About Me

Monday, October 1, 2012

காந்தி ஜெயந்தி- ஒரு பார்வை


காந்தி – வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும்

தமிழ் சினிமாவில் வரும் “மாஸ்” திரைப்படங்கள் எப்படி இருக்கும்? ஹீரோ இளமையில் இருந்தே அதிபுத்திசாலியாக இருப்பார். அம்மா சென்டிமென்ட் இருக்கும். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இருக்கும். தன்வழியில் சிவனே என்று போய்க்கொண்டிருக்கும் ஹீரோவை வலிய வந்து வம்புக்கு இழுப்பான் வில்லன். அதன்பிறகு முட்டியை மடக்கிக் கைகளை உயர்த்தும் ஹீரோவிடம், வரிசையில் வந்து அடிவாங்கிச் செல்வார்கள் வில்லனின் அடியாட்கள். கடைசியில் பிரதான வில்லனை அடித்தோ அறிவுரை சொல்லியோ திருத்துவார் கதாநாயகன்.

காந்தியின் கதையும் சற்றொப்ப இதேபாணியில் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். (காந்தி பக்தர்கள் கொஞ்சம் நிதானிக்கவும்…) அவர் பெற்றோருக்குக் கட்டுப்பட்ட பிள்ளை, நன்றாகப் படிப்பவர், லண்டனுக்குப் படிக்கப் போகையில் மதுவைத் தொடமாட்டேன், பெண்களைப் பார்க்கமாட்டேன் என்ற சத்தியங்களைச் செய்தார். தென்னாப்பிரிக்காவில் அவரது வக்கீல் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது வெள்ளையன் ஒருவனால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். பிறகு மக்களைத் திரட்டிப் போராடினார். கடைசியாக இந்தியாவுக்கு கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் சுதந்திரம் வாங்கித்தந்தார்.
ஜாலியன் வாலாபாக்கில் பயன்படுத்தப்பட்டது துப்பாக்கிகள் என்பதால் மேற்சொன்ன வாக்கியம் பாதி உண்மை என்றே கொள்வோம். (எப்படியோ கத்தி இல்லை இல்லையா?!) 1915ல் இந்தியாவுக்கு வந்த காந்தியிடம் நூற்றைம்பது வருட விடுதலைப் போராட்டத்தின் ஒட்டுமொத்த ராயல்டியும் தரப்பட்டது எப்படி? போகட்டும், விடுதலை அவர் பேசி வாங்கித் தந்ததாகவே வைத்துக்கொள்வோம். அதற்காக அவரைத் தேசத்தந்தை என்றோ அல்லது தேச சித்தப்பா என்றோ அழைப்பது சரி. மகாத்மா எனும் அடைமொழி ஏன் காந்தி பெயரோடு எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கிறது?
எந்த கேள்வியும் இல்லாமல், தோராயமாக மூன்று தலைமுறை மக்கள் காந்தியை ஏற்றுக்கொள்ள பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவரது வாழ்வின் சில நேர்மறையான அம்சங்கள் மட்டும் மக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டு அவரை மகாத்மாவாகவே வைத்திருக்கும் வேலை இன்றளவும் தொடர்கிறது. காந்தி கொண்டாடப்பட வேண்டியவராகவும் பின்பற்றப்பட வேண்டியவராகவும் நூறாண்டுகாலமாக பிரசாரம் செய்யப்படுகிறார். சமகால அரசியல்வாதிகளில் தொடங்கி அவ்வப்போது வந்துபோகும் அண்ணா ஹசாரே, அப்துல் கலாம் போன்ற காமெடி டிராக் நபர்களையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள காந்தியைத் தெரிந்துகொள்வது அவசியம். அவர் பயன்படுத்திய அல்லது அவருக்காகப் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்தியாவில் ‘மாகாத்மா’ காந்தியின் காலம் 1915ல் தொடங்குகிறது. சத்யாகிரகம் எனும் தொழில்நுட்பத்துக்கான பேட்டன்ட்டுடன்தான் அவர் நம் நாட்டுக்கு வந்தார். சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து 1921ல் அவர் அகில இந்திய காங்கிரசுக்கு தலைவராகிறார். பெரிய அளவில் ஊடக வலுவில்லாத அந்தக் காலத்தில், வெறும் ஆறாண்டு காலத்தில், காந்தியால் முப்பதுகோடி மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தின் தலைவராக முடிந்ததன் விளைவுதான், திடீரென ஒருநாள் இரவில் அண்ணா ஹசாரேவால் ஊழல் ஒழிப்புப் போராளியாக முடிகிறது.
சத்யாகிரகம் என்பது வெள்ளையன் உதைவாங்காமல் நாட்டை ஆள உருவாக்கப்பட்ட போராட்டமுறை மட்டுமல்ல. பிரிட்டிஷ் அரசுக்கெதிராக வீரத்துடன் போராட முன்வந்தவர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி, அவர்களைச் சொந்த மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் நோக்கமும் அதற்கு இருந்தது. காந்தியின் ஜால்ராக்களில் ஒன்றான அன்றைய ஆனந்தவிகடன் 1929 மே இதழில், பகத்சிங் பாராளுமன்றக் கட்டடத்தின் மீது குண்டு வீசியதைக் கண்டிக்கும் தலையங்கத்தைப் பாருங்கள்:
// இரண்டு இளைஞர்கள் திடீரென எழுந்து இரண்டு அசல் வெடிகுண்டுகளை எறிந்துவிட்டு, கைத்துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம். இந்த இளைஞர்கள் இருவருக்கும் முழுமூடச் சிகாமணிகள்என்றபட்டத்தை விகடன் அளிக்க விரும்புகின்றான். முதலாவதாக, மகாத்மாவின் சத்தியாக்கிரகப் பீரங்கியினால் தகர்க்க முடியாத அதிகார வர்க்கத்தை வெங்காய வெடியினாலும், ஓட்டைத் துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள் எண்ணியது மூடத்தனம்…//
காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் தெரிவு செய்யப்பட்டபோது, ‘பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி’ என பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார் காந்தி. காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்ய, சுபாஷ் வெறுத்துப் போய் பதவியை உதறினார். பகத்சிங் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை குறித்து காந்தியின் ஆலோசனையைக் கேட்டு இர்வின் பிரபுவின் செயலாளர் கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தியின் விசுவாசி பட்டாபி சீதாராமையா எழுதிய பதில் இதுதான்:
//“Ganthi himself definitely stated to the Viceroy that, if the boys should be hanged, they had better be hanged before the Congress, than after.”// (அதாவது அப்போது நடைபெற இருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னரேயே இந்த இளைஞர்களைத் தூக்கிலிடலாம் என்று காந்தியார் ஒப்புதல் வழங்கியுள்ளார்.)
இவ்விரு சம்பவங்களும் சொல்லும் கருத்து இதுதான். எந்த ஜனநாயக பண்புகளும் இல்லாத, தனக்கு நிகரான வேறு தலைவர்கள் உருவாவதையோ அல்லது தனக்கு இணையாக வேறொரு நபர் புகழ் பெறுவதையோகூட விரும்பாத தலைவராக இருந்திருக்கிறார் காந்தி. (அப்போது காந்தி அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் பகத்சிங் எனக் குறிப்பிடுகிறார் காங்கிரசின் அதிகாரபூர்வ வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா- The History of Indian National Congress நூலின் முதலாவது பாகம்.)
காந்தியின் சமத்துவ சிந்தனையும் பாசாங்குகள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. இறுதி நாள்வரை அவர் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களைப் பற்றிக் கொண்டவராகவே இருந்தார். அம்பேத்கரை தலித் மக்களின் தலைவராக அங்கீகரிக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தவர் காந்தி. தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரும் சட்டம் கொண்டுவருவதில் லண்டன் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரை வெல்ல முடியாத காந்தி, தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரக்கூடாது என்பதற்காக, எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். தலித் மக்களின் விடுதலைக்கான அவரது முயற்சி, காந்தியைக் கொல்ல அவர் காட்டும் பிடிவாதமாக காங்கிரஸ்காரர்களால் திரிக்கப்பட்டது. காந்தி எனும் ஒற்றை நபருக்காக ஒட்டுமொத்த தலித் மக்களின் உரிமைகளையும் விட்டுத்தர வேண்டிய நிலைக்கு ஆளானார் அம்பேத்கர்.
தலித் மக்கள் ஏனைய உயர்சாதி மக்களை சார்ந்திருக்கும்படியாகவும் ஏழைகள் பணக்காரர்களை சார்ந்திருக்கும்படியாகவும் உள்ள சமூகத்தைத்தான் அவர் விரும்பினார். அவர் வலியுறுத்தியது சாதிகளுக்குள் இணக்கம் இருக்கவேண்டும் என்பதுதான், சாதி ஒழிப்பல்ல. (சாதி ஒழியவேண்டும் என காந்தி சொல்லவில்லை- ராஜாஜி.) அது வேலைக்காரனுக்கும் முதலாளிக்குமான இணக்கம். அது வேலைக்காரன் அடிமையாக இருக்கும் வரைதான் சாத்தியம். பணம் பணக்காரர்களிடம்தான் இருக்கவேண்டும், ஏழைகளுக்கு அவர்கள் புரவலர்களாக இருப்பார்கள் எனும் காந்தியின் சொற்றொடர் ஒன்றே போதும், அவர்களது செல்வந்தர்கள் மீதான பாசத்தைக் காட்ட.
Sarla Devi
தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே. மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி. இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது. அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது.
ஒருநாள் தூக்கத்தில் அவருக்கு விந்து வெளியேறியதால் அவரது பிரம்மச்சர்யத்தைப் பரிசோதிக்க எடுத்த முடிவு அநாகரிகமானது. பதினெட்டு வயதான அவரது பேத்தி மனுவுடன் ஓரிரவு ஆடையில்லாமல் படுக்கையில் இருப்பதன் வாயிலாக தனது பிரம்மச்சர்யத்தை அவர் பரிசோதித்தார். காந்தி தன்னுடன் ஆசிரமத்தில் இருந்த பெண்களை உடலுறவு இல்லாமல் வாழும்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தினார். ஆசிரமப் பெண்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருந்தது அவரது தொண்டர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது. மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக்கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். (“I am taking service from the girls” என்று காந்தி பலமுறை இதைப்பற்றிக் கடிதங்களில் குறிப்பிடுகிறார்.) - “மோகன்தாஸ்” புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி.
மேற்கூறிய செய்திகள் வாயிலாக நான் காந்தியைப் பெண் பித்தர் எனச் சொல்ல வருவதாக எண்ண வேண்டாம். அவரது திருமணத்து வெளியேயான உறவுகள் என்பது அவரது தனிப்பட்ட விடயம் என்பதில் எனக்கு விமர்சனம் இல்லை. ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக, தன்னைப் பின்பற்றிய, தன்னுடனிருந்த  பெண்களை, ஒரு கருவிபோல மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிச்சயம் விமர்சனம் செய்யப்படவேண்டியதே. பிரம்மச்சர்யத்தை சோதித்துத் தன்னை நிரூபித்தார், சரி, அதில் பயன்படுத்தப்பட்ட மனுவின் கதி?
Manu
இத்தகைய முரண்பாடான அரசியல் மற்றும் சொந்த வாழ்வைக் கொண்டிருந்த காந்தி ஏன் இன்றளவும் அப்பழுக்கற்றவராகக் காட்டப்படுகிறார்? இந்தக் கேள்வியை எழுப்பவே மேலேயுள்ள தகவல்களைத் தர வேண்டிய அவசியம் உருவாகிறது. அவரது கதை ஏதோ ராமாயணம் அல்லது திருத்தொண்டர் புராணம் போலவோ, வெறும் பஜனையாகவோ பாடப்பட்டால் நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. மாறாக, அவர் தேசத்தின் முகமாகக் காட்டப்படுவது வேறு பல காரணங்களுக்காக.
விடுதலைக்கு முன்பாக சத்தியாகிரகம் எப்படி ஆங்கிலேயனுக்குத் தேவைப்பட்டதோ இப்போதும் அது நவீன அதிகார வர்க்கத்துக்கும் தேவைப்படுகிறது. காந்தியை ஆதர்ச தலைவனாகத் தொடர்ந்து முன்னிறுத்துவதன் மூலம்தான், அனேக மக்கள்திரள் போராட்டங்களைத் தீவிரவாதமாகச் சித்திரிக்க முடியும். சமீபத்தில் கூடங்குளம் போராட்டம் பற்றி சுப்பிரமணியம் சாமி சொன்ன ஒரு விமர்சனம்- “அது நக்சலைட்டுக்கள் நடத்தும் போராட்டம்.” (டைம்ஸ் நவ் டிவியில்.) ஆக ஒரு போராட்டம் நடத்தப்படும் காரணிதான் அதனை சாத்வீகப் போராட்டமா அல்லது தீவிரவாதமா என அதிகாரவர்கத்தை முடிவெடுக்க வைக்கிறது. காந்தி எனும் பிம்பத்தை உயிருடன் வைத்திருப்பது இந்த கபடத்தனத்தைச் சுலபமாக்குகிறது.
ராகுல் காந்தியின் ஒரு கோடி ரூபாய் ஏழைவீட்டுச் சப்பாத்திக்கான யோசனை எம்.கே.காந்தியிடமிருந்து பெறப்பட்டதுதான். அவர்தான் பிர்லா கட்டிக்கொடுத்த மாளிகைகளில் தங்கிக்கொண்டு இந்தியாவின் கடைக்கோடி ஏழைகளைப்போல உடுத்திக்கொண்டிருந்தவர். காரணமேதும் தெரியாமல் காந்தி மகாத்மா என அடைமொழியிட்டு அழைக்கப்பட்டதன் விளைவுதான் தளபதி, அஞ்சாநெஞ்சன், புரட்சித்தலைவி என அடைமொழிகள் பொருத்தமில்லாத நபர்களை அலங்கரிக்கின்றன.
மதத்தை அரசியலுடன் கலந்தது மற்றும் பஜனையைப் போராட்டமாக்கியது என அவர் இந்திய அரசியலுக்கு இரண்டு மோசமான முன்னுதாரணங்களைத் தந்திருக்கிறார். இந்து வைணவரான காந்தி தன் ராம பக்தியைத் தன்னுடன் மட்டும் வைத்துக்கொள்ளாமல் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்தார். பாரதீய ஜனதா பிற்பாடு இந்த அடிப்படைவாதத்தில் ஏராளமான ரத்தத்தைக் கலந்து வளர்ச்சியடைந்தது.
காந்தி சாத்வீகத்தை மக்கள் போராட்டத்தில் மட்டும்தான் வலியுறுத்தினார். இயல்பில் அவர் ஒரு சர்வாதிகாரியாகவே இருந்திருக்கிறார். பம்பாய் கப்பற்படையினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்க தனது தொண்டர்களை அனுப்பியது காங்கிரஸ் கட்சி. அதன் தோல்விக்குப் பிறகு காந்தி சொன்னது:
அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழவிரும்பவில்லை. மாறாகத் தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்” (: ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946.)
அவர் நடத்த விரும்பிய அரசு வெள்ளையன் நடத்திய ஆட்சியை ஒத்ததாகவே இருந்திருக்க முடியும். இரண்டாம் உலகப் போரில் இந்தியர்கள் பங்கேற்பதை அவர் தயக்கமில்லாமல் விரும்பினார், வெள்ளையனைப் போலவே. பெஷாவரில் நடைபெற்ற எழுச்சிமிக்க மக்கள் போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு தன் படைகளை அனுப்பியது. சொந்த மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வீரர்கள் மறுத்தார்கள். அதனைக் கண்டித்து காந்தி சொன்ன வாசகங்கள்:
”இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுடவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அவன் கீழ்ப்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதைச் செய்ய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும்போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும்  பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும்போதும் இவர்கள் இதே போல கீழ்ப்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்.’’
பிடிவாதம், எதேச்சதிகாரம், மத அடிப்படைவாதம், ஜனநாயக விரோதம் என நம் சமகால அரசியல்வாதிகளில் எல்லா அடாவடிகளையும் அப்போதே கொண்டிருந்தவராக இருந்திருக்கிறார் காந்தி. எத்தனை உதைத்தாலும் வாங்கிக்கொள் என அவர் மக்களுக்கு மட்டும் அறிவுரை சொன்னதால்தான் இன்றுவரை அவரை அதிகாரவர்க்கம் கொண்டாடுகிறது.
எனக்கு வண்ணதாசனைப் பிடிக்கும் என்பது மாதிரியான நிலைப்பாட்டை நாம் காந்தியின் மீது வைக்க முடியாது. காந்தியை ஏற்றுக்கொள்ளும்போதே நீங்கள் பகத்சிங்கை நிராகரிக்கிறீர்கள், கட்டபொம்மனின் தியாகத்தைக் குறைத்து மதிப்பிடும் மனோநிலைக்கு ஆளாகிறீர்கள். பாஸ்கோவுக்கு ஆதரவாக, பழங்குடிகளுக்கு எதிராகத் தரகு வேலை பார்க்கும் மன்மோகன் கும்பலும்தான் காந்திய வழியிலான அரசை நடத்துவதாக கருதிக்கொள்ளலாம், அதற்காக அவர் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ள அவசியமிருக்காது.
நிறைவாக, காந்தியைக் கொண்டாடாதீர்கள் எனக் கேட்பதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை. கொண்டாடும் முன்பு அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்ளவே எழுதப்படுகிறது. காந்தியின் நோக்கங்கள் உயர்வானவை, நடைமுறைப்படுத்துவதில் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என நீங்கள் வாதிட்டால் அதற்கு காந்தியின் வார்த்தைகளிலேயே பதில் இருக்கிறது,
“முடிவைவிட முறையே முக்கியம்!” (சௌரி சௌரா சம்பவத்துக்காக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது காந்தி உதிர்த்த வாசகம்.)
-வில்லவன்

காந்தி தோளில் ஹிட்லர்

அதை மகாத்மாவின் விஸ்வரூப தரிசனம் என்று சொல்லலாம். விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தில் எப்படி தெய்வங்களெல்லாம் அவருடைய உடலெங்கும் இருந்தார்களோ, அதேபோல எல்லா தலைவர்களும், அபுல் கலாம் ஆசாத், பகத் சிங், திலகர், நேரு என எல்லா இந்தித் தலைவர்களும், காந்தியின் உடலெங்கும் வியாபித்திருக்க, மகாத்மா அருளாசி வழங்குவது போல கையை உயர்த்திக்கொண்டிருக்கிறார். அவரது தோளில் பண்டா பகதூர், அடால்ப் ஹிட்லர் மற்றும் முஸோலினி. அவரது இடதுதோளின் மேல் அகண்ட பாரதத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்கு ஆசி அளிக்கிறார். வலதுபக்கம் அவருக்கு மேலே பாரத அன்னை அவருக்கு ஆசி அளிக்கிறார். 1940களில் விடுதலைக்கு சில ஆண்டுகள் முன்னால் மத்திய இந்தியாவில் புழங்கிய காந்தி படம் இது.
இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்கிற எண்ணம் ஒரு பக்கம். மறுபக்கம் பிரிட்டிஷார் மீது உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச கட்டாயங்கள் இறை சித்தம் என்கிற எண்ணம். இதில் மகாத்மா காந்தி ஒரு மனிதரல்ல. அவர் ஒரு மகா மனிதன். இந்திய விடுதலைக்காக போராடியவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் காந்தியின் அணியில் வலு சேர்த்தவர்கள் என்கிற ஒரு கருத்தாக்கம் வெளிப்படுகிறது.
மற்றொரு சித்தரிப்பு. மார்கண்டேயனாக இந்திய அன்னை சிவலிங்கத்தை அணைக்க, எமனாக வரும் பிரிட்டிஷை எட்டி உதைக்கும் சிவன் சிவலிங்கத்திலிருந்து வெளிப்படுகிறார். அப்படி வெளிப்படும் சிவபெருமான் காந்தியேதான். பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட ஆனால் பிரபலமாகிவிட்ட 1930களின் காந்தி சித்தரிப்பு இது.
நுணுக்கமான விதத்தில் ‘காந்தி நீட்சேயின் மகாமனிதனா’ என்கிற கேள்வியை இது எழுப்புகிறது. சங்கல்பத்தின் சக்தியை ஆயுதமாக முன் வைத்தவர். சூரியன் அஸ்தமிக்காத பேரரசுக்கு எதிராக ஆயுதமற்ற மக்கள் கூட்டத்தின் தனிமனித எதிர்ப்பை அவர் முன்வைத்தார். ஹிட்லருக்கும் காந்திக்கும் உள்ள ஒற்றுமையும் அதிமுக்கிய வேற்றுமையும் இதிலேயே உள்ளன. ஹிட்லர் தன்னை நீட்சேயின் மகாமனிதனாக கற்பனை செய்துகொண்ட தலைவர்.
காந்தியும் சரி ஹிட்லரும் சரி இருவருமே விசித்திர சித்தர்கள்தான். தங்கள் முடிவுகளை அறிவுக்கும் தர்க்கத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு அக-அறிதலிலிருந்து பெற்றார்கள். இருவரும் அதற்கு பயன்படுத்திய வார்த்தைகள்கூட ஏறக்குறைய ஒன்றுதான் – ‘inner voice’  - அகக்குரல்.
”அழிக்கமுடியாத அக ஏற்பு இருந்தால் மட்டுமே நான் செயல்படுவேன். இதுதான் சரி என அந்த அக ஏற்பு இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன். நான் காத்திருப்பேன். கட்சியினர் அனைவருமே என்னை செயல்பட நிர்ப்பந்தித்தாலும் நான் செயல்பட மாட்டேன். நான் காத்திருப்பேன். என்ன நடந்தாலும் சரி, நான் காத்திருப்பேன். ஆனால் என் அகக்குரல் பேசினால் அப்போது செயல்படவேண்டிய காலம் வந்துவிட்டது என்று பொருள்.” காந்தி சொல்லியிருக்க முடிந்த ஹிட்லரின் வார்த்தைகள் இவை. காந்தி மீண்டும் மீண்டும் தன் அகக்குரலின் முக்கியத்துவத்தை குறித்துக் பேசியிருக்கிறார். அதுவே தன்னை தன் செயல்பாடுகளை முழுமையாக வழி நடத்திச் செல்வதை அவர் கூறியிருக்கிறார்.
காந்தியின் முதல் அகக்குரல் ஒலித்த தருணம் சுவாரசியமானது:
15 பிப்ரவரி 1918. அகமதாபாத் துணி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றை காந்தி வழிகாட்டி நடத்திக்கொண்டிருந்தார். 22 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் இயக்கம் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளிலிருந்து பின்னடைவதை காந்தி உணர்ந்தார். “அன்று காலை தொழிலாளர் தலைவர்களுடன் நான் பேசியபோது என்னை அறியாமலே என் வாயிலிருந்து வார்த்தைகள் அவையாகவே வெளிவந்தன: ஒரு முடிவு காணும் வரை தொழிலாளர்கள் தொடர்ந்து போராடவேண்டும். அதற்கு இணைங்கி இணையவேண்டும். அதுவரை நான் உணவைத் தொட மாட்டேன்.”
அதற்குப் பின்னரும் அவர் செய்த பல உண்ணா விரதப் போராட்டங்கள் இந்த ‘அகக்குரல்’ இட்ட ஆணையின்படி அவர் செய்த முடிவுகளே ஆகும். இந்தக் குரல் அவருக்கு இடும் கட்டளைகள் அவருடைய மிக அணுக்கமானவர்களுக்குகூட தெரியாமலே இருந்தது. பல நேரங்களில் அவரது அணுக்கத் தளபதிகளான நேரு, படேல் போன்றவர்களுக்குக்கூட அது அதிசயமான எதிர்பாராத முடிவாக அமைந்தது. காந்தி தன் அகக்குரலை இறை குரலாக கண்டறிந்தார். அது தனது அகம்பாவத்தின் குரல் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
காந்தியின் அகக்குரலுக்கும் ஹிட்லரின் அகக்குரலுக்குமான வேறுபாடு இறுதியாக தனிமனிதனில் முடிகிறது. தனிமனிதன் அவன் முழுமையான சுதந்திரத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலையில் காந்தியின் இயக்கம் அவனை நிறுத்துகிறது. அகிம்சை, சத்தியம் ஆகியவை குறித்த தனிமனித புரிதலே இறுதி கணத்தில் அதிகாரத்தின் முன்னால் தனிமனித எதிர்வினையை தீர்மானிக்கிறது. ஹிட்லரின் அகக்குரல் உருவாக்கிய இயக்கத்தில் இறுதி முடிவு தனிமனித சுதந்திரத்தால் அல்ல, கீழ்படிதல் மூலமாக மட்டுமே.
காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதங்களும், ஹிட்லர் காந்தி குறித்து பிரிட்டிஷாருக்கு அளித்த அறிவுரையும் இவ்வேறுபாடுகளை வெளிப்படுத்தும். இந்தியாவில் வைஸிராயாக இருந்த இர்வின் ஹிட்லரை சந்தித்தபோது ஹிட்லர் கூறினார், “இந்தியாவில் நீங்கள் ஏன் இத்தனை கஷ்டப்படுகிறீர்கள்? காந்தியைச் சுட்டுக் கொல்லுங்கள்… கலகம் அடங்கவில்லையா, இன்னும் கொஞ்சம் காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக் கொல்லுங்கள். எத்தனை சீக்கிரமாக இது ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்யும் மக்களை அடக்கும் என்பது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.”
காந்தியின் முதல் கடிதம் 23-ஜூலை-1939ல் எழுதப்பட்டது. காந்திக்கே உரிய விதத்தில், தன்னைச் சுட்டுக்கொல்ல அறிவுரை கொடுத்த ஹிட்லரை, தன் நண்பன் என்றே அழைக்கிறார். ‘இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதலாமா தெரியவில்லை. தவறென்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்.’ மேலும் எழுதுகிறார்: “இன்றைய சூழலில் உலகின் மிக மோசமான போரை தவிர்க்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நபர் நீங்கள்தான்.” பிறகு அகிம்சையே சிறந்த ஆயுதம் எனச் சொல்லி அதனைப் பயன்படுத்த கோருகிறார் காந்தி. எதற்கான ஆயுதம்? ‘நீங்கள் விரும்பும் இலக்கை – அது எத்தனை மதிப்பு வாய்ந்ததாக உங்கள் பார்வையில் இருந்தாலும் – அந்த இலக்கை அடைய அகிம்சையே சிறந்த ஆயுதம்’. ஹிட்லரின் இந்த ‘மதிப்பு வாய்ந்த இலக்கு’ போலந்து என்பதை 1939ன் சூழல் காட்டும். போலந்தின் ஜெர்மானிய இன சிறுபான்மையினர் அன்றைய போலந்தில் கொடுமைகளை அனுபவித்தனர். யூதர்களுடன் ஒப்பிடுகையில் அது பெரிய ஒரு கொடுமை இல்லை என்றாலும், போலந்தின் ஜெர்மானிய சிறுபான்மையினருக்கு ஆதரவாக ஜெர்மனி குரல் எழுப்பி வந்தது. அதை தன் ஆக்கிரமிப்புக்கான துருப்புச்சீட்டாகவும் பயன்படுத்தி வந்தது. இந்நிலையில்தான் போலந்தின் ஜெர்மானிய சிறுபான்மையினருக்காக அகிம்சையைப் பயன்படுத்தும்படி ஹிட்லருக்கு ஆலோசனை அளிக்கிறார் காந்தி.
ஆனால் காந்தி கடிதத்தை எழுதிய நேரம் முக்கியமானது. இரண்டாம் உலகப் போரின் முழுமையான சுழலுக்குள் தேசங்கள் இழுக்கப்படவில்லை. ஹிட்லர் அகிம்சைப் போராட்டம் ஒன்றின் மூலம் போலந்து ஜெர்மானிய சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது சுவாரசியமான மாற்று வரலாறு! Parallel Universes வைத்து அறிவியல் புனைகதை எழுதுவோர் கற்பனை செய்யலாம்! எதுவானாலும் பிரிட்டிஷ் அரசாங்கம் இக்கடிதத்தைப் போக அனுமதிக்கவில்லை.
காந்தியின் இரண்டாவது கடிதம் 1940ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் முன்னிரவில் எழுதப்பட்டது. இதிலும் காந்தி ஹிட்லரை ‘என் நண்பரே’ என விளித்து ‘தங்கள் உண்மையுள்ள நண்பன்’ என்றே முடிக்கிறார். ‘நான் உங்களை நண்பனாக விளிப்பது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் இல்லை. …எனக்கு எதிரிகள் இல்லை. என் 33 ஆண்டு காலப் பொதுவாழ்வில் நான் எப்போதும் அனைத்து மக்களிடமும், நிறம், மதம், தேசம் ஆகிய பிளவுக்களுக்கெல்லாம் அப்பால், நட்புடன் இருக்கவே முயன்று வருகிறேன்…’ அடுத்ததாக ஹிட்லரின் தேசப்பற்றையும் வீரத்தையும் பாராட்டுகிறார். அதில் அவருக்கு ஐயமில்லை. அதே போல ஹிட்லருக்கு எதிராக அவரது எதிரிகள் உருவாக்கும் ராட்சச சித்திரம் பொய்யானதாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் ‘உங்கள் எழுத்துகளையும் செய்கைகளையும் பார்க்கும்போது உங்கள் செயல்பாடுகளில் பல அரக்கத்தனமாகவும் மானுட நன்மைக்கு எதிராகவும் இருக்கின்றன என்பதுதான் உண்மை.’ காந்தி நேராக வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அடுத்ததாக ‘நாசியிசத்தையும்’ ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும்’ ஒரு சேர எதிர்ப்பதாக காந்தி கூறுகிறார். இறுதியாக கூறுகிறார், “பிரிட்டிஷ் இல்லையென்றால் உங்கள் செயல்முறைகளில் உங்களைவிட வலிமையான இன்னொரு எதிரி உங்களை தோற்கடிப்பார். நீங்கள் உங்கள் தேச மக்கள் பெருமைப்படும்படியான ஒரு பாரம்பரியத்தை அவர்களுக்கு அளிக்கப் போவதில்லை.”
வரலாறு காந்திய சொன்ன வார்த்தைகளின் உண்மையை பறைச்சாற்றும். காந்தியின் அகக்குரல் ஹிட்லரின் அகக்குரலைக் காட்டிலும், சர்வதேச நிலையையும் அதன் விளைவுகளையும் நன்றாகவே புரிந்து வைத்திருந்தது.  இந்தியாவைப் பொருத்தவரை இந்திய தேசியவாதிகளின் பொதுப்புத்தி ஹிட்லரை தம் ஆதரவாளராகவே கண்டது. ஸ்ரீ அரவிந்தர் போன்றவர்கள் ஹிட்லரைத் தீய சக்தி என்று வர்ணித்தனர். நாசிகளுக்கு எதிராக இந்தியர்கள் பிரிட்டிஷை ஆதரித்தால்கூடத் தவறில்லை என்பது அரவிந்தரின் நிலைபாடு. ஆனால் சுபாஷ் போஸின் நாசி ஆதரவு கோரல் மக்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. ஆனால் காந்தியே மகாத்மா. விடுதலைப் போராட்டத்தின் இறை அவதாரம். உலக நிகழ்வுகள் அனைத்தும் அந்த அவதாரத்தின் போக்குக்கு இணைந்தே செயல்படுகின்றன. இந்த இந்தியப் பொதுப்புத்தியில் ஹிட்லரும் காந்தியின் ஒரு கருவி.
எனவேதான் காந்தி தோளில் ஹிட்லர்.
-அரவிந்தன் நீலகண்டன்

காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா?

காந்தியைப் பற்றி இந்தியர்களிடம் பெரும்பாலும் கீழ்க்கண்ட கருத்துகள் இருக்கும்.
1. காந்தி ஒரு தெய்வம். (புத்தர், இயேசு, காந்தி – என்ற வரிசையில் வைக்கப்படுகிறவர்.)
2. காந்தி ஒரு மகான், மாமனிதர். அவரை மாதிரி ஒரு மனிதர் இனி பிறந்துவருவார் என்பது சந்தேகமே.
3.  காந்தி ஒரு பொய்யன். பொறுக்கி. ஏமாற்றுக்காரன். செக்ஸ் வெறியன், பித்தலாட்டவாதி. மனுவாதி.
இவை எவையுமே என்னைக் கவருவதில்லை. காந்தியை, காந்திஜி என்றோ மகாத்மா காந்தி என்றோ அழைக்க என் மனம் ஒப்புவதில்லை. காந்தி ஒரு சாதாரண மனிதர் என்றே நான் கருதுகிறேன். அதுவே என்னை அவர்மீது ஆர்வம் கொள்ளவைக்கிறது. அவர் அசாதாரணமானவர் என்றால் அதனால் சாதாரண மனிதனான எனக்கு எந்தப் பயனுமில்லை.
நான் இப்போது படித்துக்கொண்டிருக்கும் (இன்னும் முடிக்காத) ஒரு புத்தகம் Great Soul: Mahatma Gandhi and His Struggle With India. எழுதியவர் ஜோசஃப் லெலிவெல்ட். காந்தியை எப்படி அணுகுவது என்பதை இந்தப் புத்தகம் எனக்குக் காட்டுகிறது.
மனிதர்கள் யாருமே புனிதர்களாகப் பிறப்பதில்லை. அவர்களது கருத்துகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஏன் மாறுகின்றன? சூழல் மாறுகிறது. புரிதல் மாறுகிறது. தவறு என நாம் நினைத்தவை தவறல்ல, சரி என நாம் நினைத்தவையும் சரியல்ல என்று தோன்றுகிறது. எனவே கொண்டிருக்கும் கருத்துகளும் மாறுகின்றன.
காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். காந்தி முதலில் தன்னை பிரிட்டிஷ்காரர்களுக்கு இணையாகப் பார்க்கிறார். பிரிட்டன் சென்று வக்கீலுக்குப் படித்த தன்னை வெள்ளையர்கள் மதிக்கவேண்டும் என்று நினைக்கிறார். அதன்பின், தன்னைச் சுற்றியுள்ள படித்த இந்திய வர்க்கத்தவர் நலன்களை முன்வைக்கிறார். பிறகு பணம் படைத்த வர்த்தகர்களின் நலனை முன்வைக்கிறார். அந்தக் கட்டத்தில் இந்தியக் கொத்தடிமைகள் பற்றியோ ஆப்பிரிக்க “காஃபிர்கள்” பற்றியோ அவர் கவலைப்படுவதில்லை. பிறகுதான் இந்தியக் கொத்தடிமைகளை முன்வைத்து ஒரு போராட்டத்தில் இறங்குகிறார். அப்போதும், ஆப்பிரிக்கர்களைத் தம் போராட்டத்தில் இணைத்துக்கொள்வது பற்றி அவர் யோசிப்பதில்லை. சொல்லப்போனால், அப்படிச் செய்வது இந்திய நலனுக்கு எதிரானதாக இருக்கும் என்றே அவர் சொல்கிறார். அதன்பின் அவர் இந்தியா வந்துவிடுகிறார்.
ஓர் உலக மனிதர் (யூனிவர்சல் ஹ்யூமனிஸ்ட்) என்பவர் என்ன செய்திருக்கவேண்டும்? மக்களின் உரிமைக்காகப் போராடவேண்டும் என்றால் காந்தி முதலில் என்ன செய்திருக்கவேண்டும்? தென்னாப்பிரிக்காவில் இருக்கும்போதே அங்குள்ள கருப்பர் நலனுக்காகத்தானே முதலில் போராடியிருக்கவேண்டும்? கருப்பர்கள் தலைவர்களுடன் உடன்பாடுகளைச் செய்துகொண்டிருக்கவேண்டும். கருப்பர்கள், இந்தியக் கொத்தடிமைகள், பிற இந்தியர்கள் என அனைவரையும் சேர்த்து, ஒரு குடையின்கீழ் திரட்டி வெள்ளையர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தில்தானே அவர் இறங்கியிருக்கவேண்டும்?
புத்தர்போன்றோ இயேசுபோன்றோ காந்தி தெய்வமோ அல்லது சக்தி படைத்தவரோ அல்லர் என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு இதைப் பாருங்கள். காந்திக்கு, தான் முன்னெடுக்கும் போராட்டங்கள் எப்படிச் செல்லும் என்பது தெரியாது. போராட்ட முறை தெரியாது. எதிராளி எப்படி நடந்துகொள்வான் என்பது தெரியாது. தன் பின்னால் அனைவரும் திரண்டுவருவார்களா என்பது தெரியாது. எனவே மிகவும் உத்தேசமாகத்தான்  (tentative) போராட்டத்தின் பல்வேறு கட்டங்களில் இறங்குகிறார். அரசியல் பிரக்ஞையற்ற, போராட்ட குணமற்ற ஒரு கூட்டத்தை வழிநடத்திச் செல்லவேண்டும். அதனால்தான் சிறுசிறு இலக்குகளாக வைத்துக்கொண்டு முன்னேறுகிறார். மேலும் அவர் உண்மையிலேயே கருப்பர்களின் நலனை அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. அவரது உடனடி நலன் (immediate concern) என்பது இந்தியர்களுக்குப் பெற்றுத் தரவேண்டிய மிகச் சிறிய சலுகைதான். வேறு எதையும் பெறமுடியும் என்று அவருக்கு அப்போது நம்பிக்கை இருந்திருக்கவில்லை.
காந்தியை புனிதராக, தெய்வமாகப் பார்க்கும்போது நமது எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறாகத்தான் இருக்கும். தெய்வம் என்றால் இரண்டு அஸ்திரங்களை விட்டு ஸ்மட்ஸையும் போத்தாவையும் கொன்று தள்ளியிருக்கலாம். மதம்கொண்ட நலகிரி யானையை புத்தர் அடக்கியதுபோல கைகளை உயரே தூக்கி ஸ்மட்ஸை அடிபணியவைத்து வேண்டியதைப் பெற்றிருக்கலாம். ஆனால் நிதர்சன உலகத்தில் சாதாரண ஒரு மனிதன், தட்டுத் தடுமாறி, இப்படிச் செய்யலாமா, அப்படிச் செய்யலாமா என்று முயன்று பார்ப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நமக்குத் தெளிவு கிடைத்துவிடும்.
அதேபோலத்தான் இந்தியாவிலும். சுதந்தரம் பற்றி அவருக்கென்று சில பிரத்யேகமான கருத்துகள் இருந்தன. சுதந்தரம் என்பதை அவர் தனியாகவே பார்க்கவில்லை. சுயராஜ்யம் கிடைக்கவேண்டும் என்றால் இந்தியர்கள் நான்கு கருத்துகளை ஏற்கவேண்டும் என்றார் அவர்:
1. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முழுமையான ஒற்றுமை
2.  தீண்டாமையை முற்றிலுமாக ஒழிப்பது
3.  அகிம்சையை முற்றிலுமாக ஏற்பது
4.  கதரை அடிப்படையாகக்கொண்டு கிராமப் புனரமைப்பைச் செய்வது
ஆனால் காந்தியின் மிக நெருங்கிய சீடர்கள்கூட இவை அனைத்தையும் ஏற்கவில்லை. அவர்களுக்கு ஏதேனும் ஒன்றிலாவது மாற்றுக் கருத்து இருந்தது. காந்தியோ தம் கருத்துகளை மாற்றிக்கொள்வதாக இல்லை. தொண்டர்களைச் சேர்க்கவேண்டும் என்பதற்காக அவர் தன் கருத்துகளில் சமரசம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அதே நேரம் தன் கருத்துகளை கடைமட்டத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் அவர் அறிந்தே இருந்தார்.
இறுதியில், மேலே சொன்ன நான்கில் அகிம்சை வழியிலான போராட்டம் என்பதைத் தவிர வேறு எதையுமே காங்கிரஸ் அமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் மனத்திலும் மாற்றம் வரவில்லை. சுதந்தரம் அடைந்து 64 ஆண்டுகள் கழித்து இன்றும்கூட, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஆகியவற்றில் மக்கள் மனத்தில் மாற்றம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது காந்தியின் தோல்வி அல்ல. சுதந்தரம் என்ற ஒற்றைத் தேவையை முன்வைத்து காந்தி போராடியிருந்தால் 1947 ஆகஸ்ட் 15 அன்றுடன் காந்தியின் தேவை முடிந்து போயிருக்கும். அதேபோல வேறு யாரேனும் ஒரு தலைவர் முற்றிலும் வேறுபட்ட வேறு சில கருத்துகளை முன்வைத்து அதன்மூலம் இந்தியாவை முன்னேற்றி, அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்துவைத்திருப்பார் என்றாலும் நாம் காந்தியை மறந்துபோய்விடலாம்.
காந்தியின் தேவை இன்றும் இருப்பதற்குக் காரணம், இந்தியா முன்னேற அவர் முன்வைத்த அடிப்படைகளைவிடச் சிறந்தவையாக வேறு ஏதும் இல்லாமல் இருப்பதே. காந்தியின் எந்தவொரு தனிக் கருத்தோடும் நாம் மாறுபடலாம். ஆனால் அவற்றுக்கு வலுவான மாற்றை நாம் முன்வைக்கவேண்டும்.
