About Me

Monday, November 28, 2011

மாணவர்களின் இல்லம் நோக்கி பள்ளிகள் திட்டம் ராமநாதபுரத்தில் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் சிக்காமல், கல்வியில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில், "மாணவர்களின் இல்லம் நோக்கி" என்ற புது திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, கிராமம்தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுவை அதிகாரிகள் நியமித்து வருகின்றனர்.

பல ஊர்களில் மாணவர்களிடையே ஏற்படும் லேசான மோதல், விஸ்வரூபமாகி, கிராம மக்கள் இரு பிரிவினராக மோதிக் கொள்ளும் சூழல் உருவாகி விடுகிறது. மாணவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு, அவர்களது கல்வித்திறன் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையை தவிர்க்க, ராமநாதபுரம் கல்வி அதிகாரிகள், புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிகளை சுற்றியுள்ள கிராமங்களில் கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கிராமங்களுக்கு சென்று, பொது இடத்தில் கூட்டம் நடத்துகின்றனர். மாணவர்களை எப்படி கண்காணிக்க வேண்டும், அவர்களது தேவையை பூர்த்தி செய்யும் வழி, லேசான பிரச்னை ஏற்படும்போதே கண்டித்து திருத்துவது, தேர்ச்சி விகிதம், தேர்வில் வெற்றி பெறுவது என்பது உட்பட பல ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனரா, அவர்களது ஒழுங்கீனம், பாடத்தில் அக்கறை இல்லாதது ஆகியவற்றை கண்காணிக்க பெற்றோர், கிராம பெரியவர்கள் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழு நியமித்துள்ளோம். இக்குழுவினருக்கு பள்ளியிலிருந்து அவ்வப்போது மாணவர்களின் நிலை குறித்து, குழு மூலம் பெற்றோரிடம் தெரிவிக்கப்படும். இதனால், மாணவர்களின் கல்வி திறன் மேம்பட்டு, நூறு சத வெற்றி பெற வாய்ப்புண்டு, என்றார்.

No comments: