About Me

Thursday, November 24, 2011

தனியார் பள்ளி: ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்


தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படுவதால், அவர்களுக்கு ஆகும் கல்விச் செலவை, அரசே செலுத்தும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குழந்தைகள் அனைவரும், இச்சலுகையைப் பெறலாம்.


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இச்சட்டப்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், முதல் வகுப்பில், மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம், நலிந்த மற்றும் ஒதுக்கப்பட்ட மாணவர்களை சேர்க்கலாம்.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, குடியிருப்புக்கு ஒரு கி.மீ., சுற்றளவில் உள்ள பள்ளிகளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, வீட்டில் இருந்து மூன்று கி.மீ., சுற்றளவுக்குள் உள்ள பள்ளிகளிலும், இவர்களுக்கு கட்டாய மற்றும் இலவசக் கல்வி வழங்கியாக வேண்டும்.

எப்படி வகைப்படுத்தப்படுகிறது?
* ஒதுக்கப்பட்ட குழந்தைகள் என்றால், அனாதைகள், எதிர்ப்பு சக்தி குறைந்த, வைரசால் தாக்கப்பட்டவர்கள், அரவாணிகள் அல்லது துப்புரவு பணியாளரின் குழந்தைகள் ஆவர்.
* நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் என்றால், அவர்களது பெற்றோர் அல்லது காப்பாளரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும், 25 சதவீத குழந்தைகளுக்கு ஆகும் செலவை, அரசே பள்ளிகளுக்கு செலுத்த முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகளில், ஒரு குழந்தைக்கு செலவிடும் கல்வித் தொகை அல்லது தமிழக அரசு நியமித்துள்ள கட்டண நிர்ணயக் கமிட்டி நிர்ணயிக்கும் தொகை, இதில் எது குறைவோ, அந்த தொகையை, தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நமது சிறப்பு நிருபர்-

thanks :

No comments: