About Me

Thursday, September 22, 2011

"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர்

காணக்கிடைக்காத அரிய பொருள் ஒன்று, தங்கள் கைகளில், தங்களுக்கே உரியதாய் இருக்கும் அந்த மகிழ்ச்சியை, உற்சாகத்துடன் வர்ணிக்கின்றனர், அந்த மாணவியர். அவர்களது கண்களில், ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள்; முகங்களில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் பிரகாசிக்கப் பேசுகின்றனர், அவர்கள்.

""என் கைகளிலும் லேப்-டாப் தவழும் என்று, நான் கனவிலும்
நினைத்ததில்லை,'' என்றார், ஒரு மாணவி. ""என் வாழ்க்கையிலேயே இந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்ததே இல்லை,'' என்றார், மற்றொருவர். ""உலகமே எங்கள் கைகளில் வந்தது போல் இருந்தது,'' என்கின்றனர், வேறு இரு மாணவியர். கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இவர்கள், தமிழக அரசின் இலவச லேப்-டாப் பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாணவி லோகமாலினி: நினைக்கவே சந்தோஷமாய் இருக்கிறது. நம் கையிலு<ம், "லேப்-டாப்' இருக்கும், நாமும் அதை அன்றாடம் பயன்படுத்துவோம் என்றெல்லாம் எண்ணிப் பார்க்கவே இல்லை. லேப்-டாப்பை பயன்படுத்தி, படிப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இவரது தந்தை நஞ்சப்பன், கூலித் தொழிலாளி.

இந்துமதி பிரியா: படிப்புக்கு லேப்-டாப் மிகவும் பேருதவியாக இருக்கும். படங்கள் வரைந்து பழகவும், அகராதியில் பொருள் தேடவும், பாடங்கள் படிக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. லேப்-டாப் கிடைத்த தினத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவரது தந்தை முருகேசன், ஒர்க் ஷாப் தொழிலாளி.

ஆர்த்தி: லேப்-டாப் கிடைக்கப் போகிறது என்று அறிந்ததும், நானும், என் பெற்றோரும், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியடைந்தோம். உள்நாட்டு செய்திகள் முதல் வெளிநாட்டுச் செய்திகள் வரை அறிந்து கொள்வதற்கு, லேப்-டாப் பயன்படும். பலருக்கும் கிடைக்காத, விலை மதிப்பான பொருள் நம்மிடம் இருக்கிறது எனும் போது, பெருமிதமாக இருக்கிறது. இவரது தந்தை பொன்னுசாமி, ஆட்டோ டிரைவர்.

அபிராமி: 18 ஆயிரம் ரூபாய் விலை மதிப்பு கொண்ட லேப்-டாப், நமக்கு இலவசமாக கிடைத்திருக்கிறது என்பதை உணரும்போது தான், நாம் எந்தளவுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்பதையும் உணர முடிகிறது. இதை பயன்படுத்தி, படிப்பை மேம்படுத்த முயற்சிப்பேன். இவரது தந்தை கணேசன், ஒர்க் ஷாப் தொழிலாளி.

நிஷா: லேப்-டாப்பில் பாடங்களை படிக்கும் போது, ஆர்வமும், மேலும் படிக்க வேண்டும் என்ற உற்சாகமும் ஏற்படுகிறது. இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி, மிகுந்த பெருமைப்படுகிறேன். இவரது தந்தை மத்தியாஸ், மளிகை கடை நடத்துகிறார்.

உஷாராணி: உலக நடப்புகள், அறிவியல், வரலாறு போன்றவற்றை, ஓரிரு வினாடிகளில் அறிந்து கொள்ள முடியும். இது கையில் இருந்தால், தெரியாத விஷயம் என்று எதுவும் இல்லை. அந்த வகையில், லேப்-டாப் வழங்கிய அரசுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்ல வேண்டும். இவரது தந்தை முருகேசன், கூலித் தொழிலாளி.

நாகலஷ்மி: என் அண்ணன் படிக்கும் போதெல்லாம், இத்தகைய திட்டங்கள் இல்லை. அதனால், எனக்கு லேப்-டாப் கிடைத்தவுடன், குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்பட்டோம். இவரது தந்தை ராதாகிருஷ்ணன், பெயின்டிங் வேலை பார்க்கிறார்.

சவும்யா தேவி: இதற்கு முன், லேப்-டாப் கம்ப்யூட்டரை நான் பார்த்ததே இல்லை. எப்படியிருக்கும் என்று கூட தெரியாது. அதை கையில் வாங்கிய போது, என்னால் நம்பவே முடியவில்லை. "நடப்பதெல்லாம் உண்மை தானா' என்று கிள்ளிப் பார்க்காத குறை தான். இவரது தந்தை பொன்னுசாமி, ஒர்க் ஷாப் தொழிலாளி.

கார்த்திக்: என் பெற்றோர், "இதை பயன்படுத்தி, நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும்' என்றனர். எனக்கும் அதே எண்ணம் இருக்கிறது. நிச்சயம், இந்த லேப்-டாப்பை பயன்படுத்திக் கொள்வேன். இவரது தந்தை திருப்பதி, மளிகை கடை நடத்துகிறார்.

கோபாலகிருஷ்ணன்: கல்லூரியில் படிக்கும் வசதியான மாணவர்கள் லேப்-டாப் கையில் வைத்திருப்பதை பார்த்தால் ஏக்கமாக இருக்கும். "நம்மிடம் இல்லையே' என்று வருத்தம் ஏற்படும். அப்படியிருந்த எனக்கு, உலகமே என் கைகளில் வந்துவிட்டதை போல், நான் உணர்கிறேன். இவரது தந்தை செல்வம், கட்டட தொழிலாளி. எண்ணிப் பார்த்திராத அதிசயம் ஒன்று நிகழ்ந்து விட்ட பூரிப்பில், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர், லேப்-டாப் பெற்ற மாணவ, மாணவியர். நிச்சயம் அந்த மகிழ்ச்சி, அவர்களது பெற்றோருக்கும் இருக்கும்.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: