About Me

Sunday, August 21, 2011

தமிழக பள்ளிகளில் மதிய உணவைப் போல விரைவில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்

தமிழகத்தில் தற்போது மதிய உணவுத் திட்டம் வெற்றிகரமாக நடந்து வருவதைப் போல, விரைவில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.

தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது மதிய உணவுத் திட்டத்தை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி லட்சக்கணக்கான ஏழை பெற்றோர்களின் மனதில் பால் வார்த்தார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கூடங்களுக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.

பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், இந்தத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றி, சத்தான உணவை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தார். இந்தத் திட்டமும் பெரும் புரட்சி படைத்தது. இத்திட்டத்தை பல மாநிலங்களும் இன்று கடைப்பிடிக்கின்றன.

இந்தநிலையில் தற்போது இன்னொரு புதிய புரட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு வருகிறார். அது காலை உணவுத் திட்டம்.

தற்போத நாட்டிலேயே புதுச்சேரி மாநிலத்தில் மட்டுமே காலை உணவுத் திட்டம் அமலில் உள்ளது. ராஜீவ் காந்தி காலை உணவுத் திட்டம் என்று இதற்குப் பெயர். தற்போது இந்த வரிசையில் தமிழகமும் விரைவில் சேரவுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி மாணவ, மாணவியருக்கு காலை உணவாக பால், பன், உப்புமா உள்ளிட்டவை தரப்படும் என்று தெரிகிறது. இத்திட்டம் குறித்து தமிழக அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. திட்ட வரைவு இறுதியானவுடன் இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று தெரிகிறது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மதிய உணவு மற்றும் சத்துணவுத் திட்டத்திற்கு தமிழகம்தான் நாட்டுக்கே முன்னோடியாகும். இந்தத் திட்டங்களால் தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டது. இப்போது அதே பாணியில் காலை உணவுத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.

தமிழகத்தில் 1985ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தை 1995ம் ஆண்டு மத்திய அரசு ஏற்று நாடு முழுவதுக்கும் விரிவுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2001ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் இந்தத் திட்டத்தைப் பாராட்டி அனைத்து மாநிலங்களும் சத்துணவை வழங்க வேண்டும் என்று உத்தரவே பிறப்பித்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்த வரிசையில் காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் அமலாகும்போது அது மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

No comments: