About Me

Sunday, January 12, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி

புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த
பல தேர்வுகளின் முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று, அதிரடியாக வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, நான்கு மதிப்பெண் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே, 88, 89 மதிப்பெண் பெற்று, தோல்வி அடைந்த தேர்வர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறு மதிப்பீடு காரணமாக, தோல்வி அடைந்த தேர்வர், 2,500 பேர் வரை, தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், 15 ஆயிரம் ஆசிரியருக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்த, ஆளும் அ.தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அரசு முடுக்கி விட்டுள்ளதால், பல மாதங்களாக தேங்கியிருந்த தேர்வு முடிவுகள், இரு நாட்களாக, வரிசையாக வெளியிடப்பட்டன.


முதுகலை தேர்வு:

மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் நியமனத்தில், முதலில், தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல் வெளியானது. நேற்று முன்தினம் காலை, ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட, 10 பாடங்களுக்கான மறு மதிப்பீட்டு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது.இயற்பியல், வேதியியல், தாவரவியல், வரலாறு மற்றும் வணிகவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கான புதிய தேர்வு பட்டியல், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு வெளியானது.இவர்களுக்கு, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டதால், பணி நியமன பட்டியல் தயாராக உள்ளது.

டி.இ.டி., தேர்வு

:டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்) மற்றும் இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) முடிவு மட்டும், நவம்பர், 5ல் வெளியானது. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவில்லை. சிலர் வழக்கு தொடர்ந்ததால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடங்கின.இந்நிலையில், கோர்ட் உத்தரவுப்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, நேற்று, டி.ஆர்.பி., அறிவித்தது.

இரண்டாள் தாள் மறுமதிப்பீடு:


கோர்ட் உத்தரவின் அடிப்படையில், இரண்டாம் தாள் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, புதிய தேர்வு முடிவை, நேற்று, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில், தேர்வர்களுக்கு, நான்கு மதிப்பெண் கூடுதலாகக் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இரு கேள்விகளுக்கான விடையில், முதலில், ஒரு விடை மட்டுமே சரி என தெரிவித்திருந்த நிலையில், தற்போது, கூடுதலாக இரண்டு மற்றும் மூன்று விடைகளில் ஒன்றை, 'டிக்' செய்திருந்தாலும், மதிப்பெண் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.மேலும், 'ஏ' வகை கேள்வித்தாளில், 20வது கேள்வி மற்றும் 108வது கேள்வி, நீக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு, தலா, 1 மதிப்பெண் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு கேள்விகளுக்கு, விடை எழுதாதவர்கள் மற்றும் தவறாக எழுதியவர்களுக்கு, இரண்டு மதிப்பெண் கிடைக்கும். சரியான விடையை குறிப்பிட்டவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் வராது.ஏற்கனவே, 88, 89 மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்த, 2,500 தேர்வர், இந்த மறு மதிப்பீடு காரணமாக, தேர்ச்சி பெறுவர் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

சான்றிதழ் சரிபார்ப்பு:

முடிவுகள் அனைத்தும் வெளியானதால், டி.இ.டி., தேர்வர்களுக்கு, 20ம் தேதி முதல், 27ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான கடிதங்கள், www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.தேர்வர், தங்கள் பதிவு எண்களை பதிவு செய்து, சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேங்கிக் கிடந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியாகி விட்டதால், சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், டி.இ.டி., இறுதி தேர்வு பட்டியல் வெளியாகும். இம்மாத இறுதிக்குள் அனைத்தும் முடிந்து விடும் என்பதால், பிப்ரவரி, முதல் வாரத்தில், பணி நியமன விழா நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால், தேர்வர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments: