Thursday, April 4, 2013

ஆங்கிலம் இரண்டாம் தாளில், என்ன மதிப்பெண்களை மாணவர்கள் எடுக்கின்றனரோ, அதே மதிப்பெண்கள், ஆங்கிலம் முதல் தாளுக்கும் வழங்கப்படும் என, தேர்வுத் துறை முடிவு செய்து, பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது.

செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் விடைத்தாள்கள்
மாயமான விவகாரத்தில், அஞ்சலக புறநிலை ஊழியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். மாயமான விடைத் தாள்களுக்கு மறுதேர்வு கிடையாது. ஆங்கிலம் இரண்டாம் தாளில், என்ன மதிப்பெண்களை மாணவர்கள் எடுக்கின்றனரோ, அதே மதிப்பெண்கள், ஆங்கிலம் முதல் தாளுக்கும் வழங்கப்படும் என, தேர்வுத் துறை முடிவு செய்து, பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில், ஏப்ரல் 1ல், 221 மாணவர்கள், 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தேர்வெழுதினர். பஸ்சில் இந்த விடைத்தாள் பார்சலை கொண்டு சென்ற, அஞ்சலக புறநிலை ஊழியர் சவுந்தர்ராஜன், குடிபோதையில் இருந்ததால், பார்சலை தவற விட்டுள்ளார். சத்தியமங்கலம் பள்ளியிலும், துணை அஞ்சலகத்திலும் உயர் அதிகாரிகள் முகாமிட்டு, தீவிர விசாரணை நடத்தினர். காணாமல் போன அஞ்சல் பையை, செஞ்சி பஸ் நிலையத்தில், எஸ்.பி., மனோகரன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார், தேடுதல் வேட்டை நடத்தினர். பின், அஞ்சலக புறநிலை ஊழியர் சவுந்தர்ராஜன், தனியார் பஸ் கண்டக்டர் முருகேசன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாக தேடுதல்: நேற்று காலை, செஞ்சிக்கு வந்த எஸ்.பி., மனோகரன், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். "பொதுமக்கள் தவறுதலாக தபால் பையை எடுத்து வைத்திருந்தால், போலீசாரால் எந்த பிரச்னையும் வராது' என, அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கினார். பின் விடைத்தாள்களை தேடும் பணி, நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. நான்கு தனிப்படை போலீசார், சத்தியமங்கலம் தொடங்கி, செஞ்சி, திண்டிவனம் வரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில், தொடர்ந்து நடக்க உள்ள தேர்வுகளில், இது போன்ற பிரச் னைகளை தவிர்ப்பது குறித்து கல்வி, தபால், காவல் துறை அதிகாரிகளுக்கு, விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்தில், நேற்று காலை, அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சஸ்பெண்ட்: கலெக்டர் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், ""தொடர்ந்து நடக்க உள்ள தேர்வை, பாதுகாப்புடன் மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளோம். விடைத்தாள் மாயமான மாணவர்களின் பெற்றோர், மதிப்பெண் வழங்குவது குறித்து யூகத்தில் புகார் கொடுத்துள்ளனர். மறு தேர்வு நடத்துவது குறித்து அரசு தான் முடிவு செய்யும்,'' என்றார். அஞ்சலக முதன்மை காணிப்பாளர் கந்தசாமி கூறும்போது, ""கவனக்குறைவாக இருந்த ஊழியர் சவுந்தர்ராஜன், பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணைக்கு பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில், விடைத்தாள் கட்டுகள் எண்ணிக்கை சரியாக வந்து, அனுப்பி வைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க கூடுதலாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார். ர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவம், பொறியியல், தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கை நடைபெறும். அதனால், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரத்தில், மறுதேர்வு முடிவு எடுக்கப்பட்டது. தற்போது, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் தான் காணாமல் போயுள்ளது. இந்த தேர்வின் மதிப்பெண் அடிப்படையில், உயர் கல்வி சேர்க்கை எதுவும் நடைபெற போவது இல்லை. எனவே, 10ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாளில், என்ன மதிப்பெண்களை, மாணவர்கள் எடுக்கின்றனரோ, அதே மதிப் பெண்களை, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இவ்வாறு, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம், 10ம் வகுப்பு ஆங்கிலம், இரண்டாவது தாள் தேர்வில், ஒரு மார்க் கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது. "லூனல்' என்ற நகரின் பெயருக்கு பதிலாக, "லஞ்ச்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10ம் வகுப்பு, தமிழ் இரண்டாவது தாள் தேர்வு விடைத்தாள்களில், 63 விடைத்தாள்கள், விருத்தாசலம் அருகே, தண்டவாளத்தில் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் தமிழ் முதல் தாளில் எடுத்த மதிப்பெண் வழங்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்கள் கண்ணீர்: "ஆங்கிலம் முதல் தாள் எளிமையாக இருந்தது; இரண்டாம் தாள் கஷ்டமாக இருந்தது. இரண்டாம் தாள் மதிப்பெண்ணை முதல் தாளுக்கும் வழங்கினால், எங்கள் பாடு கஷ்டம் தான்' என, ஆசிரியர்களிடம், மாணவர்கள் கண்ணீருடன் கூறினர். செஞ்சி சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் பேசுகையில், "விடைத்தாள்களை தீவிரமாக தேடி வருவதால், அவை கிடைத்து விடும். எனவே, மாணவர்கள் கலக்கமடைய வேண்டாம். அப்படி இல்லை என்றாலும், சரியான முடிவை, கல்வித் துறை அறிவிக்கும்' என்றனர். மாணவர்கள் கண்ணீருடன் கூறியதாவது: ஏற்கனவே, கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில், சேதமான தமிழ் இரண்டாவது தாள் விடைத்தாள்களுக்கு, தமிழ் முதல் தாளில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் எங்களுக்கும் அறிவித்தால், எங்கள் பாடு கஷ்டம் தான். ஆங்கிலம் முதல் தாள் எளிமையாக இருந்தது; நல்ல முறையில் தேர்வு எழுதினோம். இரண்டாம் தாள் கஷ்டமாக இருந்தது; இதில் கண்டிப்பாக மதிப்பெண் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

DINAMALAR NEWS

4tamilmedia

பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற

Enter your email address:

Delivered by FeedBurner