About Me

Saturday, August 6, 2011

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இடைத்தேர்வு நடத்த திடீர் உத்தரவு!

திருப்பூர்: சமச்சீர் கல்வி விவகாரத்தால் இன்னும் புத்தகமே வழங்கப்படாத நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் இடைத்தேர்வு நடத்த கல்வித்துறை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 50 நாட்களாக மாணவர்கள் புத்தகமே இல்லாமல் பள்ளிக்கு வருகின்றனர். இலக்கணம், யோகா, களப்பணி ஆகியவை மூலம் பொது அறிவு விஷயங்கள் கற்றுத்தரப்பட்டு வருகிறது. சமச்சீர் கல்வியா, பழைய பாடத்திட்டமா என்று தெரியாததால் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால், பாடங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், வரும் 10, 11, 12ம் தேதிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் முதல் இடைத்தேர்வுகளை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வரும் 10ம் தேதி காலை தமிழ், மதியம் ஆங்கிலம், 11ம் தேதி சமூக அறிவியல், கணிதம், 12ம் தேதி அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். 6ம் வகுப்புக்கு மட்டும் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகவே கேள்வித்தாள் தயாரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பாடமே நடத்தாத நிலையில், திடீரென தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘1,6ம் வகுப்புகள் தவிர 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று வரை புத்தகம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே எடுத்த பாடங்களில் இருந்தும், கல்வித்துறை வழங்கிய சி.டி.யில் இடம்பெற்றுள்ள பாடங்களில் இருந்தும் கேள்விகளை கேட்குமாறு கூறியுள்ளது. இவை பெரும்பாலும் பழைய பாடத்திட்டத்தை ஒத்தே உள்ளது. பாடமே நடத்தாமல் தேர்வு நடத்த கூறுவது எப்படி சரியாகும்?” என்றார். பாடமே நடத்தாமல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
THANKS 

No comments: