Monday, November 14, 2011

கிரமா நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும் லேப்-டாப்

சென்னை, நவ.15 - சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய கலெக்டர்கள் மாநாடு நேற்று நிறைவடைந்தது. 43 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். மாற்று திறனாளிகளுக்கு 18 வயது முதலே ஓய்வூதியம், மீனவர் நலன் வேளாண்மைக்கு முக்கியத்துவம் போன்ற திட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புக்களை முதல்வர் வெளியிட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட
கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கு கொள்ளும் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னை கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10 வது மாடியில் மாநாட்டை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அவர் தொடக்க உரையாற்றுகையில், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார். பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.  
நேற்று 2 வது நாளாக மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக காலை 10 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு வருகை தந்தார். நாமக்கல் கவிஞர் மாளிகையின் நுழைவு வாயிலில் நின்று தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். 10 வது மாடிக்கு சென்ற அவரை ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகிய மூத்த அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 32 மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், வி.ஜி.பி.ராமானுஜம் மற்றும் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கலெக்டர்கள் மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 43 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் தனது நிறைவுரையில் குறிப்பிட்டதாவது:-
2 நாட்களாக உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நீங்களும் பல கருத்துக்களை சொன்னீர்கள். உங்களது பணிச் சூழல் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்கின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
1991-ம் ஆண்டில் இருந்து நிர்வாகம் எப்படி நடத்தப்பட்டு வருகிறது என்பதை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதிகாரிகள் பாரபட்சமின்மை, மனசாட்சி, இரக்கம் ஆகிய 3 நற்பண்புகளுடன் செயல்பட வேண்டும். பல மாவட்ட ஆட்சியாளர்கள் மாவட்டங்களில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். மாவட்ட ஆட்சியாளர்கள் தான் நிர்வாகத்தின் உறுதித்தன்மை வாய்ந்த வலுவான இரும்பு போன்ற அடிப்படையாக திகழ்கின்றனர்.
ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அது சமூகமான முறையில் நிகழ அதிகாரிகளின் செயல்பாடுகள்தான் முக்கிய காரணம் ஆகும். சில வேளைகளில் எதிர்பாராத வகையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டது உண்டு. இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாதவாறு எதிர்காலத்தில் செயல்பட வேண்டும். நல்லாட்சிக்கு இலக்கணம் எது என்றால் வலுவான கட்டமைப்புதான். மாவட்ட ஆட்சித் தலைவர்களின் செயல்பாட்டின் மீது தான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். இப்போது எல்லாம் மாவட்டத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமானது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியது நமது கடைமை ஆகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வேளாண்மைக்கு எனது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விவசாயத்திற்கு இடுபொருள் உரிய நேரத்தில் கிடைத்தாக வேண்டும். மழைக்காலம் முடிந்த பிறகு உரத்தை அளித்தால் என்ன பயன்.  
அடுத்தபடியாக குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோர்களின் நலனிலும் அரசு அக்கறை செலுத்தி வருகிறது. பள்ளிக்கூடங்களின் கல்வித்தரம், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் போன்றவற்றில் மாவட்ட ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். உணவு தானியங்கள் சேதம் அடைய இடமளிக்கக் கூடாது. அதைப்போல் திருடு போகவும், வேறு பயன்பாட்டுக்கு அதை திருப்பி விடவும் இடம் கொடுக்கக் கூடாது.
கடலோர மாவட்ட கலெக்டர்கள் மீன் வளத் துறையில் கவனம் செலுத்த வேண்டும். சென்னை மற்றும் அண்டை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாடு தடுப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மாதந்தோறும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்த உத்தேசித்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா 43 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் டோக்கன் முறை மூலம் தற்போது ஒரு நாள் மட்டுமே கடலில் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இனி நடுக்கடலில் பல நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஈரோட்டில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் அருகே மேம்பாலம் கட்டப்படும். காரமடை வழியாக ஊட்டிக்கு புதிய பாதை கண்டறியப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை நெரிசல் தவிர்ப்பதற்காக லாரிகள் நிறுத்த தனியிடம் அமைக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மீன் வளத் தொழில் நுட்ட மையம் உருவாக்கப்படும். இது நாகப்பட்டினத்தில் அமையவிருக்கிற மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும். பொன்னேரியில் உள்ள வருவாய்த்துறை இரண்டாக பிரிக்கப்படுகிறது. இந்த புதிய பிரிவு அம்பத்தூர், மாதவரம் தாலுக்காக்களில் தொடங்கப்படுகிறது. நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் தலைமை இடமாக செயல்படும்.
திருவண்ணாமலையில் மகா தீபம் திருவிழாவிற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் நிதியுதவி 50 சதவீதமாக உயர்த்தப்படும். கடலில் மீன் பிடிக்க செல்லும் நமது மீனவர்கள் அடிக்கடி காணாமல் போவதாக புகார்கள் வருகின்றன. அவர்களை தேடி கண்டுபிடித்து மீட்பதற்காக வாடகை ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடைபெறும். இந்த மீட்பு பணியில் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு அதிவேக நவீன படகுகள் வழங்கப்படும். தூத்துக்குடி நகரத்திற்கு கூடுதலாக குடிநீர் சப்ளை செய்யப்படும். தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். தூத்துக்குடியில் உள்ள விவிடி சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும்.
பிளாஸ்டிக் சாலை அமைப்பதற்காக பிளாஸ்டிக் கழிவுகளை சேர்ப்பதற்கான பயிற்சி சுய உதவிகுழுக்களுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வருகை பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும். புதிய அரசு விடுதிகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். கிருஷ்ணகிரியில் உள்ள தோட்டக்கலை விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் அங்கு தேவைக்கு அதிகமாக உள்ள மாம்பழங்களை வாங்கி மேங்கோ மில்க் ஷேக் தயாரித்து சத்துணவு மையங்களுக்கு வழங்குவது பற்றி ஆவின் நிறுவனம் பரிசீலிக்கும். மேட்டூர் அணை ஜனவரி மாதம் மூடப்பட்டதும் அணை மற்றும் கால்வாய்கள் பராமரிப்பு பணி தொடங்கும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்து ஏற்படும் போது அவர்கள் அங்கிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள். இதைத் தவிர்க்க திருவள்ளூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பகுதி தரம் உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளியின் ஓய்வூதியம் பெறும் வயது 45-ல் இருந்து 18 ஆக குறைக்கப்படும். ஒவ்வொறு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சட்ட உதவிக்காக உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி, பிரிண்டரும் வழங்கப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகள் உள்பட 43 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.

No comments:

4tamilmedia