Monday, September 5, 2011

தேவையா இந்த சவுக்கடி? ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் இது போன்ற செயலால் ஆசிரியர் தினத்தில் நமக்கு கிடைத்த பரிசு

ஆசிரியர்களின் போன் பேச்சு: வகுப்பறையில் படிப்பு காணாமல் போச்சு

கோவை:""ஹேய்! நேத்து நீ கட்டியிருந்த கத்திரிப்பூ கலர் சேலை சூப்பர்பா...! எங்கபா உனக்கு மட்டும் இப்புடி அமையுது? அடுத்த வாரம் நாத்தனார் நிச்சயதார்த்தம். சாரி உடுக்கலாமா...சல்வார்ல அசத்தலாமான்னு ஒரே யோசனையா இருக்கு...ஏ சனியனே ஒரு எடத்துல அமைதியா உக்கார மாட்டியா....உன்னைய இல்லடி. இந்த எருமை மாடுகள படிக்க வைக்கறதுக்குள்ள...அப்புறம்...இன்னிக்கு காலையில என்ன டிபன்...,'' இப்படி போகிறது அந்த டயலாக்.

வேலைக்குப் போகாமல், வீட்டிலே இருக்கும் இல்லத்தரசிகள் இருவர், ஏதோ "சீரியல்' இடைவெளியில் பேசிய பேச்சு இல்லை இது. இந்த தேசத்தின் நாளைய மன்னர்களை உருவாக்கும் பணியில் அதிக பங்குடைய அரசுப்பள்ளிகளில் அன்றாடம் கேட்கும் "டயலாக்'தான். பல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் முக்கிய வேலையே மொபைல் போனில் பேசுவதுதான். ஆரம்பப் பள்ளிகளில் நிலைமை இன்னும் மோசம்.

இங்கு பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களில் பலர் இன்னும் திருமணம் ஆகாதவர்கள் என்பது இன்னுமோர் முக்கிய காரணம். மொபைல் போன் டெக்னாலஜியே இவர்களுக்காக÷வே கண்டு பிடிக்கப்பட்டதைப் போல, சில இளம் ஆசிரியர்கள், காலையில் பள்ளிக்கு வந்ததிலிருந்து மாலை வரை மொபைலில் பேசுவதைப் பார்த்து, மூத்த ஆசிரியர்கள் பலரும் நொந்து கொள்கின்றனர்.இவர்களுக்கேற்ப, பள்ளிகளில் இப்போது மாணவரை மையமாகக் கொண்ட கல்வி முறை வந்து விட்டது. செயல்வழிக் கற்றல் அல்லது படைப்பாற்றல் கல்வி முறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து தங்கள் பங்களிப்பை அளித்தால் போதும். அந்தந்த படிநிலைகளில் உள்ள மாணவர்கள், தங்களுக்குரிய அட்டைகளை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து கொண்டு குழந்தைகளுக்கு உதவ வேண்டும். ஆனால், பல ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து மொபைல் போனை எடுத்தால், குழந்தைகள் "கார்டு'களை வைத்து என்ன செய்தாலும் கண்டுகொள்வதே இல்லை. ஒரு கட்டத்தில் குழந்தைகள் போடும் சத்தம், மொபைலில் பேசுவதற்கு இடையூறாக மாறும்போதுதான் "சனியன்', "எருமை மாடு' போன்ற "செல்லப் பெயர்களால்' பச்சிளங் குழந்தைகள் மீது எரிந்து விழுகின்றனர்.குறைந்த சம்பளம் பெற்றுக் கொண்டு உண்மையாக வேலை பார்க்கும் தனியார் பள்ளிகளில், வகுப்பறைக்குள் மொபைல் போன் பேசினால் வேலை காலி. அரசுப் பள்ளிகளிலும் பள்ளி நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்த தடை இருந்தும் எவரும் கண்டுகொள்வதில்லை. யார் என்ன செய்து விட முடியும் என்ற அலட்சியப் போக்குதான் காரணம். உண்மையாக பணிபுரியும் ஆசிரியர்கள் பலர் இருப்பதை மறுப்பதற்கில்லை.

மாணவர் நலனை இரண்டாம்பட்சமாக கருதும் சில ஆசிரியர்களால், ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இது போன்ற சில பொறுப்பற்ற ஆசிரியர்களின் தோள்களில்தான், தங்கள் கனவுகளை ஏழை பெற்றோர் நம்பிக்கையுடன் இறக்கி வைக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் மொபைல் போன் பயன்பாட்டை கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள கல்வி அதிகாரிகள் எதைக் குறித்தும் கவலைப்படுவதில்லை.பள்ளி ஆய்வுக்கு செல்வதை விட, தனியார் பள்ளிகள், தனியார் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அப்படியே ஆய்வுக்கு சென்றாலும், ஒரு பள்ளியில் ஆய்வு நடந்து கொண்டிருக்கும் போதே, அதிகாரியின் வருகை குறித்த தகவல் மொபைல் போன் மூலம் அடுத்த பள்ளிக்கு பறந்து விடும். இதனால் கல்வி அலுவலர்கள் நடத்தும் ஆய்வுகள் சும்மா பெயரளவில்தான் உள்ளன.

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ""அவசர தகவல் தொடர்புக்கு தலைமை ஆசிரியரின் "லேண்ட் லைன்' போனை பயன்படுத்தலாம். பல ஆசிரியர்கள் வித்தியாசமான "ரிங் டோன்களை' வைத்திருப்பதால் வகுப்பறையில் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. பள்ளி வேளையில் மொபைல் போன் பயன்படுத்தும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது; "இன்கிரிமென்ட்டை கட்' செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மட்டுமே, அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த முடியும்,'' என்றார்.

சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்து விட்டதால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித் தரத்தை உயர்த்த முடியும் என்பது வெறும் கனவாகத்தான் இருக்க முடியும். தங்களை நம்பி வகுப்பறையில் பைக்கட்டுடன் வந்து உட்கார்ந்திருக்கும் ஏழைக்குழந்தைகளின் எதிர்காலம், தங்கள் கைகளில்தான் உள்ளது என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்கின்ற நாள்தான், இந்த தேசத்தின் வல்லரசுக் கனவு நனவாகும் முதல் நாளாயிருக்கும். இன்று ஆசிரியர் தினம்!

Dinamalar - No 1 Tamil News Paper


 இது போன்ற செயல்கள் சில நடப்பதால் நமக்கு தலைகுனிவு தான்........................என்ன செய்ய ?

No comments:

DINAMALAR NEWS

4tamilmedia

பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற

Enter your email address:

Delivered by FeedBurner