உதாரணமாக, காந்தியின் பொருளாதார மாதிரி எனக்கு உவப்பானதாக இல்லை. ஆனாலும் அதற்கு எதிரான, மாறுபட்ட, முழுமையான ஒரு மாதிரி எனக்குத் தோன்றவில்லை. எனவே காந்தியின் பொருளாதாரக் கருத்துகளோடு நான் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
இந்த இடத்தில்தான் புனிதர் காந்தியைவிட, தெய்வம் காந்தியைவிட, மனிதர் காந்தி எனக்கு முக்கியமாகப் படுகிறார். அவரைக் கடவுள் என்று சொல்லி அவருடைய கருத்துகளை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. அவரை சாத்தான் என்று சொல்லி அவருடைய கருத்துகளை நான் முற்றிலுமாக விலக்கிவிடுவதில்லை. அவரை ஒரு மனிதராக மட்டுமே பார்த்து அவருடைய கொள்கைகளில் ஏதேனும் ஓட்டைகள் இருக்கின்றனவா என்று தினம் தினம் பரிசோதிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவரும் பிறரைப் போல தவறுகள் செய்யக்கூடியவர் என்பதால் அந்தத் தவறுகளை நம் வாழ்வில் தவிர்க்கமுடியுமா என்றும் என்னால் யோசிக்க முடிகிறது. அவரை எங்கோ ஓர் உச்சியில் கொண்டுபோய் வைக்காமல், அவரால் முடிந்துள்ளது என்றால் நம்மாலும் முடியும் என்று குறைந்தபட்சம் அதை முயற்சி செய்து பார்க்கவாவது முடிகிறது.
அந்த மனிதர் காந்திதான் எனக்கு வேண்டும். நமக்கு வேண்டும்.
- பத்ரி சேஷாத்ரி

கார் வேண்டாம் என்றார் காந்தி

தமிழ்நாட்டில் கதர் இயக்கதில் பெரும் பணிபுரிந்த தேசபக்தரும், சுதந்திரப் போராட்ட வீரருமான கோவை அய்யாமுத்து (1898–1977) எனது ஆதர்ச நாயகர்களில் ஒருவர். பல வகை தொழில்கள், பணிகள் புரிந்த அவரின் வாழ்க்கைச் சரித்திரம் மிக சுவாரசியமானது, நெகிழ்ச்சியூட்டக் கூடியது.
ராஜாஜியின் பரம சிஷ்யர் அவர். பெரியாரின் நண்பர் மற்றும் சகா. வைக்கம் போராட்டத்தில் பெரியாருடன் செயலாற்றி, சிறை தண்டனை அடைந்தவர். (பெரியாரின் ‘குடியரசு’ பத்திரிகையின் ஆசிரியராகச் சில காலம் பணியாற்றினார்.) முதலாம் உலகபோரில் ராணுவச் சேவையில், ஈராக்கில் சில காலம் பணியாற்றியவர். கோவையில் ஆடை-ஆபரணக் கடை ஒன்றை நடத்தினார். காந்தியடிகளின் ‘அன்னியத் துணிகளைப் புறக்கணிக்கும்’ பேச்சை 1921ல் நேரில் கேட்டதும், உடனே தன் கடையை மூடினார். சில ஆண்டுகள் கழித்து, கதர் இயக்கத்திலும், காங்கிரஸிலும் பெரும் பணியாற்றினார். சுதந்திரப் போராட்டத்தில் மனைவியுடன் பலமுறை சிறை சென்றவர் அய்யாமுத்து.
திருசெங்கோடு காந்தி ஆசிரமத்தை நிறுவ ராஜாஜியின் தலைமையில் அயராது உழைத்தார். 1925ல் பெரியார் தலைமையில் திறப்பு விழா நடந்தது!
1935ல் திருப்பூர் காதி வஸ்திராலாயத்தின் செயலாளாராகப் பொறுப்பேறார். அயாராத உழைப்பின் மூலம் நஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த தமிழகக் காதி இயக்கத்தைப் படிப்படியாக லாபத்தில் இயங்கச் செய்தார். காந்தியடிகளின் பாராட்டைப் பெற்றார். ஆனால், மிக நேர்மையாகவும் திறமையாகவும் செயல்பட்ட அய்யாமுத்துவுக்குப் பல மறைமுக எதிரிகளால் தொடர்ந்து தொல்லை. காதி வஸ்திராலய நிறுவனங்களில் இருந்த ஊழல், மெத்தனம், பொறுப்பற்ற தன்மைகளை ஒழிக்க அவர் முயன்றதால், அதனால் ‘பாதிக்கப்பட்ட’ வீணர்கள் பலர் ஒன்று சேர்ந்து, தொடர்ந்து அவருக்குப் பலவித தொல்லைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் அளித்தனர். காந்தியடிகளுக்குப் பல மொட்டைக் கடுதாசிகளும், வதந்திகளையும் பலமுறை அனுப்பினார்கள். இதனால் காந்தியடிகளுக்கும் அய்யாமுத்துவுக்கும் பலமுறை பிளவுகள், முரண்பாடுகள் தோன்றின. ஒவ்வொரு முறையும், அய்யாமுத்துவின் நேர்மை பற்றிய ஆதாரங்களைக் கண்ட காந்தியடிகள், வதந்திகளைப் புறந்தள்ளினார். ராஜாஜியும் அய்யாமுத்துவுக்குப் பக்கபலமாக இருந்தார்.
திருப்பூர் காதி வஸ்திராலாயம், ஊரின் மத்தியில் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து செயல்பட்டது. அய்யாமுத்து, தான் பெறுப்பேற்ற சில ஆண்டுகளில், அதன் பணிகளைப் பெரிதும் விரிவுபடுத்தினார். இடம் பற்றாததால், திருப்பூருக்கு வெளியே, அவினாசி சாலையில், சில மைல்கள் தள்ளி இருந்த பகுதியில், ஆறு ஏக்கர் நிலம் வாங்கி, அங்குப் புதிய வஸ்திராலய தலைமை நிறுவனத்தை வெற்றிகரமாக அமைத்தார். அதன் அடிக்கல் நாட்டு விழாவிற்குத் தலைமை தாங்கியவர் ஜவர்கர்லால் நேரு! அந்தத் தலைமை நிறுவனத்தின் அருகிலேயே, சொந்தமாக நாலு ஏக்கர் நிலம் வாங்கினார். அதில் பெரும் பகுதியை மனைகளாகப் பிரித்து, தன்னுடன் கதர் இயக்கத்தில் பணிபுரிந்த சகாக்களுக்குக் குறைந்த விலையில் விற்றார். அவரும், அவரது சகாக்களும் அதில் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர்.
இதில்தான் சிக்கல் ஏற்பட்டது. மனைகள் கிடைக்காத சிலர், அய்யாமுத்துவின் ‘எதிரிகள்’ கூடாரத்தில் சேர்ந்துகொண்டனர்.
1939ன் ஆரம்பத்தில் அய்யாமுத்து மீது ‘ஊழல்’ புகார்களை பெற்ற காந்தியடிகள், அவரையும் சங்கர்லால் பங்கரையும் சேவா கிராமம் ஆசிரமத்திற்கு வரவழைத்தார். விசாரணையில், அய்யாமுத்து மீது சுமத்தபட்ட ‘குற்றங்கள்’ அனைத்தும் ஆதாரமற்ற பொய்கள் என்பதை உணர்ந்தார். ஆனால் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்பி, காந்தியடிகள் தன் நேர்மையைச் சந்தேகித்தார் என்று மிகுந்த வருத்தப்பட்ட அய்யாமுத்து, உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்திய காந்தியடிகள், அவரது ராஜினாமா கடிதத்தைக் கிழித்தெறிந்தார். பிறகு மிகுந்த அன்புடன் அவரை ஆசிரமத்தில் உணவருந்திவிட்டுச் செல்லப் பணித்தார்.
தமிழ்நாடு முழுவதும் அய்யாமுத்து தொடர்ந்து பயணம் செய்து கதர் வளர்ச்சிக்கு இடைவிடாது பாடுபட்டார். பயணத்திற்காகச் சொந்த செலவில், பழைய கார் ஒன்றை வாங்கி, அதில் பயணித்தார். அதை அறிந்த காந்தியடிகள், அது ஆடம்பரமான விஷயம், நம்மைப் போன்ற தொண்டர்கள் அதை வைத்திருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். தனது பணிக்கும், தொடர் பயணத்திற்கும், கார் மிக அவசியம் என்று அய்யாமுத்து வாதாடினார். (இன்றுபோல் அன்று பேருந்து மற்றும் ரயில் வசதிகள் அனைத்துப் பகுதிகளிலும் இல்லை.) பல லட்ச ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய காதி வஸ்திராலையங்கள், தனது தலைமையில், பிறகு லாபத்திற்கு மாறியதையும் எடுத்துச் சொல்லி வாதாடினார். எல்லா வாதங்களையும் பொறுமையாகக் கேட்ட காந்தியடிகள், இறுதியில் கூறினார்: ‘அய்யாமுத்து, உங்க தர்க்க வாதம் – logic and reasoning – நன்றாகத்தானிருக்கிறது. எனினும் எளிய வாழ்வை மேற்கொண்டவர்களால்தான் ஏழ்மையில் மூழ்கியுள்ளவர்களுக்குச் சிறப்பகாகச் சேவை செய்யமுடியும் என்பதில் நான் மிக்க உறுதி பூண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாததல்லவே! எனவே திருப்பூர் சென்றதும் உங்கள் மோட்டார் காரை விற்றுவிடுவதே நல்லதென நான் நினைக்கிறேன்” என்று முடிவாகக் கூறினார். ‘எனது மோட்டர் காருக்கு நேர்ந்த விபத்து’ என்ற உபதலைப்பில் அய்யாமுத்து, தனது சுயசரிதையில் இதை நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார்.
1940ல் திருப்பூர் காந்தி நகரில் காதி வஸ்திராலயத்தில், சுமார் பதிமூன்றாயிரம் ரூபாய் மதிப்பில், ஒரு மத்தியக் கிடங்கு (கோடவுன்) கட்ட அய்யாமுத்து முயன்றார். வியாபாரம் விரிவடைந்து இருந்ததால், கிடங்கு தேவைப்பட்டது. ஆனால் காந்தி அதற்கு இணங்கவில்லை. அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் கடிதங்கள் மூலம் பெரும் வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. பிறகு அய்யாமுத்து பெரும் வருத்தமுற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிறகு காந்தியடிகளை வார்தாவில் சந்தித்த ராஜாஜி, தமிழகம் திரும்பியதும், பல்லடம் மாநாட்டில் பேசிவிட்டு, திருப்பூர் வந்தார். ‘காந்தி நகரில் உள்ள தனது வீட்டின் ‘மதிப்பை’ உயர்த்தவே, புதிய கோடவுனை அய்யாமுத்து கட்ட முயல்கிறார் என்று காந்தியடிகளுக்கு யாரோ ஒருவன் மொட்டை கடிதம் எழுதியதால், காந்தியடிகளும் சலனமுற்று, கோடவுன் கட்டுவதைத் தடுத்துவிட்டார் என்று அய்யாமுத்துவிடம் ராஜாஜி கூறினார். இருவரும் வருந்தினர். தனது நேர்மை மீது இத்தனை காலம் கழித்து காந்தியடிகள் ‘சந்தேகம்’ கொண்டார் என்று அய்யாமுத்துவிற்கு மிகுந்த மனவேதனை. உடனடியாகத் தனது வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட்டு, திருப்பூரை விட்டு வெளியேறினார். ‘வீடு விற்ற படலம்’ என்ற அத்தியாயத்தில் இதை விவரிக்கிறார். அதில் அவர் மேலும் சொல்கிறார்: “…மகாத்மா காந்தியுடன் நெருங்கிப் பழகிய யாரும் அவரால் இன்பமுற்றதில்லை. துயரக்கண்ணீர் சிந்தியவர் பலர். அன்னை கஸ்தூரிபாவை தென்னாப்பிரிக்காவில், ஒருநாள் இரவு, கதவைத் திறந்து, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய காந்திதானே அந்த மகான்! மகாத்மாக்களுடன் சுவர்க்கத்தில் வசிப்பது இன்பமாயிருக்கலாம். பூலோகத்தில் அவர்களுடன் வசிப்பது துனபமென்று கூறி மகாதேவ தேசாய் மனமுருகிக் கண்ணீர் வடித்த காட்சியை நான் பார்க்கவில்லையா?….”
கதர் இயக்கத்தில் இருந்து விலகினாலும், காந்தியடிகளுடன் கடிதப் போக்குவரத்தைத் தொடர்ந்தார். பிறகு வியாபாரத்தில் ஈடுபட்டார். 1947ல் கோவை செண்ட்ரல் ஸ்டுடியோவில் ‘கஞ்சன்’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார். பாடல்களையும் எழுதினார். சில ஆண்டுகள் கழித்து கோவை-பொள்ளாச்சி பாதையில், ஒரு தோட்டம் வாங்கி விவசாயி ஆனார். அவரின் தோட்டத்திற்கு ‘காந்தி பண்ணை’ என்று பெயரிட்டார். ராஜாஜி துவங்கிய சுதந்திரா கட்சியில் சேர்ந்து செயல்பட்டார். பல நூல்களை எழுதினார். ‘நான் கண்ட பெரியார்,’ ‘நாடு எங்கே செல்கிறது?’ இறுதியாக ‘ராஜாஜி எனது தந்தை’ என்ற நூலையும் எழுதினார்.
1973ல் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அவரது ‘எனது நினைவுகள்’ நூலைப் பொக்கிசம் போல் பாதுகாத்து வருகிறேன். பெரியார், திருவிக, பாரதிதாசன், காமராஜர், சி.சுப்பிரமண்யம், பக்தவத்சலம், ஜி.டி.நாயுடு மற்றும் பல இதர தேசியத் தலைவர்கள் பற்றிய அரிய சித்திரங்கள், சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் குறிப்புகள் அந்நூலில் உள்ளன. சென்ற ஆண்டு அதை ‘விடியல் பதிப்பகம்’ மிக அருமையான முறையில் மறுபதிப்புச் செய்திருக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய அரிய நூல்.
-K.R. அதியமான்

 thanks ... http://www.tamilpaper.net

No comments: