About Me

Sunday, August 21, 2011

அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் நியமனத்திற்கு பதிவுமூப்பு முறையா? போட்டித்தேர்வா? நாளை பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்படுகிறது

சென்னை, ஆக.21-


அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் நியமனத்திற்கு பதிவுமூப்பு முறை கடைப்பிடிக்கப்படுமா? அல்லது போட்டித்தேர்வு நடத்தப்படுமா? என்பது பற்றி நாளை நடக்கும் பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்படுகிறது.


ஆசிரியர் நியமனம்
தற்போது அரசு பள்ளிக்கூடங்களில் இடைநிலை ஆசிரியர்கள், தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய அனைத்து ஆசிரியர்களும் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.


இதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் (2001-2006) வரை இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் தவிர பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட்டார்கள். தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், ஆசிரியர் நியமனத்திற்கு தற்போது இருக்கும் பதிவுமூப்பு முறை பின்பற்றப்படுமா? அல்லது முன்பு இருந்து வந்ததைப் போன்று போட்டித்தேர்வு முறை கடைப்பிடிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


50 சதவீத இடங்கள்
அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் நியமனம் கண்டிப்பாக போட்டித்தேர்வு மூலமாகத்தான் இருக்கும் என்பது பரவலாக நிலவும் கருத்து. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பதிவுமூப்பு முறை ரத்து செய்யப்பட்டால் பல ஆண்டுகளுக்கு முன்பு பி.எட். முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வருடக்கணக்கில் காத்திருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி 50 சதவீத காலி இடங்களை போட்டித்தேர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத காலி இடங்களை தற்போது பின்பற்றப்பட்டு வரும் சீனியாரிட்டி முறை மூலமாகவும் நிரப்பப்படும் என்றும் ஒருசாரார் கூறுகிறார்கள்.


இவ்வாறு செய்தால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் பி.எட். பட்டதாரிகளுக்கும் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது. அதேபோல், போட்டித்தேர்வு எழுதி ஆசிரியர் வேலை விரும்பும் இளம் பி.எட். பட்டதாரிகளுக்கும் அதிகளவில் பாதிப்பு உண்டாகாது என்றும் அரசு கருதுவதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளை அறிவிக்கப்படுகிறது
பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிடும் அறிவிப்பில் ஆசிரியர் நியமன முறை பற்றிய விவரம் கண்டிப்பாக இடம்பெறும்.
இது மட்டுமல்லாமல் நடப்பு கல்வி ஆண்டில் எவ்வளவு இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்ற விவரமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் அறிவிப்பை பி.எட். பட்டதாரிகள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

No comments: