About Me

Wednesday, August 31, 2011

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு


சென்னை: தமிழகத்தின் 24 வது கவர்னராக ரோசய்யா இன்று மாலை பதவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தின் கவர்னராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய கவர்னராக ஆந்திர மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ரோசய்யாவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நியமித்து உத்தரவிட்டார். கவர்னராக பொறுப்பேற்க வசதியாக, ரோசய்யா தான் வகித்து வந்த ஆந்திர எம்.எல்.சி., பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்த அவரை, மாநில முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற ரோசய்யாவுக்கு, கவர்னர் மாளிகை சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், ரோசய்யாவுக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யார் இவர்: ரோசய்யா, ஆந்திர சட்டசபையில் தொடர்ந்து ஏழு முறை உட்பட மொத்தம் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமை பெற்றவர். இவர், குண்டூர் மாவட்டத்தில் உள்ள வேம்ரூ என்ற கிராமத்தில் 1933, ஜூலை 4ல் பிறந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் சீனியர் தலைவர் என புகழப்படும் ரோசய்யாவிற்கு, காங்கிரஸ் கட்சி மேலிடத்திலும், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பொது மக்களிடமும் மிகுந்த செல்வாக்கு உள்ளது

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: