About Me

Thursday, November 24, 2011

16,549 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்: மாவட்ட வாரியாக காலி இடங்கள் முழு விவரம் அரசு அறிவிப்பு

சென்னை, நவ.24-


அரசு பள்ளிக்கூடங்களில் 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு மாவட்ட வாரியான காலி இடங்களை அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 1,221 காலி இடங்களும், குறைந்தபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 126 காலி பணி இடங்களும் உள்ளன.



16,549 சிறப்பு ஆசிரியர்கள்


அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 16,549 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஓவியம், தையல், இசை, வாழ்க்கைக்கல்வி, கம்ப்ïட்டர் அப்ளிகேஷன், கட்டிட வேலை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் நியமிக்கப்பட இருக்கும் இந்த சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (அனைவருக்கும் கல்வி திட்டம்), சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு மாவட்ட அதிகாரி ஆகியோர் அடங்கி தேர்வுக்குழு தகுதி உள்ள நபர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும். பணிக்கு தேர்வுசெய்யப்படும் ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் வேலை. தினமும் காலை அல்லது மதியம் 3 மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும்.


மாவட்ட வாரியாக காலி இடங்கள்


இந்த நிலையில், சிறப்பு ஆசிரியர் பணி இடங்களுக்கு மாவட்ட வாரியான காலி இடங்களை அரசு அறிவித்துள்ளது. ஓவிய ஆசிரியர் பணிக்கு 5,253 இடங்களும், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு 5,392 இடங்களும், தையல், இசை, கட்டிட வேலை, வாழ்க்கைக்கல்வி, கம்ப்ïட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட தொழிற்கல்வி பணிக்கு 5,904 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.


ஓவிய பாடத்தைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 402 காலி இடங்களும், கோவையில் 385 இடங்களும், வேலூரில் 335 இடங்களும் உள்ளன. உடற்கல்வி பாடத்தில் அதிகபட்ச அளவாக விழுப்புரத்தில் 405 காலி இடங்களும், கோவையில் 395 இடங்களும், வேலூரில் 358 இடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.


விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம்


தொழிற்கல்வி பாடப்பிரிவில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 414 காலி இடங்களும், வேலூரில் 400 இடங்களும், கோவையில் 394 காலி இடங்களும், சேலத்தில் 336 இடங்களும் உள்ளன. வட மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களில் காலி இடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. தென்மாவட்டங்களில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது இதற்கு காரணம் ஆகும்.


மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 16,549 சிறப்பு ஆசிரியர் பணி இடங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1,221 காலி இடங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த படியாக கோவை மாவட்டத்தில் 1,164 இடங்களும், வேலூர் மாவட்டத்தில் 1,093 இடங்களும் உள்ளன.

No comments: