Sunday, August 21, 2011

அன்னா ஹசாரேயால் மத்திய அரசு திணறல்:ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு சென்னை கடற்கரையில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள்

புதுடில்லி:ஊழலுக்கு எதிராக, அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தால், எந்த முடிவும் எடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. ஊழல் எதிர்ப்புக்கு, மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருவதும், மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பார்லிமென்டில், பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வரும் மக்கள், ஹசாரேவுக்கு, தங்களது முழு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

டில்லியில் மட்டுமின்றி, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், ஊழலுக்கு எதிரான மக்களின் எழுச்சி, உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. "படித்தவர்களும், பணக்காரர்களும் மட்டுமே, ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்' என்ற அரசின் விமர்சனத்தை முறியடிக்கும் வகையில், அனைத்து தரப்பு மக்களும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, மத்திய அரசுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று, உண்ணாவிரத பந்தலில் பேசிய அன்னா ஹசாரே, ""அரசின் கருவூலத்தில் உள்ள நிதி, மக்களுக்கு சொந்தமானது. இந்த கருவூலத்துக்கு, திருடர்களால் ஆபத்து ஏற்படவில்லை. இந்த நிதியை பாதுகாக்கும் பொறுப்பில் யார் அமர்த்தப்பட்டுள்ளனரோ, அவர்களால் தான், ஆபத்து ஏற்படுகிறது. லோக்பால் மசோதா விவகாரத்தை தொடர்ந்து, மற்ற பல விஷயங்களுக்காகவும் தொடர்ந்து போராட்டம் நடத்துவேன்.

""என் போராட்டத்தின் பின்னணியில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இருப்பதாக சொல்பவர்களை, மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். மேலும், அமெரிக்காவுடனும் என் போராட்டத்தை தொடர்புபடுத்தி பேசினர். இனி, பாகிஸ்தானுடனும் தொடர்புபடுத்தி பேசுவர்'' என, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

பேச்சுக்கு தயார்: ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோர் கூறுகையில், ""லோக்பால் மசோதா விவகாரம் குறித்து, அரசுடன் பேச்சு நடத்த தயார். ஆனால், அரசு தரப்பில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யாருடன் பேச்சு நடத்துவது, எப்போது பேசுவது என, எங்களுக்கு தெரியவில்லை,'' என்றனர்.
அதேநேரத்தில், லோக்பால் மசோதா விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங்கும், எந்த உறுதியான முடிவையும் அறிவிக்காமல், விட்டுக் கொடுத்துச் செல்லவும், பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என, மழுப்பலாகவே பதில் அளித்தார்.

ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ, ஹசாரே குழுவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.திணறல்: பிரதமரின் மழுப்பலான பதிலும், காங்கிரஸ் கட்சியினரின் கோபமும், லோக்பால் விவகாரத்தில், மத்திய அரசு முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதை, வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் உள்ளது.ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம், இன்னும், 10 நாட்கள் வரை நீடிக்கும் என்பதால், இனி வரும் ஒவ்வொரு நாளும், மத்திய அரசுக்கு, பெரும் போராட்டமும், நெருக்கடியாகவுமே இருக்கும் என்கின்றன, டில்லி அரசியல் வட்டாரங்கள்.

மத்திய அரசு எச்சரிக்கை:""அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், பார்லிமென்ட் நிலைக்குழுவை விமர்சனம் செய்வது உரிமை மீறல் விவகாரம்,'' என, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:லோக்பால் மசோதா தொடர்பாக, பார்லிமென்ட் நிலைக்குழு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுள்ளதை, "நேரத்தை வீணடிக்கும் செயல்' என, ஹசாரே குழுவினர் விமர்சித்துள்ளனர்; இது சரியல்ல. பார்லிமென்ட் நிலைக்குழு என்பது மினி பார்லிமென்ட் போன்றது.

இந்த அமைப்பை விமர்சனம் செய்வது, பார்லிமென்டை விமர்சனம் செய்வது போன்றது. எனவே, இது உரிமை மீறல் விவகாரமாகும்.சிலர், பார்லிமென்ட் உறுப்பினர்களை, "கொள்ளைக்காரர்கள்' என கூறுகின்றனர். இது, தனிநபர் தாக்குதல் அல்ல; பார்லிமென்டை அவமதிக்கும் செயல். ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிக் கொள்பவர்கள், ஜனநாயக அமைப்புகளை அநாகரிகமாக விமர்சிப்பது ஏற்கக் கூடியதல்ல. அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை, அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
சென்னை கடற்கரையில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள்
 

thanks to nakkeeran & dinamalar

Dinamalar - No 1 Tamil News Paper

No comments:

4tamilmedia