About Me

Wednesday, February 1, 2012

உயர்நிலைப் பள்ளிகளில் "லேப்' உதவியாளர் பணியிடம்:1,054 இடங்களை பதவி உயர்வில் நிரப்ப நடவடிக்கை

சேலம்:தமிழகத்தில் சமச்சீர் கல்வியில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயர்நிலைப் பள்ளிகளுக்கு, "லேப்' உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. முதல் கட்டமாக, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு, பதவி உயர்வின் மூலம், "லேப்' உதவியாளர் பணியிடத்தை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நடப்பாண்டில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, செய்முறைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், லேப் வசதி ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. உயர்நிலைப் பள்ளிகளில், இதுநாள் வரை, ஆசிரியரல்லா பணியாளர் பணியிடங்களில், அலுவலக உதவியாளர், ரிக்கார்டு கிளார்க், இளநிலை உதவியாளர் ஆகிய பணியிடங்கள் இருந்தன.

தற்போது, அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும், லேப் உதவியாளர் பணியிடங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், இப்பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை அந்தந்த மாவட்டத்துக்குள் பதவி உயர்வு மூலம் நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவற்றில், தலா ஒரு லேப் உதவியாளர் பணியிடங்களை உருவாக்குவதன் மூலம், 1,054 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த, 2009-10 கல்வியாண்டில், தரம் உயர்த்தப்பட்ட, 200 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட மற்ற உயர்நிலைப் பள்ளிகளுக்கும், படிப்படியாக லேப் உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடங்களை, பதவி உயர்வின் மூலம் நிரப்ப உத்தரவிட்டுள்ளதால், தற்போது அரசு பள்ளிகளில் ரிக்கார்டு கிளார்க்காக இருப்பவர்களுக்கு, "லேப்' உதவியாளராகவும், அலுவலக உதவியாளருக்கு, ரிக்கார்டு கிளார்க்காகவும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், 1,000க்கும் மேற்பட்டோருக்கு, உடனடியாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

No comments: