல்கள் பராமரிப்பு, ஊராட்சி சொத்துகளைப் பாதுகாப்பது, சிறுசேமிப்பில் மக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  இவர்களின் பணி நியமனம் குறித்த உத்தரவு அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்துள்ளது. 21.5.2010-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி இந்த நியமனங்கள் 31.5.2012 வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில், தற்போது மக்கள் நலப் பணியாளர்கள் செய்து வரும் பணிகளைக் கவனிக்க ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகள் அளவிலேயே போதுமான அலுவலர்கள் இருப்பதால், மக்கள் நலப் பணியாளர்கள் என்ற பதவியை ரத்து செய்துவிடலாம் என்று 6.9.2010-ல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆணையாளர் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.  இதை அரசு கவனமாகப் பரிசீலித்து, மக்கள் நலப் பணியாளர் பதவிகளை உடனடியாக ரத்து செய்வது என்று முடிவு செய்துள்ளது. இந்தப் பணியிடங்கள் உடனடியாக ரத்து செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளரும், மாவட்ட ஆட்சியாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  1990-ம் ஆண்டு ஜூலை மாதம் மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அரசின் திட்டங்கள் குறித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கிராமங்களில் பயனாளிகளைக் கண்டறிந்து பட்டியலை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அளிப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர். அதற்கு மதிப்பூதியமாக மாதம் ரூ. 200 வழங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் 25 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டனர். கிராமப்புறங்களில் படித்த, ஏழை பட்டதாரிகளின் நலனைக்காக்க என்று கூறி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  அதிமுக ஆட்சிக்கு வந்ததும்... 1991-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டு மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 1996-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மக்கள்நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் நீக்கப்பட்டனர். 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மக்கள்நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  2009-ம் ஆண்டில் தமிழகத்தில் ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாதம் ரூ.2,500 என்ற அளவில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் அளிக்கப்பட்டது.

thanks :

No comments: