About Me

Tuesday, October 18, 2011

2006 மற்றும் 2011 உள்ளாட்சி தேர்தல் - ஒரு ஒப்பீடு.

2006 மற்றும் 2011 உள்ளாட்சி தேர்தல் - இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தல் நல்லது. கட்சிகளையோ, எது ஜெயிக்கும், எது ஜெயிக்க வேண்டும், எது ஜெயிக்க கூடாது என்பது மாதிரியான கருத்துகள் இதில் இல்லை. 2006 மற்றும் 2011 உள்ளாட்சி தேர்தல் - இவை இரண்டின் வன்முறை, அன்பளிப்பு மூலம் வெற்றியை தனக்காக்குதல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் சீரிய பணி - இவற்றை மட்டும் பார்ப்போம்.

சென்ற சனிக்கிழமை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசினார். "இந்த தேர்தல் சுதந்திரமாக நடக்கும். உயர் நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. வாக்குபதிவை வீடியோ எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வெளிமாநில காவல்துறை, சி.ஆர்.பி.எப் காவல்துறை ஆகியவை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது சுதந்திரமாக செயல்பட்டனர். அதிகாரிகள் தப்பான காரியங்களுக்கு துணை போக கூடாது. அப்படி சென்றால் நீங்கள்தான் உயர்நீதி மன்றத்துக்கு வந்து நிற்க வேண்டும். உங்களை அச்சப்படுத்த இதை சொல்லவில்லை. இந்த தேர்தலில் எந்த அராஜகமும் நடக்க வாய்ப்பு இல்லை. நீதிமன்றத்தின் நேரடி கண்காப்பில் தேர்தல் நடப்பதால், மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கலாம். திருச்சியில் நடந்துள்ள இடைத் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள். சென்னை நகர மக்களும் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். " இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதில் எத்தனை சதவிதம் உண்மை உள்ளது. "காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது சுதந்திரமாக செயல்பட்டனர்" என்று காமெடியாய் பேசி இருக்கிறார். அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதை விட, "நேர்மையாக" செயல்படுவதே ஜனநாயகத்திற்கு அழகும், பெருமையும், முக்கியமும் கூட. பதிவில் இணைத்திருக்கும் படத்தை பார்த்தாலே தெரியும்.

2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை. வாக்கு போட வந்த மக்களின் மீது எத்தனை எத்தனை வன்முறை. "மக்கள் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு" என்றவர்கள் மகேசனின் தீர்ப்பை வாங்க மக்களை என்ன பாடுபடுத்துகிறார்கள். ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல "தேர்தல் சுதந்திரமாக நடக்கும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம். புகைப்படத்தில் பார்ப்பது போல - மண்டை உடைந்து போகிற சம்பவம் எல்லாம் நடக்காது"

காரணம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்பதை தாண்டி தி.மு.க ஆளுங்கட்சியாக இல்லாமல் இருப்பது. அவர்களுக்கு தெரிந்தது இரண்டு ஃபார்முலா. ஒன்று - திருமங்கலம் ஃபார்முலா, அடுத்தது - வன்முறை ஃபார்முலா. இரண்டும் இங்கே நடக்க வாய்ப்பில்லாததால் - தேர்தல் நிச்சயம் அமைதியாக, நேர்மையாக நடக்கும். காலையில் வாக்குச்சாவடிகளை வலம் வந்தபோது - மக்கள், சென்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தது போல பொறுமையாக, விருப்பத்துடன் வாக்களித்தனர். இடது பக்க படம் இன்றைக்கு எடுத்தது. மற்றவை 2006உள்ளாட்சி தேர்தலில் எடுத்தவை.(புகைப்படங்கள் : இட்லிவடை)



அ.தி.மு.க. ஜெயித்தாலும் சரி, தி.மு.க ஜெயித்தாலும் சரி - இம்மாதிரியான நேர்மையான தேர்தல் - ஜனநாயகம் ஜெயித்ததாகவே காட்டும். சில தினங்களுக்கு முன் திராவிட கழக தலைவர் கி.வீரமணி - கலைஞர் தொலைக்காட்சியில் சொன்னார். "ஆளுங்கட்சி தங்களை தானே சோதித்து கொள்வதற்கான உரைக்கல் - இம்மாதிரியான தேர்தல்" என்றார்.

உண்மை. ஆனால், நேர்மையாக தேர்தல் நடந்தால் மட்டுமே உரைகல். காப்பி அடித்து தான் பாஸ் பண்ணினால் அது வெற்றியாகி விடுமா? அப்படி தான் முறைகேடாக வெற்றி பெற்றார்கள். "சென்ற உள்ளாட்சி தேர்தல் தொடங்கி மதுரை மத்தி, திருமங்கலம், பென்னகரம், 2009 நாடாளுமன்ற தேர்தல்" என... அம்மாதிரியான வெற்றிகள் பெறுவதால் - மக்களின் அதிருப்தி கடைசிவரை - அன்றை தி.மு.க வுக்கு தெரிய வாய்ப்பில்லாமலே போய்விட்டது. தெரிந்தாலும் தங்களின் ஃபார்முலாவை தொடர்ந்து பயன்படுத்தினால் போதும் என்று நினைத்தார்கள்.

ஆனால் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், நியாயமான அதிகாரிகள் - இவர்கள் முன், அந்த ஃபார்முலா தவிடுபொடியானது. அ.தி.மு.க அம்மாதிரியான தவறுகளை செய்து வெற்ற பெற நினைக்க வேண்டாம். நினைக்கவில்லை என்பது மேலதிக தகவல். "தேர்தல் பாதை திருடர் பாதை" என்று பிதற்றும் புரட்(சி)டாளர்களுக்கு, தங்களின் நேர்மை மூலம் பதில் சொல்ல வேண்டிய கடமை கட்சிகளுக்கு, தலைமைகளுக்கு உள்ளது என்பதை மறந்துவிடாது.
thanks :
http://oosssai.blogspot.com

No comments: