பகுதி நேர ஆசிரியர் வேலைக்கு, விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட பெரும்பாலான
மாவட்டங்களில், ஒதுக்கப்பட்ட பணியிடங்களை விட, இரண்டு மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிகளில், 5,253 பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள், 5,392 பகுதி நேர உடற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் 5,904 தையல் ஆசிரியர்கள் என, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
காரணம் என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பிக்க எக்கச்சக்க ஆர்வம் உள்ளது. உதாரணமாக, மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ள 507 பணியிடங்களுக்கு, 3,500 விண்ணப்பங்கள் குவிந்து உள்ளன. பல இடங்களில் பகுதி நேர வேலை செய்து கணிசமாக சம்பாதிக்கலாம் என்று, விண்ணப்பதாரர்கள் கருதுவதே இதற்கு காரணம் என, தெரிவிக்கப் படுகிறது. ஒரு பள்ளியில், வாரத்திற்கு மூன்று அரை நாள் வேலை; மாதம் 5,000 ரூபாய் தான் சம்பளம் என்றாலும், நான்கு பள்ளிகளில் வேலை பார்த்தால், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற, வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன், தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும், பணி நிரந்தரம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவே, அனைவரும் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
நாளை கடைசி நாள்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். வரும் 26ம் தேதியில் இருந்து, நேர்முகத் தேர்வு நடைபெறும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, இந்த வாரத்தில் இருந்தே நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும்.
No comments:
Post a Comment