About Me

Sunday, October 2, 2011

உரத்த சிந்தனை: வழி திறக்கும் கல்வி வாசல்: ஆர்.வெள்ளைச்சாமி

வட மாநிலங்களில் இருந்த கல்வித்தரத்தை விட, தமிழகத்த்தில் ஒரு காலத்தில், கல்வித்தரம் உயர்ந்து இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், உயர் கல்வியும், பள்ளிக்கல்வியும், நன்கு அமைந்திருந்தது. இரண்டு ஆண்டு பட்டப்படிப்பும், இன்டர்மீடியட் கல்வித் திட்டமும் நன்றாக இருந்தன. ஹானர்ஸ் பட்டப் படிப்பும், புத்திக்கூர்மையான மாணவர்களுக்கு
பயனுள்ளதாக இருந்தது. அப்போது, மதராஸ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் படிக்க, நுழைவுத் தேர்வு தேவையில்லை .

அன்று ஹானர்ஸ், பட்டம் பெற்ற பலர், அனேக துறைகளில் பெரும்புகழ் பெற்று விளங்கினர். மெட்ராஸ் மெட்ரிக்குலேஷன் தேர்வு, மிகச்சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக, கோல்கட்டாவில் பணி செய்து வந்த சரோஜினி நாயுடுவின் தந்தை, தன் மகளை மெட்ராஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். அன்றைய பெயரும், புகழும் பெற்ற பலர், மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றி பெற்றவர்களே.உயர் கல்வியில் மாற்றம் செய்தவர்கள், ஹானர்ஸ் இன்டர்மீடியட் நிலைகளை, அநியாயமாக மாற்றினர். பல்கலைக்கழக புகுமுக வகுப்புக்களை ஏற்படுத்தினர். ஆனால், அவற்றை கல்லூரியிலேயே நடத்தினர். உயர்பட்ட வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் பேராசிரியர்களே, புகுமுக வகுப்பிற்கும் அனுப்பப்பட்டனர். இன்டர்மீடியேட்டை போலவே செய்முறை தேர்வுகள், பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, தேர்வும் அவர்களாலேயே நடத்தப்பட்டு வந்தன. செய்முறை தேர்வு மதிப்பெண்களுக்கு, மறு திருத்தல் இல்லை. செய்முறை தேர்வில், 50க்கு 18 மார்க் எடுத்தால் தான், தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள், பேராசிரியர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தனர். அறிவியல் மாணவர்கள், அடக்க, ஒடுக்கமாக நடந்து வந்தனர். மொழி வகுப்புகளில் மாணவர்கள் நடைமுறை, அறிவியல் துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது.புகுமுக வகுப்பில் தேர்வு பெற்றவர்கள், மூன்றாண்டு அறிவியல் பட்ட வகுப்பில் நன்கு பயிற்சி பெறவும், செய்முறைத் தேர்வுகளில் தேர்வு விகிதமும் நன்கு இருந்தன. காரணம், புகுமுக செய்முறை வகுப்புகளுக்கு தேவையான அனைத்து கருவிகளும், மூன்றாண்டு பட்ட வகுப்புக்களுக்கு பயன்படுத்தப்படும் கருவிகளே.அதற்குப் பிறகு புகுமுக வகுப்புக்களை, பள்ளிக்கு அநியாயமாக கொண்டு வந்தனர். பள்ளியில் இரண்டு ஆண்டாக ஆக்கப்பட்டு, பிளஸ் 1, பிளஸ் 2 என்று பெயரிட்டனர். ஆனால், இந்த வகுப்பை நடத்தும் ஆசிரியர்கள், அதுவரை, 10வது வகுப்பு வரை பாடம் நடத்தியவர்கள். அவர்களுக்கு மூன்று மாதம் தனிப் பயிற்சி அளித்து, "இண்டக்டடு ஆசிரியர்கள்' எனப் பெயரிட்டு, வகுப்புகளை நடத்த அனுமதித்தனர்.

கல்லூரியில் இருந்து புகுமுக வகுப்பு, பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட போது, ஆரம்பத்தில் ஆசிரியர்கள் ஆதாயம் கூடும் என்று ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தனர். ஆனால், மாணவர்களின் அட்டகாசத்தால் மனம்வருந்தி, அவல நிலைக்கு ஆக்கப்பட்டனர்.

இந்நிலை, தற்போதும் உள்ளது. பல பள்ளிகளில் செய்முறை கூடங்களும், தேவையான கருவிகளும் இல்லாமலேயே காலம் கடத்துகின்றனர். ஆனாலும், மூன்று பாடங்களிலும், 50க்கு, 50 மார்க்கு போடப்பட்டு, மொத்தத்தில், 150 மார்க் போனஸ் மார்க்காக, அனைவருக்கும் வழங்கப்படுகிறது.மாணவர்களுக்கு, கட்டாயம், 50க்கு, 50 மார்க் போட வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில், ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களின் கட்டுப்பாடு, ஆசிரியர்களிடம் இல்லாத அவல நிலை உருவாகிவிட்டது. அனைவருக்கும், 50க்கு, 50 மார்க் கொடுக்கப்பட்டாலும், மாணவர்களில் பலர், எழுத்துத் தேர்வில் தவறுகின்றனர்.இதை, எந்த சங்கமும் கண்டு கொள்ளவில்லை. செய்முறைத் திறன், பள்ளியிலேயே குறைவதற்கு காரணமாக அமைந்தது. பிளஸ் 2 தேர்வில் தேறி, கல்லூரியில் அறிவியல் பாட வகுப்புகளில் சேருபவர்களுக்கு, முதலாம் ஆண்டில் அனேக கருவிகளின் பெயரும், உபயோகமும் ஆரம்பத்தில் தெரிவதில்லை. சில மாதங்களுக்குப் பிறகு தான், அவைகளைக் கண்டு தெரிந்து கொள்கின்றனர்.

இதுதான் இன்றைய, பிளஸ் 1, பிளஸ் 2 கல்வி முறையின் நிலை. இதுவே, கல்வித்தரம் குறையக் காரணமாக அமைந்து விட்டது.அயல்நாடுகளில் கல்வி பயிலும் மாணவர்கள், கல்வியில் முழு கவனம் செலுத்துகின்றனர். பலர், அவர்களே பகுதி நேர வேலை பார்த்து, பணம் கட்டிப் படிப்பதால், கல்வியின் அவசியத்தையும், வேலை, உழைப்பு முதலியனவற்றின் தன்மையையும், அதன் விளைவையும் உணர முடிகிறது.இங்கு, அப்படி இல்லை. பணப்பளு பெற்றோரிடமும், படிப்பின் பளு மட்டும் மாணவர்களிடமும் இருப்பதால், மாணவர்கள் அதிகமாகக் கவலைப்படத் தேவையில்லாமல் இருக்கிறது.

அயல்நாட்டு மாணவர்கள், தங்கள் படிப்புக்கு பாதகம் வருவதைத்தான் எதிர்த்து, போராட்டம் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, "இங்கிலாந்தின் இரும்பு பெண்மணி' என்று போற்றப்பட்ட, பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர், மூன்று தடவை இங்கிலாந்தின் பிரதமர் என்ற புகழைப் பெற்றவர். இங்கிலாந்து பணக்கஷ்டத்தில் இருந்த சமயம், கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, சிறிது குறைத்ததற்காக, அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முடிவெடுத்த பல்கலைக் கழகத்திற்குள், அவரை நுழைய மாணவர்கள் அனுமதிக்கவில்லை. டாக்டர் பட்டம் பறக்கவிடப்பட்டது. ஜனநாயகத்தின் மதிப்பை உணர்ந்து, ஒன்றும் செய்யாமல் பட்டத்தை மறந்து விட்டார் தாட்சர்.

இங்கு இப்படியா நடக்கிறது? எதையெடுத்தாலும் அரசியல் ஆக்கிரமிப்பு, மாணவர்களை தெருவிற்கு வரவழைத்து விடுகின்றனர். சம்பந்தம் இல்லாத காரணத்திற்கும், மாணவர் மறியல், போராட்டம், வேலை நிறுத்தம் போன்றவைகளில் இழுக்கப்படுகின்றனர்."எங்கள் கல்வி கூடங்கள் இயங்காமல் நின்று விட்டால், நாட்டின் முன்னேற்றமே பாதிக்கப்படுகிறது' என, ஜப்பானியர் கூறுவர். ஆனால், எது எக்கேடு கெட்டாலும், பள்ளி மாணவர்களை படிக்க விடாமல் தெருவிற்கு இழுப்பது, நம் வழக்கமாக உள்ளது.நம் மாணவர்களின் அறிவுத்திறன், அதிகமாகவே உள்ளது. இதை பல மாணவர்களின், பல சாதனைகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்களை சரியாக, தேவையான திசையில் செல்லவிடாமல் கெடுத்து, திசையை மாற்றி மாற்றுத்திசையில் கவனத்தை செலுத்த வழிவகை செய்யும் நமது அரசியல் ஆதிக்கம், அதிகமாகவே உள்ளது என்பதை அனைவரும் அறிந்தும், அறியாதது போல் இருக்கும் வரை, நம் கல்வித்தரம் கீழ் நோக்கி சரிந்து வரும். அறிவியல் வளர்ச்சியில் நாம், அனாதையாக ஆகிவிடுவோமோ என்ற அச்சம், அதிகமாகிக் கொண்டே வருகிறது.

கல்வியில் செய்யப்படும் மாற்றங்கள், உடனே பயனுள்ளதாகத் தெரியாது. ஆகவே, ஆராய்ந்தறிந்து, கல்வி மாற்றம் செய்வது மிகமிக அவசியம்.வீட்டிற்கு அஸ்திவாரம் போல, கல்விக்கு தொடக்கக்கல்வித் திட்டம் நன்றாக அமைக்க வேண்டும். அறிவு வளர்ச்சி, வயது வளர்ச்சிக்கு தக்கவாறு, படிப்படியாக அதிகரிக்கும்படி செய்ய வேண்டும். சிறு வயதிலேயே அதிகமாக கல்விச் சுமையை கொடுத்தால், கல்வி மிகவும் கசக்கும்.ஆர்வமாக படிக்கும் அளவிற்கு, கல்விமுறை அமைக்க வேண்டும். "கல்வி கற்குங்கால் கசக்கும்; ஆனால், அதன் பயன் இனிக்கும்' என்பதை உணரும்படி, கல்வி முறை அமைவது நல்லது.எல்லாருக்கும் மூளை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மூளையின் அறிவுத்திறன் எல்லாருக்கும், ஒன்று போல் இருப்பதில்லை. கல்வியின் மூலமாக, மூளையின் அறிவுத்திறனை அதிகரிக்கலாம். அதற்கு தக்க கல்வி முறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.எல்லாவற்றிலும் நேர், எதிர் தன்மைகள், சமமாகவே உள்ளன.நேர் தன்மையில் மூளை வளர்ச்சி உண்டாக்கத் தேவையான கல்வி முறையை ஆராய்ந்தறிந்து, செயல்படுத்துவது மிக மிக அவசியம்.நிகழ்காலத்தில் செய்யப்படும் சிறந்த கல்வி முறையே, எதிர்காலத்தில் நல்ல பயனை அளிக்கும். கல்விமுறை அமைப்பில், அதிகக் கவனம் மிகவும் தேவை

No comments: