About Me

Wednesday, October 5, 2011

குரூப்-2 தேர்வு முடிவு 7ம் தேதி வெளியீடு -04-10-2011

சென்னை: உதவி தொழிலாளர் நல அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உட்பட, பல்வேறு துறைகளில் 1,628 குரூப்-2 பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியல், 7ம் தேதி வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து அறிவித்துள்ளார்.
இந்து அறநிலையத் துறை, வருவாய்த் துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தொழிலாளர் நலத் துறை உள்ளிட்ட, பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள, 1,628 குரூப்-2 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, 2010ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நடந்தது.இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதல், மார்ச் 28ம் தேதி வரை, நேர்முகத் தேர்வு நடந்தது. ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், கடந்த ஏப்ரல் முதல் தேதி வெளியிடப்பட்டது. இதற்கிடையே, நேரடி பணி நியமனத்தினால், தங்களது பதவி உயர்வு பாதிக்கப்படும் என்று கூறி, தலைமைச் செயலக ஊழியர்கள் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை பிறப்பித்தது. இதனால், தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் இடைக்காலத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பிறகும், தேர்வுப் பட்டியல் வெளியாகவில்லை.
நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள், தேர்வுப் பட்டியலை வெளியிடக் கோரி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் முன், திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம், 7ம் தேதிக்குள் ரிசல்ட் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து பேசினார்.
அதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதன்பின், குரூப்-2 தேர்வு முடிவுகள், 7ம் தேதி வெளியிடப்படும் என்று, செல்லமுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் www.tnpsc.gov.in முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

No comments: