About Me

Wednesday, September 21, 2011

காலியிடத்தை மறைத்து வேண்டப்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாறுதல்

மதுரை: பள்ளி கல்வித் துறை இடமாறுதல் கவுன்சிலிங்கில் காலியிடங்களை மறைத்து, நடத்தியதால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று முன்தினம்
துவங்கியது. சென்னையில் தலைமை ஆசிரியர்களுக்கு நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் நடந்தன. மதுரையில் முதல்நாள் காலை முதுநிலை ஆசிரியர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் காலியிடம் காட்டவில்லை என புகார் தெரிவித்தனர்.

மாலையில் பட்டதாரி ஆசிரியர்களும் அதே மனக்குறையை தெரிவித்தனர். இரண்டாம் நாளான நேற்றும் இதே நிலை நீடித்தது. "வெப்சைட்டில் வெளியிட்ட காலியிடங்களில் "வேண்டப்பட்டவர்களுக்கு' கவுன்சிலிங்கிற்கு முன்னதாகவே நியமன ஆணை வழங்கி விட்டனர். கண்துடைப்பாகவே கவுன்சிலிங் நடக்கிறது,' என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் இரண்டு நாட்களாக பலர், மதுரை மாவட்டத்தில் பணியில் சேர சென்னையில் இருந்து நியமன ஆணையுடன் வந்தனர். இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்க வந்த ஆசிரியர்கள் வேதனைப்பட்டனர். தமிழ்ப் பணியிடம் 4, ஆங்கிலம் 3, கணிதம் 2, அறிவியல் 13, சமூகஅறிவியல் 2 காலியிடங்களே காண்பிக்கப்பட்டன. இந்தாண்டு 11க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அவற்றை பட்டியலில் காண்பிக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

"கவுன்சிலிங் துவங்கும் முன்பே பலர் பணம் கொடுத்து இடமாறுதல் பெற்றது உண்மைதான். அதேசமயம் வெப்சைட்டில் காலியிடங்கள் காட்டப்பட்ட பின், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்ற பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கவுன்சிலிங் நடக்கும்போது நியமன ஆணையுடன் வந்ததால், அந்த இடங்கள் மறைக்கப்பட்டதாக தவறாக கருதினர். முதலில் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்திய பின், புதிய நியமன ஆணை வழங்கி இருந்தால் இதுபோன்ற குழப்பம் வந்திருக்காது,' என ஆசிரியர்கள் கூறினர். முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பை தற்காலிகமாக கவனித்துவரும் ஸ்ரீதேவியிடம் கேட்டபோது, ""வெப்சைட்டில் வெளியிட்ட அனைத்து இடங்களையும் முறைப்படி கவுன்சிலிங் மூலம் நிரப்பி வருகிறோம். வெளிப்படையாக நடத்தப்பட்டு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யாரும் இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. மாநில அளவில் கவுன்சிலிங் நடப்பதால் சென்னையிலேயே கேட்டு தெரிந்து கொள்ளலாமே,'' என்றார்.

Dinamalar - No 1 Tamil News Paper


No comments: