About Me

Tuesday, August 16, 2011

சேலத்தை விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர்

மேலை நாட்டினரின் பார்வையில், இந்தியா ஒரு பொன்விளையும் பூமியாகவே இருந்துள்ளது. வியாபாரத்திற்காக சேலம் வந்த ஒரு ஆங்கிலேயர், இங்குள்ள மலை சார்ந்த சூழல்களால் கவரப்பட்டு, சேலத்தை விலைக்கு வாங்கி, கடைசி காலம் வரை இங்கேயே தங்கியதுடன், பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளனர். சேலத்தின் முதல் ஆங்கிலேய ஜமீன்தாராக இருந்தவர் ஜார்ஜ் ஃபெரடரிக் ஃபிஷர். இவர் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் ஃபிஷர் என்ற வணிகரின் மூத்த மகனாக 1,805ம் ஆண்டு கொச்சினில் பிறந்தார். 1,815ல் லண்டன் திரும்பினார். லண்டன் திரும்பிய மூன்று ஆண்டுகளில் தந்தையை பறிகொடுத்த இவரின் வாழ்க்கை திசை திரும்பியது. அதன்பின் ஜே.எம்.ஹீத் என்பவரிடம் வேலைக்கு சேர்ந்து, அவருடன் மீண்டும் இந்தியா வந்தார். திறமையாக உழைத்து ஹீத் இன் நம்பிக்கைக்கு உரியவரானார். 1,822 இல் ஹீத் லண்டன் திரும்பிய போது, இந்திய வியாபாரத்தின் முழு பொறுப்பையும் இவரிடம் ஒப்படைத்தார். வியாபாரத்தில் கிடைத்த பங்கு பணத்தில் 1,833ல் ஹீத்துக்கு சொந்தமான ஈரோடு, சேலம், ஆத்தூர் ஆகிய இடங்களில் சாய தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கினார். கோவை, திருச்சி, சேலம் பகுதிகளில் பருத்தி துணிகளை வாங்கி வியாபாரம் செய்தார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கவும், 1,836ல் நயன அம்மாள் என்பவரிடம் இருந்து சேலம் ஜமீனை பெரும் தொகை கொடுத்து விலைக்கு வாங்கினார். இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் அதிகாரிகளாகவும், வணிகர்களாகவும் இருந்த காலகட்டத்தில் இந்தியாவின் முதல் ஆங்கிலேய ஜமீன்தாராக விளங்கினார். சேர்வராயன் மலைத்தொடரில் 136 ஏக்கர் பரப்பு கொண்ட மிகப் பெரிய காபி எஸ்டேட் உருவாக்கினார். திருமணிமுத்தாற்றின் குறுக்கே 150 அடி நீளமும், 10 அடி உயரமும் கொண்ட பலமான அணைக்கட்டு ஒன்றை பாசன வளத்துக்காக கட்டியுனார். ஃபிஷர் அணைக்கட்டு என்ற பெயரில் சேலம் மரவனேரி பகுதியில் இன்றும் நல்ல நிலையில் உள்ளது. மோகனூர் மற்றும் மசக்காளிப்பட்டியில் சத்திரங்கள் கட்டி அவற்றின் வருவாய்க்காக நிலதானமும் வழங்கியுள்ளார். அன்றைய அரசுக்காக கோர்ட், ஜெயில், ராணுவ முகாம், தூக்குமேடை போன்றவை அமைக்க இடங்களை வாடகைக்கு விட்டிருந்தார்.அஸ்ஸாமில் இருந்து தேயிலை விதைகளையும், கெய்னாக்ராஸ் என்ற புல்வகையையும் சேலம் பகுதிக்கு கொண்டு வந்தார். ஆப்பிள் மரத்தையும் வளர்க்க முயற்சித்தார். அவர் கடைசி காலம் வரை சேலத்திலேயே கழித்துள்ளார்.

1 comment:

டக்கால்டி said...

சேலம் பற்றிய வரலாற்றுத் தகவல் அருமை அய்யா...