About Me

Thursday, September 6, 2012

சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து : 56 பேர் பலி : விபத்து நடந்தது ஏன்?...

Photo : R.Asok
சிவகாசியின் முதலிப்பட்டி கிராமத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில்

பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது. பல பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து  நடந்த போது பல கிலோமீற்றருக்கு புகைமண்டலம் தென்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு சத்தம் கேட்டுள்ளது.

எனினும், தீ முற்றாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், உயிருடன் தீயில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்டுவிட்டதாகவும் மாலை 8 மணியளவில் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வெடிவிபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ2 இலட்சம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் அறிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தமிழக முதல்வர் தலா 25,000 ரூபாயும், பிரதமர் தலா 50,000 ரூபாயும் அறிவித்துள்ளனர்.  படுகாயமடைந்தவர்கள் பலர் அருகில் சிகிச்சை வசதிகள் எதுவும் இல்லாததால் விபத்து நடந்த இடத்திலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள மதுரை ராஜாஜி அரச மருத்துவமனைக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  இதனால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன.

மேலும் தீ பரவியதை தெரிந்ததும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனடியாக அங்கு கூடியுள்ளனர். அதன் போது மேலும் பல பட்டாசுக்கள் வெடித்துச்சிதற, பார்த்துக்கொண்டிருந்தவர்களிலும் சிலர் பலியாகியுள்ளதுடன், பலர் தீக்காயங்களுக்கு உட்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் தான் இந்த பட்டாசு ஆலையில் வெடிபொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். ஆனால் இந்த ஆலையை குத்தகைக்கு எடுத்தவர், உரிமத்துக்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளார். அந்த உரிமத்திற்கான காலம் இன்றுடன்  முடிவடையும் நிலையில் அவசர அவசரமாக பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்றதாகவும் இதுவும் விபத்துக்கு முக்கிய காரணம் எனவும் புதிய தலைமுறை ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெடி பொதிகளில்  வெடி உப்பு, பொட்டாசியம் உட்பட இராசயன பொருட்கள் மற்றும் மருந்து நிரப்பும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் அதிக அழுத்தத்துடன் வெடிபொருள் நிரப்பப்பட்டதால் இத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் 90% வீதமான பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுவரை அங்கு நடந்த தீ விபத்துக்களில் இம்முறையே அதிகம்பேர் உயிரிழந்த விபத்தாக இது பதிவாகியுள்ளது.

2009 இல் தீபாவளி காலப்பகுதியில், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்லிபட்டில் நடந்த பட்டாசு வெடிவிபத்தில் 32 பேர் கொல்லப்பட்டதே இவ்வகையனா வெடிவிபத்துக்களில் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவமாக பதிவாகியிருந்தது.

2010ம் ஆண்டு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரிட்ட 22 தீ விபத்துக்களில் மொத்தம் 20 பேரும், 2009 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தயாரிப்பில் நேரிட்ட 23 விபத்துக்களில் மொத்தம் 33 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் 1.2 இலட்சம் மக்கள் பணியாற்றுவதாகவும், அங்கீகாரம் இல்லாத ஆலைகளிலும் வீடுகளிலும் பட்டாசு தயாரிப்பில் சுமார் 1 இலட்சம் பேர் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதுவும் குறிப்பாக சிவகாசி பட்டாசு உற்பத்திக்கு பேர் போன நகரம் என்கிற போதும், அங்கு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு முறையான சிகிச்சைக்கூடங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
 இந்த வருடத்தில் சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட 4 வது விபத்து இது என்கிறார்கள். இப்படிப்பட்ட விபத்துக்கள் எதனால் நிகழ்கின்றன. என்பதற்கு பதில் சொல்கிறார் ஒய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி வரதராஜன்.

"உலகத்தில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் 40 சதவிகிதம் பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் 90 சதவிகிதம் பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தியாகிறது. அப்படி இருக்கும் போது, இந்த விஷயத்திற்கு நாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுப்பதில் மிக கவனமாக இருந்திருக்க வேண்டும். இந்த வருடத்தில் இது நான்காவது வெடி விபத்து. கடந்த 25 வருடங்களில் இது 85 வது விபத்து. என்றாலும் இதற்கு முன்னர் நடந்த விபத்துக்களில் இன்று போல பயங்கரம் நிகழவில்லை.

      நமது பட்டாசு ஆலைகளில் இப்போது தடை செய்யப் பட்ட ரசாயன வெடிமருந்துகளை கையாண்டு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன  இது போல பட்டாசு ஆலைகள். சீனாவில் தான், பொட்டாசியம் குளோரைடு என்கிற அதி ரசாயன கலவை கலந்த வெடி மருந்தைக் கொண்டு பட்டாசு தயாரிக்கிறார்கள். காரணம் பொட்டாசியம் குளோரைடு என்கிற அதிரசாயணம் கொண்டு பட்டாசு தயாரிக்கும் போது, அது வானில் மிகவும் கலர்புல்லாக காட்சி அளிப்பதாகவும், வெடி சத்தம் வீரியமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

    ஆனால், அங்கு அவர்கள் இந்த அதி ரசாயன மருந்து பொருட்கள் கொண்டு பட்டாசு தயாரிக்க பயிற்சி  பெறுகிறார்கள். அதற்கேற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கவனமாக கையாளவும் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அதே ரசாயணப் மருந்து கொண்டு இங்கு பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பயிற்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று எதுவும் இல்லை. மேலும் இதுபோன்ற காரணங்களுக்கு ஏற்றாற்போலத்தான் இங்கு அது தடை செய்யப் பட்ட மருந்து.

