About Me

Friday, March 30, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு -அணுகுமுறைக் குழப்பம்!



          தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கல்வித் துறை சரியான அணுகுமுறையைக் கையாளாத காரணத்தால் பல இடங்களில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் சில இடங்களில் விண்ணப்பம் கிடைக்காததால் சாலை மறியலும்கூட நடைபெற்றுள்ளன.

 இவை யாவும் எளிதில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இத்தகைய தட்டுப்பாடு, தள்ளுமுள்ளுக்கு அவசியமே இல்லை. தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் தகுதித்தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.

 தமிழ்நாட்டில் கடந்த பதின் ஆண்டுகளில், அதிக எண்ணிக்கையில் கல்வியியல் கல்லூரிகள் நடைமுறைக்கு வந்துவிட்டதாலும், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகமான எண்ணிக்கையில் காலியாக உள்ளதாலும் பல லட்சம் பேர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து பட்டம் பெற்றுள்ளனர். இது தவிர, பணம் மட்டும் கொடுத்தால் போதும், சான்றிதழ் தருகிறோம் எனும்படியாக சில கல்வி நிறுவனங்கள் கர்நாடக எல்லையிலும் ஆந்திர எல்லையிலும் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றவர்களும் உள்ளனர்.

 தகுதித் தேர்வு கட்டாயம் என்றாகிவிட்டதாலும், இறுதியாண்டு பயிலும் ஆசிரியர் படிப்பு மாணவர்களும் தேர்வு எழுதலாம் என்பதாலும் குறைந்தது 10 லட்சம் பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுத முன்வருவார்கள் என்பதைக் கல்வித்துறை தீர்மானிக்கத் தவறிவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கையை மட்டும் கணக்கிட்டு 3.50 லட்சத்துக்கு மேல் விண்ணப்பம் தேவையிருக்காது என்ற தவறான நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டதுதான் இந்த அவலநிலைக்கு காரணமாகிவிட்டது. இது கல்வித்துறையின் முதல் பிழை.

 இரண்டாவதாக, இத்தனை விண்ணப்பங்களை எப்படி முறையாக விநியோகம் செய்வது என்பது குறித்து சிந்திக்கவே இல்லை. விண்ணப்பங்களை எவ்வாறு வழங்க வேண்டும் என்ற விதிமுறையைக்கூட வகுத்துக் கொள்ளவில்லை.

 ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் என்பதைக் கல்வித்துறை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். அது கடமையும்கூட. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் தங்கள் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் நகலைக் கொடுத்து விண்ணப்பம் பெற்றுச் செல்லலாம் என்ற எளிய விதிமுறைகூடப் பிரச்னையைத் தவிர்க்கப் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாததன் விளைவு, கல்வித்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகள் விண்ணப்பங்களைப் பதுக்கி வைத்து, இரவு 11 மணிக்குக்கூட ரகசியமாக அதிக விலைக்கு விற்றன. ஒரு நபருக்குப் பத்து, இருபது விண்ணப்பங்கள்கூடக் கொத்து கொத்தாகக் கொடுக்கப்பட்டன. இதற்குக் காரணம் கல்வித்துறையின் மெத்தனமும் அலட்சியமும்தான்.

 ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், வெயிலில் ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்று, காத்துக்கிடந்த பின்னர் விண்ணப்பங்கள் தீர்ந்து போனது என்று அறிவிப்பது எத்தகைய வேதனையை, பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கல்வித்துறை உணர்ந்ததாகவே தெரியவில்லை.

 விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்கிற புதிய அணுகுமுறைகூட இத்தனை அவலங்களையும் தவிர்த்திருக்கும். இன்றைய உலகில், வங்கித் தேர்வுகள், மத்திய தேர்வாணையத் தேர்வுகள், உயர் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு (கேட்) என எல்லாமும் இணையதளம் மூலமாக எளிதாக நடத்தப்படுகின்றன. பல லட்சம் பேர் இணையதளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில், வெயிலில் காத்திருந்து, காவல்துறையின் தடியடி, தட்டிக்கேட்ட தம்பதிக்கு போலீஸின் அடிஉதை என்று தமிழக அரசுக்குக் களங்கம் ஏற்படுத்திய பெருமை நமது கல்வித் துறையைச் சாரும்.

 இவ்வளவும் நடந்து முடிந்த பிறகு, கூடுதல் மையங்கள் திறக்கலாம் என்று தேர்வு வாரியம் சிறப்பு அனுமதி வழங்குகிறது. அவசியம் ஏற்பட்டால், விண்ணப்ப விநியோக நாள்கள் நீட்டிக்கப்படும் என்கிறார்கள். இணையதளத்தின் மூலம் பதிவு என்று நடைமுறையை மாற்றினால் என்ன என்று ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 நமது பள்ளிக் கல்வித் துறை வெளிமாநிலக் கல்வியியல் கல்லூரிகளில் படித்துத் தேறியவர்களையும் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்வது நல்லது. தமிழகத்தில் இருக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகளின் தரம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் எந்தவொரு கல்லூரியும் பணம் பெற்று சான்றிதழ் வழங்கும் மோசடியில் வெளிமாநிலக் கல்வியியல் கல்லூரிகளைப் போலச் செயல்படுவதில்லை. அதேபோல, தொலைதூரக் கல்வி மூலம் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களைத் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருக்க அனுமதிக்கலாமே தவிர, அரசுப் பள்ளிகளில் பணியாற்ற அனுமதிப்பதை வரவேற்க முடியாது.

 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு ஆசிரியர்களின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதில் அரசின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. ஆனால், தகுதித் தேர்வு நடத்தப்படும் விதத்தில்தான் தொலைநோக்குப் பார்வையும் நிர்வாகத் திறமையும் காணப்படாமல் இருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளதுபோல வெளிப்படைத் தன்மையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் உறுதிப்படுத்தக் கூடாது?

No comments: