About Me

Thursday, September 22, 2011

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி பொதுத்தேர்வு:தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு


சென்னை:""அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெறும் பொதுத்தேர்வு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படியே நடைபெறும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.அவரது அறிவிப்பு: சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, 2011-12ம் கல்வியாண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறையில் இருந்துவந்த எஸ்
.எஸ்.எல்.சி., - மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., ஆகிய பாடத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, "இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வு' என, ஒரே தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படும்.அடுத்த ஆண்டு (2012) மார்ச், ஏப்ரலில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படியே இருக்கும். பழைய பாடத்திட்டங்களின் படி தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது. இத்தேர்வை முதன் முறையாக எழுதும் தனித்தேர்வர்களும், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் படியே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

எனினும், நடப்பு செப்டம்பர், அக்டோபர் மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில், பழைய பாடத் திட்டங்களின் அடிப்படையில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், பழைய பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே, 2012 மார்ச்சில் நடைபெறும் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் தேர்வை, நேரடி தனித்தேர்வாக எழுத உள்ள மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வு எங்கு, யாரால், எப்படி நடத்தப்படும் என்ற விவரங்கள் விரைவில் தனியாக அறிவிக்கப்படும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: