Monday, September 5, 2011

"இவர் போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்' : "ஆசிரியர் தினத்தில்' அன்பு பிரவாகம்!

கூட்டைப் பிரிந்து துடிக்கும் சிறுபறவையைப் போல, தாயைப் பிரிந்து பள்ளிக்குள் முதல் அடி வைக்கும் மழலையும் பரிதவிக்கும். அன்னை சென்றதும், ஆசிரியை காலை கட்டிக் கொண்டு, அண்ணாந்து பார்த்து தேம்பும் மழலையர்களை தேற்றுவது, கடினமோ கடினம்.

வழியும் கண்ணீரை துடைக்க தெரியாமல், நெஞ்சம் அவ்வப்போது விம்மி ஏங்க, ஆசிரியை முகத்தையே பார்த்து கலங்கும் சின்னஞ்சிறு சிட்டுகளை ஆறுதல் படுத்திவிட்டால்... அதற்கு "கல்வி உலகம்' விருப்பமாகி விடும். அதன்பின் சீருடை மீதும், புத்தகப் பை மீதும் ஆசை வரும். குட்டி கால்களில் ஷூ அணிந்து, உடம்பை ஆட்டி ஆட்டி பள்ளிக்குள் நுழைந்து, அழகாய் "டாடா' காட்டும். இத்தனையும் சாத்தியமாவது ஆசிரியை காட்டும் அன்பில் தான். பரிசுத்தமான இந்த ஆசிரியர்களால் தான் உலகம் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. பள்ளிப் பருவம் தான் இளமையின் மிக நீண்டப் பருவம். இங்கே பட்டை தீட்டுவதற்காய் பல படிகளில் ஆசிரியர்கள் நிற்கின்றனர். பிரம்பை காட்டி பயமுறுத்துவதை விட, அன்பை காட்டி கண்டிப்பவரே நல்லாசிரியர்.

ஆசிரியர் தினமான இன்று "சொல்லால், செயலால் வாழ்ந்து காட்டிய ஆசிரியர்களைப் பற்றி' மாணவர்களும், "மனம்நிறைந்த மாணவர்களை' பற்றி ஆசிரியர்களும் நினைவு கூறுகின்றனர்.

முதலில் மாணவர்களை பற்றி ஆசிரியர்கள்:

* ஆர். ராஜாகோவிந்தசாமி (இயக்குனர், மன்னர் கல்லூரி, மதுரை): மதுரை தியாகராஜர் கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராக இருந்தபோது, நிறைய மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்தியுள்ளேன். ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் ஏழை மாணவர்களுக்கு மிகப்பெரிய தொகை. திரும்ப கிடைக்காதென்று தெரிந்தும், மனசு கேட்காமல் கொடுத்துவிடுவேன். மாணவர் கோவிந்தராஜூக்கு கல்லூரியில் எம்.ஏ., ஆங்கிலம் கிடைக்கவில்லை. காந்திகிராம பல்கலையில் நானே சேர்த்துவிட்டேன். தற்போது ஐ.ஏ.எஸ்., முடித்து, பயிற்சியில் இருக்கிறார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறந்த என்.எஸ்.எஸ்., வீரர். பி.காம்., முடித்தவுடன், எம்.எஸ்.டபிள்யூ., படிக்க வலியுறுத்தினேன். அவரும் நல்லநிலையில் உள்ளார். இவர்களை சந்திக்கும் போது நிஜமாகவே நான் பெருமிதம் கொள்வேன்.

*டி.ஜெயந்தி (தமிழாசிரியை, எஸ்.எம்.பி., பள்ளி, திண்டுக்கல்):ஆசிரியர்கள், மாணவர்களின் இரண்டாவது பெற்றோர். இப்படித்தான் நான் செயல்படுகிறேன். என்னிடம் பயின்றவர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். ஆஷிக் அமெரிக்காவிலும், சவுமியன் இங்கிலாந்திலும் விஞ்ஞானியாக உள்ளனர். பலர் டாக்டர்கள், இன்ஜினியர்கள்.திண்டுக்கல் வரும்போது இவர்கள், பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை சந்தித்து, பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் போது மனம் நெகிழும். இந்த பணியின் சிறப்பை அப்போது உணர்வேன்.

