About Me

Tuesday, August 30, 2011

ஒவ்வொரு இந்தியனும் சாப்பாட்டிற்கே திண்டாடும் நிலைமை கூட வரலாம்.


புதுடில்லி:"நாட்டில் விவசாயிகளின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களின் பிரச்னையை கவனமுடன் அணுகவில்லை என்றால், ஒவ்வொரு இந்தியனும் சாப்பாட்டிற்கே திண்டாடும் நிலைமை கூட வரலாம். விவசாயத் துறையை ஊக்கப்படுத்த, சலுகைத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். நாட்டுப்புற மக்களின் பிரச்னைகள் பற்றி விவாதிக்க, பார்லிமென்டின் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும்' என, லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பார்லிமென்டில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங் எழுந்து, விவசாயிகளின் பிரச்னை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:நாட்டின் பிற துறைகளோடு ஒப்பிடுகையில், விவசாயத் துறை மட்டும் மிகவும் கவனிப்பாரற்று கிடக்கிறது. விவசாயிகள் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தங்களது பிரச்னைகளை அரசாங்கம் தீர்க்காதா என ஏங்கியபடி, மிகவும் வருத்தத்தில் விவசாயிகள் உள்ளனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை, விவசாயத்துடன் இணைக்க வேண்டும். ஏனெனில், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது பெரிய பிரச்னையாக உள்ளது.

விவசாயத் துறை சந்தித்து வரும் பிரச்னைகளை தீர்க்க, சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும். போதுமான விலை கிடைக்காததால், கிழக்கு கோதாவரி உட்பட, ஆந்திராவில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், நெல் உற்பத்தி செய்வதில்லை என முடிவு செய்துள்ளனர். நெல் விளைவித்தால், செலவழித்த தொகை கூட கிடைப்பதில்லை என புலம்புகின்றனர்.நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இதேபோன்ற நிலையைத் தான் சந்தித்து வருகின்றனர். அதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம், இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் பிரச்னையை தீர்க்காமல், அசட்டையாக இருந்தால், ஒவ்வொரு இந்தியனும் சாப்பாட்டிற்கே கூட திண்டாடும் சூழ்நிலை உருவாகி விடலாம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும், விவசாயிகளின் பிரச்னைகளைக் கண்டுணர்ந்து, அப்பிரச்னையை தீர்ப்பதற்கென்று, அரசாங்கம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் மற்றும் நாட்டுப்புற மக்களின் பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை, மத்திய அரசு கூட்ட வேண்டும்.இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.ராஜ்நாத் சிங்கின் இந்தப் பேச்சுக்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதால், விவசாயத்தை "தேசிய தொழிலாக' அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அத்துடன், பல மாநில எதிர்க்கட்சிகள், தங்கள் மாநிலங்களில் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் உரத்தட்டுப்பாடு குறித்தும் புகார் தெரிவித்தன.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: