About Me

Friday, August 26, 2011

புதிய 10 ரூபாய் நாணயம்

சென்னை : "விரைவில் புதிய 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 1906ம் ஆண்டு, இந்திய நாணயச் சட்டத்தின்படி, புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிய நாணயத்தின் முன்புறம், அசோகத் தூணின் சிங்க முகமும், அதற்கு கீழ், "சத்யமேவ ஜெயதே' என்ற வாசகமும், இடப்பக்கம் மேல்புறத்தில் இந்தியில், "பாரத்' என்றும், வலப்பக்கம் ஆங்கிலத்தில், "இந்தியா' என்றும் எழுதப்பட்டிருக்கும். மேலும், கீழ் பகுதியில் ஆண்டு சர்வதேச எண்ணில் பொறிக்கப்பட்டிருக்கும்.

நாணயத்தின் மறுபக்கம் மேல்புறத்தில் வளர்ச்சி மற்றும் தொடர்பை எடுத்துக்காட்டும் விதமாக, வெளிப்புறமாக விரிந்து செல்லும் 10 வரை வடிவங்களைக் கொண்டிருக்கும். மேலும், நாணயத்தின் மையத்தில் ரூபாய்க்கான நாணயக் குறியீடும், கீழ்புறத்தில் 10 என்ற இலக்கம் சர்வதேச எண்ணில் இடம் பெறும். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 10 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கதாகும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.