     இப்படி சிவகாசியில் வெடி விபத்துக்கள் அடிக்கடி நிகழக் காரணம், அங்கு மொத்தம் 600 பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளன என்றால் இதில் 50 சதவிகிதம் உரிமம் பெறாத கம்பெனிகள். சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள  ஊர்களில் பட்டாசுத் தயாரிப்பு என்பது குடிசைத் தொழில் போல  பெருகிக் கிடக்கிறது. ஒரு பக்கம் மருந்தைக் குவித்துக் கொண்டு பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பார்கள், ஒரு பக்கம் அடுப்பை பற்றவைத்துக் கொண்டு சமைத்துக் கொண்டிருப்பார்கள். அத்தனை அஜாக்கிரதையாக பட்டாசு மருந்துகளைக் கையாள்வார்கள். காரணம் என்ன என்றால், பற்றாக்குறை சம்பளம், எனவே தொழில் கற்றுக் கொண்டு, இவர்கள் குடிசைத் தொழில் போல பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு விடுகின்றனர்.

      இப்படி உரிமம் பெறாமல் நடக்கும் பல பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு என்பது இருக்காது. காரணம் உரிமம் பெற்றிருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த பின்னர் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரிகள் உரிமம் கொடுத்திருப்பார்கள், உரிமம் பெறாத ஆலைகள் என்றால் எப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனமாக இருக்கும்?

     பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆலைகளை  முதலில் பார்வையிடுவார்கள். அப்போது ஒரு அறைக்கு நான்கு வாயில்கள் இருக்கவேண்டும். அந்த அறையில் நான்கு தொழிலாளிகள் மட்டுமே வேலைப் பார்க்கவேண்டும்.  ஏதும் அசம்பாவிதம் என்றால், நான்கு வாயில்கள் மூலமாகவும் நான்கு பெரும் பாதுகாப்பாக வெளியேறவேண்டும்  என்பதால்தான் இந்த ஏற்பாடுகளை பாதுகாப்பு கண்காணிப்பாளர் பார்வையிடுவார். இப்படி பல பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்த பின்னர்தான் அந்த ஆலைக்கு பட்டாசுத் தயாரிக்கும் உரிமம் வழங்கப்படும்.

    ஆனால் இப்போது வெடி விபத்து ஏற்பட்ட அந்த ஆலையில் இதுபோல நான்கு வாயில்கள் உள்ள அரை இல்லை என்றே தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்னர்தான் நான் ஒரு பத்திரிகையில் பட்டாசு உற்பத்தி சங்க செயலாளர் மாரியப்பன் என்பவர் பேட்டி கொடுத்து இருந்தார், அதைப் படித்தேன். அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தது, சிவாகாசியில் உரிமம் பெறாத பல ஆலைகள் இயங்கி வருகின்றன. இவைகளால் பெரும் அசம்பாவிதங்கள் கூட நடக்கும் வாய்ப்புக்கள் உள்ளன, என்று கூறியிருந்தார்.
  ஒரு பட்டாசு ஆலை இயங்க வேண்டும் என்றால் நான்கு கட்டங்களில் அவர்கள் தங்களை நிரூபித்து கடைசியாக பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரிகளிடம் உரிமம் பெறவேண்டும். இந்த  கடைசி விஷயம்தான்  மத்திய அரசின்  கீழ்வரும் பாதுகாப்பு பரிசோதனை அதிகாரிகளின் பாதுகாப்பு கண்காணிப்பு. அதற்குப் பிறகுதான் உரிமம் கிடைக்கும்.

    முதலில் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டால்தான் காவல்துறை வருவார்கள், எனவே, இந்த விபத்திற்கு காவல்துறை பொறுப்பேற்க முடியாது. அடுத்து வெடி விபத்து என்றால் தீயணைப்பு வருவார்கள். இவர்கள் மீதும் இந்த வெடிவிபத்துக்கான பொறுப்பை சுமத்த முடியாது. வெடி விபத்து ஏற்பட்டால் சிகிச்சை தருவார்கள் மருத்துவர்கள். எனவே மருத்துவர்கள் மீதும் பொறுப்பை சுமத்த முடியாது.

     இதை எல்லாம் தடுத்து நிறுத்தும் படியாக பாதுகாப்பு விதிமுறைகளுடன் இந்த பட்டாசு ஆலை இயங்குகிறதா என்று கண்காணித்து பின்னர் உரிமம் வழங்கு கிறார்களே அவர்கள் மீது இந்த பொறுப்பை சுமத்தலாம். அவர்கள்தான் இந்த வெடிவிபத்துக்கு முக்கியக் காரணம். இல்லை தங்களிடம் உரிமம் பெறாத ஆலை என்றால், அப்படிப்பட்ட ஆலைகள் இயங்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை, மாவட்ட ஆட்சியர், அடுத்து பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஆகிய மூவர் மீதும் பொறுப்பை சுமத்தலாம்.

     மேலும் முக்கியமாக நான் கூறவிரும்புவது, அவ்வளவு ஆபத்துக்கள் தரும் தொழிலான பட்டாசுத் தயாரிக்கும் தொழில்  நடந்து கொண்டிருக்கும் முக்கிய நகரமான சிவகாசியில் நல்ல போக்குவரத்து சாலைகள் இல்லை, மதுரை போன்ற அருகேயான நகரங்களில் தீக்காய சிகிச்சைக்கு வசதியான மருத்துவ மனைகள் இல்லை. போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை, தீயணைப்பு வண்டிகள் கூட ஒன்றிரண்டுக்கு மேல் இல்லை. இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இன்றைக்கு இந்த வசதிகள் அதிகமாக இருந்திருந்தால் மேலும் சிலரை இன்று காப்பாற்றி இருக்கலாம்" என்கிறார் அவர்.

No comments: