Thursday, February 9, 2012

சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் கத்தியால் குத்தி கொலை

பள்ளியில் நடத்தை குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியதால்
ஆத்திரமுற்ற மாணவன் ஒருவன் சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானவை. இங்குள்ள மாணவ, மாணவிகள் மீது மிகுந்த அக்கறையும், முழுக்கவனமும் எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் இங்கு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் (15 வயது ஆவதால் பெயர் குறிப்பிட வில்லை) . இவன் சென்னை ஏழுகிணறு பகுதியில் வசித்து வருகிறான். இவரது தந்தை ரபீக் துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி (39 ) . மந்தைவெளியை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் பாடம் எடுத்து விட்டு 3 வது பாடவேளையின் போது மாற்று வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் மாணவன் ஆசிரியை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான். கையில் இருந்த கத்தியால் குத்தினான். இதில் 7 இடங்களில் குத்து விழுந்தது. மாணவன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். மாணவர்கள் அக்கம், பக்கம் ஓட துவங்கினர். கொலை செய்த மாணவன் எங்கும் ஓடாமல் வகுப்பறைக்குள்ளேயே இருந்தான். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியை உமாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இந்த சம்பவம் பள்ளியை சுற்றிஉள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மாணவனிடம் போலீஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவனிடம் கேட்டதில் ; ஆசிரியை என்னுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் என்னை பெற்றோர்கள் திட்டினர். எனவே எனக்கு பெரும் கோபம் ஏற்பட்டது. இதனால் குத்தி கொன்றேன் என்றான். இந்த மாணவன் அடிக்கடி பள்ளிக்கு வராமல் கட் அடிப்பான் என பள்ளி சக மாணவர்கள் கூறினர். 

கொலை வெறி., கொலைவெறி
சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவ ஒருவர் கூறுகையில், மாணவர்களின் ரிப்போர்ட் குறித்துஅவ்வப்போது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களது நிலைமை தெரிந்து அதற்கேற்ப பெற்றோர்கள் நடந்து கொள்ள முடியும். இப்போது வரும் சினிமாக்களை பார்த்து மாணவர்களின் மனம் மாறி விடுகிறது. கொலை வெறி., கொலைவெறி என்று பாடல்கள் எடுத்தால் நாட்டில் கொலை வெறிதான் தலை விரித்தாடும் என்றார். 
 
முன்னாள் போலீஸ் கமிஷனரின் உறவினர் ஆசிரியை : 

கொலை செய்யப்பட்ட ஆசிரியை , சென்னையில் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற நாஞ்சில் குமரனின் உறவினர் ஆவார். ஆசிரியை கொலை சம்பவம் கேள்வி பட்டதும் அவர் ஆசிரியை வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார், ஆசிரியை கொலை சம்பவம் அடுத்து அவரது வீட்டில் உறவினர்கள் கதறி அழுதபடி இருந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தூத்துக்குடியில் டாக்டர் ஒருவர் கிளினிக் உள்ளேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் மாணவன் , ஆசிரியை ஒருவரை கொலை செய்திருப்பது பெரும் கவலை அளிப்பதாக மனித நேய விரும்பிகள் கருத்து கூறியுள்ளளனர்.


நன்றி:


 

No comments:

4tamilmedia