தூத்துக்குடி : பள்ளிகளில் நடத்தும் பாடங்கள் அனைத்தும் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புபடுத்தி நடத்தப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை எப்படி பாடம் நடத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலாண்டு தேர்வு துவங்க உள்ள நிலையில் தற்போது தான் பள்ளிகளில் சமச்சீர் கல்வி புத்தகம் வந்த பிறகு பாடங்கள் நடத்தும் பணி துவங்கியுள்ளது. ஒன்று முதல் 8ம் வகுப்பிற்கு ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்வி முறைகளில் சமச்சீர் கல்வி அடிப்படையில் பாடங்கள் நடத்த ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை எந்த முறையில் பாடங்கள் நடத்த வேண்டும், எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவுரைகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குநர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த புதிய உத்தரவு ந.க.எண் 0964/ஏ2/எஸ்எஸ்ஏ/2011ல் கூறப்பட்டிருப்பதாவது; சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை கொண்டு செயல்வழிக்கற்றல் (ஏபிஎல்), எளிய படைப்பாற்றல் கல்வி (எஸ்ஏஎல்எம்) மற்றும் படைப்பாற்றல் கல்வி (ஏஎல்எம்) முறைகளை செயல்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சியை பணிமனையாக மாற்றி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குறுவள மைய பயிற்சியில் புதிய பாட புத்தகத்தின் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்து கொள்வதற்கான திட்டமிடல், கலந்துரையாடல், கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் மற்றும் மாதிரி பாடத்திட்டம் தயாரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய கலைத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி வகுப்பறை செயல்பாடுகள் அனைத்தும் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புபடுத்தி நடத்தப்பட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் செயல்பாடுகளை அமைத்து கொள்ள வேண்டும். * ஒன்றாம் வகுப்பை பொறுத்தவரை சமச்சீர் பாடப்புத்தகம் அடிப்படையில் (2010-2011ல்) தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள செயல்வழிக்கற்றல் அட்டடைகளை கொண்டு வகுப்பறை நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். இரண்டு, மூன்று, நான்காம் வகுப்புகளை பொறுத்தமட்டில் கீழ்காணும் வழிகாட்டிக் குறிப்புகளை பயன்படுத்த வேண்டும். * பொதுவான (ஜெனரிக் ஸ்கில்ஸ்) திறன்களை கொண்ட அட்டைகளை மாற்றம் செய்ய வேண்டாம். * பழைய பாடப்புத்தகங்களை அடிப்படையாக கொண்ட கற்றல் அட்டைகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஆசிரியர்களின் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு புதிய செயல்பாடுகளை அமைத்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தலாம். * தேவையான இடங்களில் பழைய கற்றல் அட்டைகளோடு புதிய பாட புத்தக கருத்துக்கள், செயல்பாடுகளை இணைத்து ஏணிப்படிகளில் பொருத்தி கொள்ளலாம். * பக்கவாட்டு ஏணிப்படிகளில் உள்ள கதை, உரையாடல், பொம்மலாட்டம், விளையாட்டு, நாடகம், தனி நடிப்பு, பாடல், வில்லுப்பாட்டு போன்ற செயல்பாடுகளை புதிய பாடப்புத்தகத்தில் இருந்து அமைத்து கொள்ளலாம். * புதிய பாடப்புத்தகத்தில் உள்ள பயற்சிகள், மதிப்பீடுகள், செயல்பாடுகள் ஆகியவற்றை வகுப்பறையிலோ அல்லது வீட்டு பாடமாகவோ கொடுக்கலாம். * சில பாடங்களில் தேவையில்லாத படிநிலைகள் மற்றும் சின்னங்களை பிளாக் மார்க்கர், ஒயிட் மார்க்கர் ஒட்டி மறைத்து பயன்படுத்தலாம். கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கண்டிப்பாக ஆசிரியர் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.