*அ.வான்மதி (தமிழாசிரியை, பி.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி): என்னிடம் படிக்கும் மாணவிகளில் பலருக்கு பள்ளி கட்டணம் செலுத்தியுள்ளேன். விடுதியில் தங்கியிருந்த ஏழை மாணவிக்கு, உணவு ஒத்துக்கொள்ளாததால் என் வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்தேன். தற்போது அவர் கல்லூரியில் படித்து வருகிறார். தகுந்த நேரத்தில் நான் உதவியதால் ஏழை மாணவிகள் பலர் இன்ஜினியரிங் முடித்துள்ளனர். எல்லோரும் மதிப்பெண் பெறுவதே லட்சியம். கடந்த 16 ஆண்டுகளாக தினமும் பள்ளியிலேயே இலவசமாக டியூஷன் எடுத்து வருகிறேன். 2004ல் மூன்று பேர் தமிழில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றனர். அவர்களை சந்திக்கும் போது, அவர்களின் பணிவும், நன்றியும் மெய்சிலிர்க்க வைக்கும்.

ஆசிரியர்களை பற்றி மாணவர்கள்:

*எஸ்.கனகவள்ளி (பேராசிரியர், செய்யது அம்மாள் கலை கல்லூரி, ராமநாதபுரம்): என் வாழ்வாதாரத்தை உயர்த்திய மறக்க முடியாதவர், ஆசிரியை இந்திராணி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலை பள்ளியில், ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். இரண்டு மாதங்கள் கழித்து தான் விடுதி வசதி கிடைக்கும் என்றார்கள். நாங்கள் 12 பேர் திக்கு தெரியாமல் தவித்துப்போய் நின்றிருந்தோம். எங்களை அவர் வீட்டில் தங்க வைத்து அன்பை பொழிந்தார். பள்ளி கட்டணம் செலுத்த வழியில்லாமல் கலங்கி நின்றபோதும், பணம் கொடுத்து உதவினார். பள்ளிக் காலங்களில், "அடி' ஒன்றே பிரதானமாக இருக்கும் பட்சத்தில், அரவணைத்து சென்றவர் அவர். நான் பேராசிரியராக எத்தனை உயர்ந்தாலும், இந்திராணி டீச்சர் எப்போதும் இதயம் நிறைந்தவர்.

* எஸ். செல்வம் (நூலகர், காரைக்குடி): கல்லூரி படிப்பு எட்டாக் கனியாக இருந்த காலம். வாழ்க்கையில் கஷ்டங்களை கடந்து, மதுரை மேலூர் அரசு கல்லூரியில் பி.எஸ்சி., விலங்கியல் சேர்ந்தேன். கல்லூரியில் பணம் கட்டுவதற்காகவே சமையல் உதவியாளராக சென்றேன். எனது நிலையை உணர்ந்த பேராசிரியர்கள் செல்லப்பா, தாண்டவன் நூலகத்தில் உள்ள பாடப்புத்தகங்களை நகல் எடுத்தும், சில நேரங்களில் கல்வி கட்டணம் செலுத்தியும் படிப்பிற்கு உதவி செய்தனர். இவர்களின் உதவியால் பட்டப்படிப்பு முடித்ததோடு, எம்.எட்., நூலக அறிவியல் பட்டம் பெற்றேன். நூலகரானேன். என் நெஞ்சம் என்றும் இதனை மறக்காது. அந்த ஆசிரியர்களை வணங்குகிறேன்.

*ஏ. முத்துக்குமார்(இன்ஜினியர், ராஜபாளையம்): எனது படிப்பிற்கான அனைத்து உதவிகளையும், ராஜபாளையம் முகவூர் தெற்குதெரு இந்து நாடார் ஆரம்ப பள்ளி கணித ஆசிரியர் கண்ணன் செய்தார். சென்னை அண்ணா பல்கலையில் ஈ.சி.ஈ ., படிக்க, கண்ணன் சாரின் மாணவரான யு.எஸ்.ஏ., யில் பணிபுரியும் ஒருவர், 500 டாலர் கொடுத்து உதவினார். ஆறாயிரம் ரூபாய் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்தனர். திருச்சுழி உடற்கல்வி ஆசிரியர் கதிரேசன் மூலம் ,அப்போதும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதினேன். ரூ.25 ஆயிரம் காசோலையை முதல்வர் வழங்கினார். சென்னையில் இருக்கும் கண்ணன் சாரின் தம்பியான ராமசுப்பிரமணியன், 2 ஆண்டுகளுக்கான உணவு கட்டணத்தை வழங்கினார். அதன்பயனாக இன்று நான், பெங்களூர் "சாப்ட்வேர்' நிறுவனத்தில் பணிபுரிகிறேன். மாதம் 90 ஆயிரம் சம்பளம். எனக்கு உதவிய ஆசிரியர்களை மறவேன். அவர்கள் உதவியது போன்று, நான் இன்று பல மாணவர்களுக்கு உதவி வருகிறேன்.

