Thursday, September 29, 2011

சுவிஸ் வங்கி ரகசியங்கள் கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

கருப்புப் பணத்தின் அடிப்படை ஊழல், லஞ்சம், வரி ஏய்ப்பு, அடித்துப் பிடுங்கல், ஏமாற்றுதல், சூழ்ச்சியால் திசை திருப்பல். ஊழலும், ஏய்ப்பும்தான் கருப்புப் பணத்தின் விதை.
சம்பளம் வாங்குபவர்களுக்கு சம்பளத்திலேயே பிடித்தமெல்லாம் போக மிச்சம்தான் கைக்கு வரும். ஆனால் அரசியல்வாதிகள், முதலாளிகள், பெரும் பணக்காரர்கள், சினிமா போன்றவற்றில் இது கிடையாது. அவர்கள் கொடுக்கும் கணக்கிலிருந்துதான் வரி விதிக்கப்படும். இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஏய்ப்பும் ஊழலும். எப்படியெல்லாம் ஏய்க்கிறார்கள். ஊழல் எங்கிருந்தெல்லாம்
செய்யப்படலாம். எவ்வாறெல்லாம் பணத்தினை லஞ்சமாய், திசை திருப்பலாய்ப் பிடுங்கலாம் என்பதெல்லாம் இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.
ஏய்த்த, ஊழல் செய்த பணத்தினை உள்நாட்டில் வைத்திருப்பது ஆபத்து. அதனால் இதனைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்திருக்கவேண்டும். ஒரு வேளை உள்நாட்டில் ஏதாவது குளறுபடிகள் நடந்தால், பணம் பத்திரமாய் இருக்க வேண்டும். தேவையென்றால் உலக கரன்சிகளில் மாற்றி வைத்திருந்தால், வேறெங்காவது போய் கடை பரப்ப ஏதுவாக இருக்கும். நாம் வைத்திருக்கும் பணம் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் முக்கியமாய் ரகசியமாகவும் இருக்க வேண்டும். பணமிருப்பது தெரிந்தால் எதிரிகள் இறுதி முயற்சியாய் போட்டும் தள்ளலாம். இத்தனை எதிர்பார்ப்புகளோடு எங்கே பணம் வைக்க முடியும் ?
சுவிட்சர்லாந்து.
ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையின் சரிவில் இருக்கும் ஒரு குட்டி நாடு. சுவிஸ் சாக்லெட்கள், ஆல்ப்ஸ் மலையின் ஸ்கீயிங் போன்றவற்றுக்கு மிகப் பிரசித்தம். அதைவிடப் பிரசித்தம் – சுவிஸ் வங்கிகள்.
உலகின் நம்பர் 1 ரகசிய வங்கிகளின் தாயகம். நேர்மையான காரணங்களில் ஆரம்பித்து அடாவடியான செயல்களில் ஈடுபட்டு சேர்த்த பணம் வரை கழுத்தை வெட்டினாலும் காட்டிக் கொடுக்காத நேர்மையோடு இருக்கும் ஒரே நாடு. சுவிஸ் வங்கிகள் மட்டும்தான் இதைச் செய்கின்றன என்று அர்த்தமல்ல. உலகில் பல்வேறு குட்டித் தீவுகள், பிரிட்டிஷ் அரசுக்குக் கீழே வரும் காலனிகள், அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற குட்டித் தீவுகள் எனப் பலவும் இந்த மாதிரியான ஆஃப்ஷோர் பேங்கிங்கிற்கு (Offshore Banking) பிரசித்தி பெற்றவையே. ஆனாலும், ரகசிய வங்கிப் பரிவர்த்தனைகளில் சுவிஸ்தான் சச்சின் தெண்டுல்கர்.