இந்த செயல்பாடுகள் வரும் 27ம் தேதி நடக்கும் குறுவள மைய பயிற்சி பணிமனையை பயன்படுத்தி செய்ய வேண்டும். இந்த பணிமனையை வடிவமைக்கப்பட்ட புதிய செயல்பாடுகளை முதலில் குறுவள மைய அளவில் தொகுக்க வேண்டும். மாவட்ட அளவில் தொகுத்து மாநில இயக்கத்திற்கு அனுப்ப வேண்டும். செயல்பாடுகளை தொகுக்கும் போது, ஒரே செயல்பாடு திரும்ப வராமல் கவனமாக தொகுக்க வேண்டும்.மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்களை மாநில அளவில் தொகுத்து, புத்தக வடிவில் செயல்பாடுகளுக்கான கருத்து வளநூல் ஆக ஆசிரியர்களுக்கு தரப்பட உள்ளது. இதனால் ஆசிரியர்கள் தங்கள் கற்பனைத்திறன் அனைத்தையும் பயன்படுத்தி கற்றல் அட்டைகளை தயாரிக்கவும், செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டும். * புதிய பாடப்புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எளிய படைப்பாற்றல் கல்வி (எஸ்ஏஎல்எம்) முறையில் பாடத்திட்டம் மற்றும் சிறுகுழு கற்றலுக்கான துணைக்கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றை தயார் செய்து பயன்படுத்த வேண்டும். * பாடத்தை விரிவாக பகுப்பாய்வு செய்தல், அலகுகளை பிரித்தல், மாதிரி பாடத்திட்டம் தயாரித்தல், அதற்கு ஏற்ப துணைக் கற்றல் உபகரணங்கள் தயாரித்தல் ஆகிய பணிகளில் குறுவள மைய பயிற்சியின் போது ஈடுபடுதல் வேண்டும். * 6 முதல் 8ம் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல் குறிப்புகளாக புதிய பாடப்புத்தகத்தை அடிப்படையாக கொண்டு படைப்பாற்றல் கல்வி (ஏஎல்எம்) முறையில் பாடத்திட்டம் மற்றும் குழு கற்றலுக்கான துணைக்கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றை தயார் செய்து பயன்படுத்த வேண்டும். * பாடத்தை விரிவாக பகுப்பாய்வு செய்தல், அலகுகளாக பிரித்தல், மாதிரி பாடத்திட்டம் தயாரித்தல், அதற்கு ஏற்ற துணைக்கற்றல் உபகரணங்கள் தயாரித்தல் ஆகிய பணிகளில் குறுவளை மைய பயிற்சியின் போது ஈடுபடுதல் வேண்டும். இது தொடர்பாக நாளை (25ம் தேதி) காலை 11 மணிக்கு எடுசாட் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் கருத்தாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய விரிவுரையாளர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட தொடக்ககல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்க வேண்டும். 5 முதல் 8ம் வகுப்பு நடத்த வழிகாட்டி குறிப்பு * பாடக்கருத்துக்கள் சிதையாமல் பாடங்களை அலகுகளாக பிரிக்க வேண்டும். ஒரு அலகு மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பாடக்கருத்துக்கு ஏற்ப கற்கும் முறைகளை தெரிவு செய்ய வேண்டும். * குழந்தைகளுக்கு சற்றே அறிமுகமானதும், எளிமையானதுமான பாடப்பகுதி தயார் செய்ய வேண்டும். வேறு கற்றல் முறைகள் ஏதேனும் இருந்தால் அதனையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வகுப்பறை செயல்பாடு * பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். செயல்பாட்டில் உள்ள கருத்துக்களின் தன்மைக்கு ஏற்ப அறிமுக செயல்பாடாகவோ குழு செயல்பாடுகளாகவோ வலுவூட்டும் செயல்பாடுகளாகவோ செய்யலாம். * சிறுகுழுவில் விவாதம் செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வகுப்பறையில் கண்டிப்பாக வாய்ப்பளிக்க வேண்டும்.
* சோதனைகளையும், செயல்பாடுகளையும் ஒவ்வொரு குழந்தையும் தாங்களே செய்து பார்க்க வாய்ப்பளிக்க வேண்டும். ஒவ்வொரு பாட வேளைக்கும் உரிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தானே தயாரித்து வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
* சோதனைகளையும், செயல்பாடுகளையும் ஒவ்வொரு குழந்தையும் தாங்களே செய்து பார்க்க வாய்ப்பளிக்க வேண்டும். ஒவ்வொரு பாட வேளைக்கும் உரிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தானே தயாரித்து வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
1 comment:
nalla visayam thaanee..!
Post a Comment