இன்று ஆசிரியர் தினம்:வருங்கால இந்தியாவை உருவாக்கும் உன்னதமான செயல் ஆசிரியர் பணி. ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. ஒரு குழந்தை தாய் தந்தையை விட, ஆசிரியரிடம் தான் அதிகநேரம் உள்ளது. தன்னிடம் படிக்கும் மாணவர்களை சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றி தான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி. இதனால் தான் இந்தியாவில் மாதா, பிதாவுக்கு அடுத்த இடம் ஆசிரியர்களுக்கு உள்ளது. இந்தியாவில் ஆசிரியர் தினம் மறைந்த ஜனாதிபதி சர்வபள்ளி ராதகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் தங்களுக்கு உள்ள பொறுப்பினை உணர்த்தும் விதத்திலும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதையும் இத்தினம் வலியுறுத்துகிறது. ஒரு சிறந்த ஆசிரியரின் பண்புகள் அவரிடம் படிக்கும் மாணவர்களை ஈர்ப்பது மட்டுமன்றி அவர்கள் மனதில் அப்படியே பதிகிறது. அவரே மாணவனுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ராதாகிருஷ்ணன் : சிறந்த கல்வியாளராகவும், தத்துவமேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன் 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது மாணவர்கள் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை தனியாக கொண்டாடுவதை விட அதை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் தனக்கு பெருமை என கூறினார். ஆசிரியர் தொழிலில் தனக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவர் இவ்வாறு கூறினார். இதன் காரணமாக அவரது பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கலாம் "சிறந்த ஆசிரியர் என்பவர் சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவர்களின் மனதில் நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்கிறார்.

கவுரவம்: ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று இந்தியா முழுவதும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகளை ஜனாதிபதியே வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவமாகும்.

ஆசிரியர் தினம் - ஒரு சிந்தனை:டாக்டர் பத்மா சீனிவாசன்:ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் ஜனாதிபதி எஸ்.இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனைய தினங்களுக்கே உரிய உற்சாகமும், பரபரப்பும் இதற்கு கிடையாது.

ஆம், ஆசிரியர்கள் ஆரவாரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை இனங்கண்டு கொள்ளும் ஒரே நாள் செப்டம்பர் 5ம் தேதி. அரசாங்கமும் ஒரு சம்பிரதாயமாக இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பள்ளியாசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கொடுத்து கவுரவிக்கிறது. இந்த கவுரவம் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு கிடையாது. இது ஏன் என்று புரியவில்லை. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடும் இவ்வாசிரியர்களையும் அடையாளம் கண்டு கவுரவிப்பது அரசின் கடமையல்லவா?

ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளின் பாடத்திட்டங்கள் சீரமைக்கப்பட்டு வழிமுறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இவை போதுமானதாக இல்லை. புதிய தலைமுறை மாணவர்களின் அறிவுத்திறனுக்கு தகுந்தவாறு, அதற்கும் மேம்பட்டு ஒரு ஆசிரியர் தன்னை வளர்த்துகொள்வது மிகமிக அவசியம். வளர்ந்து வரும் அறிவியல் உத்திகளினால் இது சாத்தியமே. கூட்டுப்பள்ளி மற்றும் ஆசிரியர் குழுமங்கள் அமைத்து கருத்துப்பரிமாற்றம், விவாதம், உரையாடல், கருத்தரங்கம் மூலமாக புத்தாக்கப்பயிர்சிகள் மேற்கொள்ளலாம். இவ்வாறு வழிவகை செய்து கொள்வது ஆசிரியர்களின் கடமை. அவர்களுக்கு உறுதுணையாக உதவியாக இருப்பது கல்வி நிறுவனங்களின் கடமை. ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் அனைவரும் இதனை உறுதிமொழியாக கொள்ள வேண்டும்.

பத்திரிகைகள் ஒரு நாட்டின் நான்காவது தூண் என்பதுண்டு. மக்களால் விரும்பப்படும் பத்திரிகைகள், தமிழ் மொழிப் பயிற்சியை மாணவர்களுக்கு மட்டுமன்றி, ஆசிரியர்களுக்கும் புத்தாக்க பயிற்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும். இந்நாட்டில் ஒரு வருந்ததக்க விஷயம் - ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒதுக்கி வைத்திருப்பது அவர்களின் அனுபவத்தை பயன்படுத்திகொள்வது நம் கடமையல்லவா?

ஆசிரியர்கள் மூன்று வகையானவர் - முதல் வகையினர் செய்திகளை தருபவர். இரண்டாமவர் அறிவை வளர்ப்பவர், மூன்றாமவர் ஞானத்தை அருள்பவர். அனுபவமே ஞானத்தை அருளும். நமது ஞானாசிரியர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் கற்பது முடிவற்றது என வலியுறுத்தி கூறுவார். இது அனைவருக்கும் உரியது. - ஓய்வு பெற்றவர்களுக்கும் கூட.Dinamalar - No 1 Tamil News Paper

No comments:

4tamilmedia