சென்னை, ஆக 19-
தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் சாந்தி நிகேதன் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் தற்போது அரசின் சமச்சீர் பாடப்புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
புத்தகம் வழங்குவதற்கு பெற்றோர்கள் பணம் செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி தொடங்கும் முன்பு பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் கல்வி கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு பணம் பெற்று விட்டதாகவும் இப்போது மீண்டும் பணம் கேட்பதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
சமச்சீர் புத்தகங்களுக்கு வகுப்பு வாரியாக ரூ.400, ரூ.500, ரூ.600 என வசூலிக்கப்படுவதாகவும் தற்போது பணம் தராதவர்களுக்கு புத்தகம் கொடுக்க மாட்டோம் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்கள் கேட்டதற்கு பணம் கொடுத்தால்தான் புத்தகம் வழங்குவோம் என திட்டவட்டமாக கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் சிலர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து பெற்றோர் ஏழுமலை கூறியதாவது:-
எனது மகன் இந்த பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். ஏற்கனவே பள்ளி கட்டணம் புத்தகம் போன்றவைகளுக்கு ரூ.10 ஆயிரம் பெற்றுக் கொண்டனர். இப்போது சமச்சீர் புத்தகம் வழங்குவதற்கு மீண்டும் பணம் கேட்கிறார்கள். பணம் கட்டவில்லை என்றால் புத்தகம் கொடுக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள்.
ஏற்கனவே புத்தகம், நோட்டு வகைகளுக்கு ரூ.2000 வசூலித்தனர். 20 நோட்டு மட்டும் கொடுத்துள்ளனர். என்னை போன்ற கூலி வேலை செய்யும் ஏழைகள் மட்டும் பணம் கொடுக்காமல் இருக்கிறோம். மற்றவர்கள் பணம் கொடுத்து புத்தகங்களை பெற்று விட்டனர்.
இதுபற்றி தலைமை ஆசிரியரிடம் கேட்டால் எனக்கு எதுவும் தெரியாது, நிர்வாகியிடம் கேளுங்கள் என்று கூறுகிறார். மீண்டும் பணம் கொடுக்க வழியில்லை. அதனால் இதில் கல்வித்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment