Saturday, August 27, 2011

இனி நிறைவேறும் "ஊழலுக்கு எதிரான இந்தியா' கனவு : நம்பிக்கை தந்த கோவை கல்லூரி மாணவர்கள்
கோவை: "அப்பாடா...! கல்லூரி முடிந்தது...இனி வீட்டுக்கு செல்வோம்' என அந்த மாணவர்கள் நினைக்கவில்லை. நண்பனின் பைக் பில்லியனில் அமர்ந்து ஜாலியாக சினிமாவுக்கு போவோம் என்றோ, "நெட்' சென்டரில் அமர்ந்து "சாட்' செய்வோம் என்றோ எவருக்கும் எண்ணமில்லை. ஊழலுக்கு எதிராக கைகோர்க்க கிடைத்த வாய்ப்பை, உற்சாகமாக பயன்படுத்திக் கொண்ட பெருமிதமே அவர்கள் முகங்களில் தெரிந்தது.

ஊழலுக்கு எதிராக டில்லியில், 12வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, கோவையில் நேற்று மாலை நடந்த அமைதிப் பேரணியில், இவர்கள் ஒவ்வொருவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். "சிட்ரா' சிக்னல் அருகே தேசியக் கொடியேந்தி, அமைப்பின் ஆதரவாளர்கள் பேரணியைத் துவக்கியதும், ஆங்காங்கே நின்றிருந்த கல்லூரி மாணவர்கள் தானாகவே வந்து தங்களை இணைத்துக் கொண்டனர்.
ஒவ்வொருவரும், அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்க கொடிகளை கேட்டு வாங்கி, சட்டைகளில் பெருமிதத்துடன் குத்திக் கொண்டதோடு, நண்பர்களுக்கும் வினியோகித்தனர். "மாற்றத்தை நோக்கி ஒரு நடை பயணம்' என பெயரிடப்பட்ட அந்த அமைதி பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்து, அமைப்பின் நிர்வாகிகள் சிலர் முன்னரே தேசியக் கொடியுடன் கல்வி நிறுவனங்களின் முன், ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பஸ் நிறுத்தங்களில் பஸ்சுக்கு காத்திருந்தவர்களிடம், தேசியக் கொடியுடன் சென்ற அவர்கள், "ஊழல் என்றால் என்ன? ஏன் அதை எதிர்த்து போராட வேண்டும்?, எதிர்க்காவிட்டால் என்ன விளைவு ஏற்படும்?' என்பதெல்லாம் விளக்கி, நோட்டீஸ்களை வினியோகித்தனர். "ஐ ச்ட் அணணச்' என்று பிரின்ட் செய்யப்பட்ட வெள்ளை "டி சர்ட்' அணிந்திருந்த அந்த இளைஞர்களின் முகங்களில், நாட்டு நலனைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பையும் காண முடியவில்லை.
பேரணி கோவையை நெருங்க நெருங்க, வழியெங்கும் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அனைவரும் தங்களை பேரணியில் இணைத்துக் கொண்டனர். இதைக் கண்ட பொதுமக்களும் தங்களை பேரணியில் இணைத்துக் கொண்டனர். "வந்தே மாதரம்', "பாரத் மாதா கீ ஜே' போன்ற மாணவர்களின் கோஷங்கள், அவிநாசி ரோட்டில் சென்ற அனைவரையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்தன. பேரணியை கடந்து சென்ற பஸ்களில் பயணித்த மாணவர்களில் சிலர் கூட, ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி, "வந்தே மாதரம்' என குரல் கொடுத்துச் சென்றனர். இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த உணர்ச்சி வேகத்தைக் கண்டு, அவ்வழியே சென்ற பொதுமக்கள் பிரமித்துதான் போனார்கள்.

நாட்டில், ஊழலுக்கு காரணமான அரசியல்வாதிகள் நடத்தும் பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு கடமைக்காக, கால்கடுக்க காவல் பணியில் ஈடுபடும் போலீசார், நேற்று மன திருப்தியுடன் காவல் பணியில் ஈடுபட்டனர். இறுதியில், 3,000 பேர் கொண்ட அந்த பேரணி மாலை 7.10 மணிக்கு வ.உ.சி., மைதானத்தை அடைந்தது.

அங்கு ஏற்கனவே காத்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியர்வை வடிய வந்து நின்ற மாணவர்களைக் கண்டதும்,"வந்தே மாதரம்' என விண்ணதிர கோஷமிட்டு வரவேற்றனர். அனைவருக்கும் குடிக்கத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். "சிட்ரா' சந்திப்பு முதல் வ.உ.சி., வரை 10 கி.மீ., தூரத்தை நடந்தே கடந்து வந்திருந்த போதிலும், எவர் முகத்திலும் சோர்வு இல்லை... நாட்டை சிறுக சிறுக அரிக்கும் ஊழலுக்கு எதிரான ஒரு அமைதிப் போரில், தங்கள் பங்களிப்பையும் பதிவு செய்த பெருமிதமே காணப்பட்டது.

வ.உ.சி., மைதானத்தில் குழுமிய அனைவரும்,"வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் லஞ்சம் கொடுக்க மாட்டேன்; லஞ்சம் வாங்கவும் மாட்டேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்' என, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவரும் உணர்ச்சிகரமாக, உரத்த குரலில் தேசியகீதம் பாடி அமைதியாக கலைந்து சென்றனர்.

நாளை பல்வேறு பதவிகளில் அமர்ந்து நாட்டை வழிநடத்தப் போகும் இன்றைய கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த புதிய எழுச்சி, நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி கனவு கண்டு வருபவர்களுக்கு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

2 comments:

மதுரை சரவணன் said...

poraattam theiviram adainthullaathu... vaalththukkal

V.KAVEANANTH & V.NANDHANA said...

நன்றி

4tamilmedia