சுவிட்சர்லாந்து, 300 ஆண்டுகளாய் யாரோடும் சண்டைக்கு போகாத, மல்லுக்கு நிற்காத தேசம். மொத்த ஐரோப்பாவும் திசைக்கு ஒருவராய் தோள் தட்டி நின்ற இரண்டாம் உலகப் போரின்போது கூட வெளியே நின்ற தேசம். சுவிட்சர்லாந்தில் வங்கிகள் எப்படி உருவாகின என்பது ஒரு சுவாரசியமான கதை.
1713-இல் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. ‘கிரேட் கவுன்சில் ஆப் ஜெனிவா’வில் அந்த வருடத்தில் தான் ரகசிய வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விவரங்களின் மீதான உச்சக்கட்டப் பாதுகாப்பு & யாரிடத்திலும் பகிராமை என்கிற கூறுகளோடு சட்டம் இயற்றினார்கள். அன்றைக்கு ஆரம்பித்ததுதான் சுவிஸ் வங்கிகளின் இன்றைய ப்ரீமியம் மதிப்புக்கான காரணம். இன்று வரைக்கும் ஒரு வேளை ஒரு வங்கியாள் விவரங்களை வெளியே கொடுத்தாலும் அது சிவில் கேஸ் மட்டுமே. கிரிமினல் கேஸ் கிடையாது. அதனால், வாய் மூடிய, செவி திறந்த பேங்கர்கள் சுவிட்சர்லாந்தினை சொந்த ஊராய் நினைத்துக் கொண்டு கப்பலேறினார்கள்.
சுவிஸ் வங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாய் பிரபலமாகத் தொடங்கின. பிரபுக்கள், தனவந்தர்கள், ராஜவம்சத்தினர் முக்கியமாய் பிரெஞ்ச் ராஜவம்சத்தினர் என பதினெட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்த இந்த வாடிக்கையாளர் கூட்டம், இருபத்தியோறாம் நூற்றாண்டில் நல்லவர்கள், சர்வாதிகாரிகள், முதலாளிகள், நிறுவனங்கள், மாபியாக்கள், போதை மருந்து கடத்துபவர்கள், ஊழல் அரசியல்வாதிகள், புரோக்கர்கள் என மாபெரும் மனித சமூக அடையாளங்களோடு நிறைந்திருக்கிறது. பக்கத்தில் போய் கேட்டால், சுவிஸ் அதிகாரிகள் “அதெல்லாம் சும்மா, நாங்க உஜாலா சுத்தம், வேணும்னா டெஸ்ட் பண்ணிக்கிடுவோம்” என்று சீன் போடுவார்கள். இதற்கும் ஒரு காரணம் இரண்டாம் உலகப் போரில் ஆரம்பித்தது.
இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரம். ஹிட்லர் ஒவ்வொரு பிரதேசமாய் சுவாகா பண்ணிக் கொண்டிருந்த வேளை. ஐரோப்பாவிலிருந்த யூதர்கள் தங்களுடைய வாழ்நாள் பணத்தினை சுவிஸ் வங்கிகளில் சேர்க்க ஆரம்பித்தார்கள். ஹிட்லர் அப்போது ஜெர்மனியில் ஒரு சட்டமியற்றினார். ஜெர்மானியர்கள் எவரெல்லாம் அந்நிய நாட்டில் பணம் வைக்கிறார்களோ அவர்களுக்கு மரண தண்டனை. போர் உச்சக்கட்டத்திலிருந்த நேரம். இந்த சட்டம் இயற்றப்பட்டவுடனே, சுவிட்சர்லாந்து அரசு இன்னமும் தங்களின் வங்கி ரகசியத்தைப் பேண ஆரம்பித்தது. பின்னாளில், போர் நடந்த சமயத்தில், நாஜி ஆட்களே கொள்ளையடித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் நிரப்பியதும் நடந்தது.
இந்த நேரத்தில்தான் சுவிஸ் வங்கிகள் எதிர்பார்க்காத காரியத்தினை செய்தன. நாஜிக்கள், யூதர்களின் ஆவணங்களை அழிக்க ஆரம்பித்தார்கள். யாருக்குமே கிடைக்காத பரிசு அது. போரால் உலகமே சின்னா பின்னாமாகிக் கொண்டிருந்தபோது போரில் கலந்து கொள்ளாத ஒரு நாட்டில் பணமும், தங்கமும் கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஹோலோகாஸ்டில் சாகடிக்கப்பட்ட யூதர்களின் பணத்தையெல்லாம் சுவிஸ் வங்கிகள் விழுங்கிவிட்டது என்கிற குற்றச்சாட்டு பின்னாளில் வந்து அது இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும் காரணம் சுவிஸ் ப்ராங்கின் [அந்நாட்டு நாணயம்] நிலையான தன்மை. கரன்சிகள் அனைத்தும் ஏற்றத்தாழ்வுகளோடே இருக்கும் என்பது பொருளியல் விதி. ஆனால் கிட்டத்திட்ட நிலையாய் இருக்கும் ஒரே கரன்சி – சுவிஸ் ப்ராங்க். அதுவுமில்லாமல், வங்கியில் இருக்கும் பணத்திற்கு ஈடாய் 40% தங்கமாய் வைத்திருக்கும் ஊரும் சுவிஸ்தான். பணத்துக்குப் பணம். பாதுகாப்புக்கு தங்கம். அதனால்தான் எல்லாரும் அங்கே ஓடுகிறார்கள்.
சுவிஸ் வங்கிகள் நம்மூர் வங்கிகள் போலத் தான். சேமிப்பு, நடப்புக் கணக்குகள்; சில்லறை வங்கிச் சேவை; வரிகள் போன்றவையெல்லாம் உண்டு. ஆனால், சுவிஸ் வங்கிகளின் உலகப் பெருமை என்பது அவர்களின் நம்பர்டு அக்கவுண்ட் (Numbered Accounts) என்பதில் ஆரம்பிக்கிறது.
எம்.ஜி.ஆர் சமாதிக்கு வரும் மொட்டை போட்ட ஊரார்கள் எல்லார்க்கும் சொல்லப்படும் கதை – ‘காது வைச்சுக் கேளுங்க, எம்.ஜி.ஆர் கட்டியிருந்த கடிகாரம் இன்னமும் ஓடிக்கிட்டு இருக்கு. அதுல தான் அவரோட சுவிஸ் பேங்க் நம்பர் இருக்கு’. பிலிப்பென்ஸின் முன்னாளைய அதிபரின் மனைவி இமால்டா மார்கோஸ். வருமானத்திற்கு மீறிப் பணம் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு. $430 மில்லியன் சுவிஸ் வங்கிகளில் வைத்திருப்பதாகச் சொன்னார்கள். அம்மணி இப்போது மீண்டும் ஹாயாக வலம் வர ஆரம்பித்து விட்டார். சுகார்தோ சுவிஸ் வங்கியில் போடக் கொடுத்த காசு, ஊர் உலகமெல்லாம் சுற்றி, கடைசியில் கோயமுத்தூரில் ஒரு பேக்டரியில் வந்து விழுந்தது நான் நேரில் கேட்ட நிஜக்கதை. ஐந்து மாதங்களுக்கு முன் எகிப்தில் காலாவதியான ஹோஸ்னி முபாரக், இன்னும் அகப்படாமல்இருக்கும் லிபிய கடாபி என எல்லார்க்கும் சுவிஸ் வங்கியில் இருக்கிறது ஒரு நம்பர்டு அக்கவுண்ட்.
இந்த நம்பர்டு அக்கவுண்ட்தான் கருப்புப் பண சேமிப்புக் கூடம். நம்பர்டு கணக்கில் உங்கள் பெயரோ, முகவரியோ இருக்காது. உங்களுடைய கணக்கு என்பது 34 இலக்க எண் அல்லது ஒரு புனைபெயர். உங்களைப் பற்றிய தகவல்கள் வெகு ரகசியமாய், உங்கள் கணக்கினைத் துவங்கும் அதிகாரி மற்றும் வங்கியின் உயர்நிலை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். வங்கியில் இருந்தாலும் வேறு யாருக்கும் தெரியாது. குறைந்த பட்ச வைப்பு: $100,000 பின்னாளில் நடக்கும் பரிவர்த்தனைகள் குறைந்த பட்சம் $50,000 க்கு மேலிருக்க வேண்டும். நம்பர்டு கணக்கில் மட்டும்தான் உலகிலேயே நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்திற்கு, வங்கிக்கு வட்டி செலுத்தவேண்டும். 10 வருடங்கள் பரிவர்த்தனைகள் இல்லாமல் போனால் உங்களை உலகில் தேட ஆரம்பிப்பார்கள். விவரங்களை நீங்கள் ஒழுங்காய் கொடுத்திருந்தால் பணம் வாரிசுக்குப் போகும். இல்லையென்றால், வங்கிக்கு. விழுந்தால் உமக்கு, விழாவிட்டால் சுவிஸுக்கு என்கிற லாட்டரித்தனமான வர்த்தகம்.
இந்தக் கணக்கிற்குதான் பணக்கார உலகம் ஆலாய்ப் பறக்கிறது. ஹசன் அலி லண்டனுக்கு சீசன் டிக்கெட் எடுக்கிறார். அக்கால இடி அமீனிலிருந்து இன்று வந்த நடிகர் வரை ஆசைப்படுகிறார். எல்லா அரசியல்வாதிகளும் லண்டனுக்கு டூர் போகிறார்கள். லண்டனில் சுவிஸ் வங்கி சேவை ஆலோசனை நிறுவனங்கள் தடுக்கி விழுந்தால் கிடைக்கும். எல்லார் கனவும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பது. இம்மாதிரியான சேவைகளால்தான் பரிமாற்றங்கள், பரிவர்த்தனைகள் அதீதப் பணம், அதன் மூலம் வரும் திமிர், கர்வம்,தடைகளற்ற வாசல் திறப்புகள், அதிகார மமதை. சேர்த்த பணத்தினை விஸ்தரிக்க வழியில்லாமல் போனால், யாருக்கும் அதிகமாய் சம்பாதிக்கத் தோன்றவே தோன்றாது. ஆனால் சுவிஸ் வங்கிகள் வெறும் பாதுகாப்பு மட்டுமல்ல, அங்கிருந்து உலக வர்த்தகத்தில் பணத்தினைப் போட்டு இன்னமும் பெருக்கலாம். கரன்சி சந்தைகள், ஆயில், கமாடிட்டி, ரியல் எஸ்டேட், குதிரைப் பந்தயம், க்ரூஸ் கப்பல்கள், படகுகள் என நீளும் பணப்பெருக்க முயற்சிகளில் எதில் வேண்டுமானாலும் இறங்கலாம்.
சுவிட்சர்லாந்தின் மொத்த வங்கிப் பொருளாதார கணக்கினை இரண்டே வங்கிகள் தான் கட்டுப்படுத்துகின்றன். UBS என்றழைக்கப்படும் யுனைட்டட் பேங்க் ஆப் சுவிட்சர்லாந்து மற்றும் கிரெடிட் ஸ்யூஸே (Credit Suisse) வங்கி. நடக்கும் பரிவர்த்தனைகளில் 50% இவ்விரண்டு வங்கிகளின் மூலமே நடக்கும்.
மன் மோகன் சிங் / பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் பெரியவர்கள், பட்டியல் வந்து விட்டது, வெளியிட மாட்டோம், ரகசிய ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என்றெல்லாம் சொல்வது UBS வெளியிட்ட அறிக்கை மட்டுமே

source:

http://adf.ly/2wWZg

No comments:

4tamilmedia