About Me

Monday, August 29, 2011

33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி

சென்னை: அரசு பள்ளிகளில் மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவி்ட்டுள்ளார். இதற்காக அவருக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அனைவருக்கும் தரமான கல்வி வழங்கும் வகையில் 775 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியதுடன் அந்த பள்ளிகளில் கூடுதலாக 13 ஆயிரத்து 300 ஆசிரியர் பணி இடங்களையும் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டது ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அதேபோல் முத்துக்குமரன் கமிட்டி பரிந்துரைப்படி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க இருப்பது பாராட்டுக்குரியது. மேலும், மூன்று பருவ முறை அறிமுகம், போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட புதிய திட்டங்களை வரவேற்கிறோம்.

1978 முதல் 1990 வரை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டபோது போல தற்போது அனைத்து மேல் நிலைப்பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 2 தொழிற்கல்வி ஆசிரியர் பணி இடங்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் முருக.செல்வராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை,

உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளில் 3 ஆயிரத்து187 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும், 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பாசிரியர் பணி இடங்களும் ஏற்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்கு முதல்வர் எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.

தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ப.சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிஞ்சுக் குழந்தைகளின் புத்தக சுமையைக் குறைத்து மதிப்புக்கூட்டு முறையில் 3 பருவங்களாக தேர்வுகள் நடத்தப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பினை வரவேற்கிறோம். போலி மதிப்பெண் சான்றிதழ்களை ஒழிக்கும் வகையில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய சான்றிதழ் வழங்கும் முறை பல சிக்கல்களுக்கு தீர்வாக அமையும். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Oneindia Tamil

No comments: