About Me

Saturday, January 5, 2013

பள்ளிக்கூட மாணவிகள் பாதுகாப்பை தீவிரப்படுத்த கமிட்டி அமைக்கப்படும்: பள்ளிக்கல்வி துறை முடிவு...

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்விக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா
அதிக நிதியை இந்த வருடம் ஒதுக்கினார். பள்ளிக்கூட மாணவிகளிடம் பாலியல் பலாத்கார நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்கள் கட்டாய பணிநீக்கம்செய்யப்படுவார் என்ற வகையில் அரசாணையை தமிழக பள்ளிக்கல்வி துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறப்பித்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவிற்கு இணங்க இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணைக்கு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. எனவே இதுபோன்ற சம்பவம் யாருக்கும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் அனுப்பி மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக பெண் ஊழியர்களின் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதுபோல தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பள்ளிக்கல்வி துறை என்ன செய்யப்போகிறது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கு.தேவராஜனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக இருப்பதற்கு வாய்மொழியாக அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளிடமும் முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறோம்.

அவர்களும் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கி செயல்படுத்தி வருகிறார்கள். மாணவிகள் பாதுகாப்புக்காக என்ன என்ன வழிமுறைகளை வகுக்கலாம் என்று பல பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களை அழைத்து பேசப்படும். இதற்காக ஒரு கமிட்டி அமைத்துத்தான் செயல்படுத்த முடியும்.

அந்த கமிட்டி தரும் பரிந்துரைகளை பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்பி பின்னர் அது அரசாணையாக மாறும். இதற்காக உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி இதற்கு ஒரு முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.  

No comments: